சைவ சித்தாந்தம் கூறும் முக்திகள்
சைவ சித்தாந்தம் முக்தியினை நான்கு வகைகளாக விளக்குகின்றன. அவை;
1. பதமுக்தி
2. அபரமுக்தி
3. சீவன் முக்தி
4. பரமுக்தி
பதமுக்தி
வித்தியாதத்துவங்களிலுள்ள உலகினை அடைதல், சீகண்ட உருத்திரர், குணருத்திரர் உலகத்தை அடைதல்
அபரமுக்தி
சுத்த தத்துவங்களிலுள்ள உலகினை அடைதல். அனுசதாசிவர், மந்திரமகேசுரர், அனந்ததேவர் என்பவரது உலகங்களை அடைந்து நிற்றல் அபரமுக்தி.
பதமுக்தி, அபரமுக்திகள் முடிந்த முடிபல்ல. அபரமுக்தித் தானங்களும், பதமுக்தித் தானங்களும் பலவாதலின் அத்தானங்களில் அடையும் முக்தி நிலைகளும் பலவாக அமைகின்றன. அவை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்று நான்கு வகைப்பட்டிருக்கும்.
சாலோகம்
ஒருவர் இல்லத்தில் பணிபுரியும் அகம்படிமைத் தொண்டர் அவ்வில்லம் முழுவதும் தடையறச் செல்லும் உரிமை பெற்றிருப்பது போல அபரமுக்தி, பரமுக்தி உலகங்களில் சென்று எங்கும் தடையற இயங்கும் உரிமையைப் பெற்றிருத்தல் சாலோகம் என்னும் முக்தி நிலையாம். இவ்வுரிமையைத் தருவது சரியைத் தொண்டு. இதுபற்றியே அது தாசமார்க்கம் (அடிமை நெறி) என வழங்கப்படுகிறது.
சாரூபம்
முற்கூறிய புவனபதிகளை அருகணைந்து நிற்றலோடு அமையாது அவர்களோடு ஒத்த உருவம், பெயர் முதலியவற்றை உடையராய்த் தோழர் போல் நெருங்கி அளவளாவும் உரிமையைப் பெற்றிருத்தலே சாரூபம் என்னும் முக்தி நிலையாம். அவ்வுரிமையைத் தருவது யோக வழிபாடு ஆகும். அதனால் அது சக மார்க்கம் (தோழமை நெறி) எனப்படுகிறது.
சாயுச்சியம்
அவ்வப்புவன பதிகளோடு ஒத்த உருவம் முதலியவற்றைப் பெற்றிருத்தலோடு அமையாது அவரது அதிகாரத்தைப் பெற்றிருத்தல் அபர சாயுச்சியம், பத சாயுச்சியங்களாகும். சாயுச்சியத்தைத் தருவது ஞானமே. எனவே அது சன்மார்க்கம் (நன்னெறி) எனப்படுகிறது.
சீவன்முக்தி
பரமுக்தியாகிய போரின் நிலையை இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடியுள்ள போது பெறுதல் சீவன் முக்தி எனப்படும்.
பரமுக்தி
உடம்பு நீங்கிய பின் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து பேரின்பம் துய்க்கும் நிலை பரமுக்தி எனப்படும்.
- டாக்டர். கோமதி சூரியமூர்த்தி எழுதிய “சைவசமய சாத்திரக் கட்டுரைகள் (தொகுதி3)” நூலிலிருந்து
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.