இந்து சமய வழிபாட்டில் வீடு, கோயில்கள் என்று அனைத்திலும் ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது. இது ஏன் என்று தெரியுமா?
ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்து விடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநலமான குணங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம் வீச வழி செய்வதேத் தெய்வீகச் செயலாகும்.
ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்து விடுகின்றது. அதன் மணத்தை நுகர்ந்தவர், அதைத் தம் நினைவிலே வைத்திருப்பர். அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும் புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல தகவல்களைக் கூறுவதும், நல்ல தகவல்களை அவர்களுக்குச் செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும். இது போன்ற குணத்தைத்தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இது போன்ற குணத்தை உடையவர்கள்தான் இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதனை அடிப்படையாகக் கொண்டே, வழிபாட்டில் ஊதுபத்தி முக்கிய இடம் பெறுகிறது.