தனிப்பாடல் திரட்டுவில் இடம் பெற்றிருக்கும் பழம் பாடல் ஒன்றில், சிவன் கோயில்கள் 270 என்று தொகுத்துக் கூறி, அவை எந்தெந்த நாடுகளில் உள்ளன என்று விளக்கப்பட்டிருக்கிறது. அப்பாடல்;
“துங்கவட கயிலாய முதலாம் ஐந்து
துளுவொன்று தொண்டை வளநாட் டெண்ணான்கு
தங்குநடு நாட்டி ருபத்தி ரண்டு பொன்னித்
தலநூற்றுத் தொண்ணூறு மலைநாட் டொன்று
கொங்கேழு சிங்களத்தில் இரண்டு வையைக்
குளிர் தமிழ் நாட்டி ரேழுமெலாஞ் சூழச்
செங்கையார் தலம் இருநூற் றெழுபா நான்கில்
தென்பாகம் கயிலாயந் திருக் குற்றாலம்”
இப்பாடலில் கூறப்பட்டுள்ளவாறு, வடநாட்டில் கயிலாயம் முதல் 5; துளு நாட்டில் 1, தொண்டை நாட்டில் 32, நடு நாட்டில் 22, பொன்னி பாயும் சோழநாட்டில் 190, மலைநாட்டில் 1, கொங்கு நாட்டில் 7, சிங்களத்தில் 2, வையை பாயும் பாண்டியனின் தமிழ் நாட்டில் 7 என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் தென் கயிலாயம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது குற்றாலம் ஆகும்.