இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறமாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையிலேயேப் பெண்களுக்குத் திருமணத்தின் அடையாளமாகக் கருதப்படும் தாலிக்கயிறு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின் போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனிடம் அவளை ஒப்படைத்தனர்.
அதற்குப் பின்பு, நாளடைவில் “தாலம்” என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.
பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற முறையில் தாலி என்ற பெயர் பயன்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.
மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் தாலிக்கயிறானது மாங்கல்யச் சரடு எனப்படுகிறது. இந்த மாங்கல்யச் சரடு ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
1. தெய்வீகக் குணம்
2. தூய்மைக் குணம்
3. மேன்மை,தொண்டு
4. தன்னடக்கம்
5. ஆற்றல்
6. விவேகம்
7. உண்மை
8. உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
9. மேன்மை
மேற்காணும் ஒன்பது குணங்களும், இல்லறம் ஏற்கும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணிவிக்கப்படுகிறது.