ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், திருப்பதியில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருக்காளத்தி, காளஹஸ்தீஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்குகிறது.
சீ-சிலந்தி; காளத்தி என்பது காளம்-பாம்பு; அத்தி-யானை. அதாவது, சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முத்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது.
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்றாக இருக்கும் இத்தலத்தில், இலிங்கமாகக் காட்சியளிக்கும் சிவனின் திருமேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.
இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இக்கோயிலில் ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகாரப் பூசைகள் செய்யப்படுவதால், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இத்தலம் கண்ணப்பர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
இக் கோயில் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது.