இந்து சமயத்தினர் நமஸ்தே (அல்லது நமஸ்கார்) என்று வணக்கம் தெரிவிக்கின்றனர். இரண்டு கைகளையும் ஒன்றாகக் நெஞ்சில் குவித்து, தலையை சற்றுத் தாழ்த்தி “நமஸ்தே” என்று கூறுவர். அது வாய்வழி வாழ்த்தாகவும் சைகையாகவும், ஒரு மந்திரமாகவும், முத்திரையாகவும் இருக்கிறது. வணங்குவது போல் வைத்திருக்கும் அந்தக் கைகளின் நிலைக்கு அஞ்சலி என்று பெயர். ‘அஞ்ச்’ என்பதின் வேர்ச்சொல்லான அது “அணிவிப்பது, கௌரவிப்பது அல்லது கொண்டாடுவது” என்று பொருள்படும். நமது சைவ சமூகத்தில் நாமும் குவிந்த கரங்களால் “வணக்கம்,” “நமசிவாய” அல்லது “ஓம் சிவாய” என்கிறோம். அவற்றின் பொருள் ஒன்றுதான்.
இரண்டு கைகளையும் ஒன்றாகக் குவிப்பது இரண்டு பிரபஞ்சங்களும் ஒன்றாவதைக் குறிக்கிறது. ஆவியையும் பொருளையும் ஒன்றுபடுத்துவது அல்லது சீவான்மா பரமாத்மாவை சந்திப்பதாகும். வலது கை உயர் இயல்பை அல்லது நம்முள் இருக்கும் தெய்வீக இயல்பைக் குறிக்கிறது என்றும் இடது கை கீழான உலக இயல்பைக் குறிக்கிறது என்றும் கூறுவர். சமஸ்கிருதத்தில் நமஸ் என்றால் “குனிதல், கீழ்ப்பணிதல், பக்தியுடன் வணக்கம் செலுத்துதல்” என்று பொருள்படும். அது நாம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது. அதற்கு குனிதல், கீழ்குனிதல், பணிவுடன் தஞ்சமடைந்து அமைதியாய் இருத்தல்” என்று பொருள். தே என்றால் “உம்மிடம்.” எனவே நமஸ்தே என்றால் “நான் உம்மைப் பணிகிறோம்” என்று அர்த்தம். நமஸ்தே என்று வணக்கம் கூறுதல் எல்லா இடத்திலும் நாம் சந்திக்கும் எல்லா மனிதர்களிடமும் கடவுளைக் காணமுடியும் என்ற கருத்தினை நமக்கு மெல்ல நினைவூட்டுகிறது. அதாவது, “நம்மிருவரிடத்தும் தெய்வத்தைக் காண்கிறேன் என்பதால் நான் பணிந்து வணங்குகிறேன். இந்தச் சின்னச் சந்திப்பில் கூட புனிதத்துவத்தை நான் ஏற்கிறேன். நம்முள்ளிருக்கும் ஆன்மீகத்திலிருந்து மனிதனின் சாதாரண லெளகீகத்தை என்னால் பிரிக்க இயலவில்லை,” என்று அமைதியாகக் கூறுவதாகும்.
இந்த அற்புதமான பழங்கால வழக்கம் நமது இதயத்தைத் திறந்து ஒருவரிடமுள்ள நற்பண்புகளைக் காணச் சொல்கிறது. அவரை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த நாம் நினைக்கிறோம். கடவுளாக மதிக்கும் எவரையும் நாம் தவறாக மீறி நடத்தவோ அல்லது பகைக்கவோ நமக்கு மிகக் கடினம். பிரியாவிடையின் போதும் நாம் நமஸ்தே எனக் கூறலாம். இன்னும் மேலான வாழ்த்துமுறை இரு கைவிரல்களையும் நெற்றிக்கண் இருக்கும் புருவ மத்தியில் வைத்து வணங்குவதாகும். மூன்றாவது வகையான நமஸ்தே தலைக்கு மேலே கைகளை உயர்த்திச் செய்வதாகும். இத்தகைய வணக்கம் கடவுளுக்கும் புனிதமிக்க சற்குருக்களுக்கு மட்டுமே செய்யக்கூடியது.