ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம்தான். உலகத்தைத் துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம்தான். முற்றும் துறந்தவனையே “கோவணாண்டி” என்று சொல்வர். முருகன் தாய் தந்தையரிடம் கோபம் கொண்டு பழநி வந்த போது அவர் கோவணத்துடன்தான் இருந்திருந்தார். முனிவர்கள், ரிஷிகள் எனப் பலரும் கோவணத்துடந்தேன் இருந்தனர்.
கோவணத்துடன் இருப்பது குறித்து, ஆதி சங்கரர் ’கௌபீன பஞ்சகம்’ என்கிற ஐந்து ஸ்லோகங்களைச் சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு ஸ்லோகம், தமிழில் அதன் விளக்கம் இங்கே:
சுலோகம் 1
“வேதாந்த வாக்யேஷு சதா ரமந்தோ
பிஷான்ன மாத்ரேண த்ரிஷ்டிமந்த:
விசோகமந்த: கரணே சரந்த:
கௌபீனவந்த: கலு பாக்கியவந்த:”
பொருள்
வேறெந்த சிந்தனையும் இல்லையே, வேதாந்த, சித்தாந்த வனத்தில் சஞ்சரிப்பவன். பசி நேரத்தில் கைநீட்டி எது கையிலுள்ள திருவோட்டிலோ அல்லது நீட்டிய கையில் விழுகிறதோ, அதுவே அன்றைய உடலைக் காக்கும் உணவு என்ற திருப்தி அடைந்தவன். சுகம் துக்கம் எதுவுமே சமமாக அனுபவிப்பதால் எப்போதும் ஆனந்தமானவன், தானந்தன். வெளி உலகைக் கவனிக்க நேரமில்லாமல் தனது ஆன்ம உலகிலே உள்ளேயே உலவுபவன், ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான். ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்கச் சுகமாக வாழ்பவன்.
சுலோகம் 2
“மூலம் தரோ கேவலம் ஆஷ்ரயந்த:
பாணித்வயம் போக்தும மந்த்ரயந்த:
கந்தாமபி ஸ்த்ரீமிவ குத்சயந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:.”
பொருள்
ஆஹா, இந்த மரத்தடி வேர் ஆசனம் எவ்வளவு சுகம். மணம் கமழ் நிழல். கிழங்குகள், வேர்கள், இலைகள், ரெண்டு கவளம் எந்தச் சோறு கிடைத்ததோ, அது கை நிரம்பி விட்டதே. இனி வயிறை நிரப்பி விடுமே. கிழிசலை ஓட்டுப்போட்ட துணிதான் இந்த உலகஅ செல்வம் எல்லாம். உடுத்த கோவணம் இணையற்ற செல்வம் என்ற நினைப்பு சுவர்கத்துக்கேத் தூக்கி சென்று விடுகிறது. ஏ, கோவணதாரி, நீதானடா பாக்யவான். ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்கச் சுகமாக வாழ்பவன்.
சுலோகம் 3
“ஸ்வானந்த பாவே பரிதுஷ்டி மந்த:
சுஷாந்த சர்வேந்த்ரிய வ்ருத்தி மந்த:
அஹர்ணிசம் ப்ரம்ம சுகே ரமந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:”
பொருள்
எண்ணமே எங்கே ஓடுகிறாய், வெளியே போ, திரும்பி உள்ளே, அங்கே இல்லாத சுகமா வெளியே? என்று எண்ணங்கள் மற்றும் ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டவன், ஜிதேந்த்ரியன், புலனடக்கிய சக்ரவர்த்தி, இரவு பகல் என்று இல்லாமல் சதா சர்வக் காலமும் பிரமத்தில் ஐக்கியமாகி சுகிப்பவன், ஏ, கோவணதாரி, நீதானடா பாக்யவான். ஜிலுஜிலு வென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்கச் சுகமாக வாழ்பவன்.
சுலோகம் 4
“தேஹாதி பாவம் பரிவர்தயந்த:
ஸ்வாத்மனா ஆத்மன்யவலோக யந்த:
நாந்தன மத்யம் ந பஹி: ஸ்மரந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:”
பொருள்
பொம்மையைப் போல் ஆர்வமாக உன் உடம்பையே, அதன் மாறுதல்களை வேடிக்கை பார்க்கும் வினோத மனிதா, இந்த உடம்பு நம்மைக் கேட்காமலேயே எப்படியெல்லாம் மாறுதல்களை அடைகிறது பார்த்தாயா? இந்த நரை, திரை, மூப்பு, தலை முடியைக் காணோம், சில பல் எப்போது விழுந்தது, ஏன் கொஞ்சம் காது கேட்கவில்லை. சரியாக நடக்க எதற்கு ஒரு மூங்கில் கம்பு, எப்போது என் முதுகு தானாகவே வளைந்தது? தெரியவில்லையே. ஆசை மட்டும் அப்படியே இருக்கிறதே.! தேகமில்லாத ஆத்மாவாக உன்னைக் கண்டு கொண்டவனே, முடிவோ, நடுவோ, எதுவுமே இலட்சியமில்லாத பிரபோ, ஏ கோவணதாரியே, நீ தானடா பாக்யசாலி. ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி
குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.
சுலோகம் 5
“ப்ரம்மாக்ஷரம் பாவனமுச்சரந்தோ
ப்ரம்மாஹமஸ்மீதி விபாவயந்த:
பிக்ஷாஷனோ திக்ஷு பரிப்ரமயந்த:
கௌபீனவந்தா கலு பாக்கியவந்த:”
பொருள்
சர்வம் பிரம்மமயம் என்று ஆடிப் பாடுபவனே, நானேதானடா அந்த ப்ரம்மம்; என்ற நினைப்பில் களிப்பவனே, எங்கே, எதற்கு, ஏன் என்றேத் தெரியாமல், கால் போனபடி போகும் சுதந்திரமானவனே, கிடைப்பதை உண்டு மகிழ்பவனே, ஏ கோவணதாரியே, நீ தானடா பாக்யசாலி. ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.