இந்து சமயத் திருமணத்தில் மணமகன், மணமகளுக்குத் தாலி அணிவித்து, அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
பண்டையக் காலத்தில், தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றை, மணமகன் திருமண நாளன்று மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலி என்பதற்கு, தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்று பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால், அதற்கு மாற்றாக, நிரந்தரமாக இருக்க, உலோகத்தால் ஆன தாலியைச் செய்து பயன்படுத்த் தொடங்கினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி என்று மாற்றி விட்டனர்.
சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற நூலில், பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற நிலையில் தாலி என்ற பெயர் பயன்பாட்டிற்கு வந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது
இந்தத் தாலியைக் கழுத்தில் தொங்கவிடுவதற்கு ஏற்றதாக, மாங்கல்யச் சரடு எனும் தாலிக்கயிறு, ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும், கீழ்க்காணும் ஒவ்வொரு நற்குணங்களைக் கொண்டது என்கின்றனர்.
1. தெய்வீகக் குணம்
2. தூய்மைக் குணம்
3. தொண்டுள்ளம்
4. தன்னடக்கம்
5. ஆற்றல்
6. விவேகம்
7. உண்மை
8. உள்ளதை உள்ளபடிப் புரிந்து கொள்ளுதல்
9. மேன்மை
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு எனும் தாலிக்கயிறு அணிவிக்கப்படுகிறது.