நம் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளில், சில செயல்பாடுகளைப் பெரியோர்கள் செய்து வந்ததைக் காரணம் தெரியாமலேயேத் தொடர்ந்து நாமும் செய்து கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக, சாப்பிடும் போது பெரியவர்கள் செய்யும் சில செயல்களுக்கான காரணமென்ன? என்று தெரிந்து கொள்ளலாம்.
தலை வாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?
சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான்.
வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?
அந்தக் காலத்தில் பெரும்பான்மையான வீடுகள் மண் தரையைக் கொண்டிருந்தது. மண் தரையில் இலை போட்டுச் சாப்பிடும் போது, இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் வந்துவிடுவதைத் தடுக்க, இலையைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளித்தனர்.
சாப்பிடுவதற்கு முன்பு, காகத்திற்கு உணவு வைத்து விட்டுப் பின்னர் சாப்பிடுவது ஏன்?
நாம் சமைத்த உணவில் நம்மை அறியாமல், நஞ்சு (விசம்) ஏதும் கலந்திருக்கிறதா? என்பதைக் கண்டறியவே இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.