இந்த உலகமும் பேரண்டமும், அடிப்படையில் ஐந்து வகை பொருள்களினால் ஆனது. மண்ணும் அதில் மறைந்திருக்கும் தாதுப்பொருட்களும் ஏராளம். இது திடப் பொருளாகும். உயிரினங்களின் உடலாகிய எலும்பு, சதை, நரம்புகளும் இந்தத் திடப்பொருளினால் ஆனது. நீரின்றி அமையாது உலகு என்றார் ஔவை பிராட்டி. திரவ நிலை கொண்டப் பொருட்களும் இந்த அண்டத்தில் பங்குபெறும் மிக முக்கியமான கூறு. தட்பவெட்பம் எனப்படும் சூடு. வெப்பம் இல்லாத நிலையைக் குளிர்ச்சி என்கிறோம். இந்த வெப்பம் எங்கும் நிறைந்திருக்கிறது. காண முடியாத முக்கியமான அம்சம் இந்தக் காற்று. இதை உணர முடியும். ஆனால், பார்க்க முடியாது. உயிரினங்களின் வாழ்க்கைக்கு முக்கியக் காரணி. எங்கும் பரவியிருக்கும் வெற்றிடம் அல்லது ஆகாயம் அல்லது பரவெளி. இதன் முதலும் முடிவும் மனிதனால் இன்னும் அறியமுடியாத ஒன்று.
இந்த ஐந்து மூலக் கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து கலவையாக, இந்தப் பேரண்டத்தை இயக்கி வருகிறது. இவை யாவும் தங்கள் நிலைப்பாட்டில் சரியாக இருந்தால்தான் இந்த உலகம் உய்யும். இந்த உலகம் உய்தால்தான் இறைவனை அறிந்து அவனைச் சரணடைய முடியும்.
இந்த ஐந்து மூலக்கூறுகளையும், ஒவ்வொரு எழுத்தினால் நாம் குறிப்போமேயானால், மண்ணை ‘ந’ என்ற எழுத்தினாலும், தண்ணீரை ‘ம’ என்ற எழுத்தினாலும், வெப்பமாகிய அக்னியை ‘சி’ என்ற எழுத்தினாலும், காற்றை ‘வ’ என்ற எழுத்தினாலும், ஆகாயப் பரவெளியை ‘ய’ என்ற எழுத்தினாலும் குறித்து, இதை இணைத்தால் வருவது நமசிவாய. இந்த ’நமசிவாய’ வாழ்ந்தால்தான் நாம் இறைவனை உணர்ந்து அவனை அடையமுடியும்.
ஆகவே நமசிவாய வாழ்க. நாதன் (தலைவன்) தாள் (திருவடி) வாழ்க.