சோழ நாட்டின் காவிரிக் கரையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்று, திருக்கடையூர். அபிராமி வல்லி அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருக்கடையூரில் வாழ்ந்து வந்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசை பாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று, தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்த பின், ஸ்ரீ அமுத கடேஷ்வரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளேச் செனற பொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூடக் கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில், அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்த்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. ஆகையால் திரும்பி வரும்போது, பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், “பட்டரே! இன்று என்ன திதி?” என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையேத் தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கித் தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.
"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே”
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் தவழ விட்டாள். அந்தத் தாடங்கம் வானில் மிதந்து பல கோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
அதன் பிறகு, மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அவை;
1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம்.
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும்.
26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும்.
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.
40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46. நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள்.
48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன் தீரும்.
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம்.
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.
60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும்.
65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞர் / புலவர் / எழுத்தாளராகலாம்.
67. பகை வர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும்.
73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களை யும் அடைவார்கள்.
79. அபிராமி அருள் பெறுவார்கள்.
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.
81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும்.
84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ் பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள் பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம்.
97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.