தமிழகக் கோயில்களின் தெப்பக்குளங்களில் மிகப் பெரியத் தெப்பக்குளங்களாக ஏழு தெப்பக்குளங்கள் இருக்கின்றன. அவை;
1. அரித்ரா நதி
தமிழ்நாட்டில் மன்னார்குடி நகரில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயிலான இராசகோபாலசாமி கோயில் 16 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் (வெளி முற்றத்தில்), 24 கர்ப்பக்கிரகம், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனிதத் தீர்த்தங்களை உள்ளடக்கியது. இந்தக் கோயிலின் வளாகம் குலோத்துங்கச் சோழரால் கட்டப்பட்டது. பின்னர் சோழர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலின் மழை நீர் சேகரிக்கும் அமைப்பாக, கோயிலின் தெப்பக்குளம் அரித்ரா நதி உள்ளது. 23 ஏக்கர் (9.3 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ள இத்தெப்பக்குளமேத் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோயில் தெப்பக்குளமாகும்.
2. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
திருமலை நாயக்கர் மன்னர், தனது பெயரிலான திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்குத் தேவையான செங்கற்களைத் தயாரிப்பதற்காக மண்ணைத் தோண்டிய இடம் மதுரை மாநகரில் வண்டியூர் எனுமிடத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் இந்தக் குழியே அருகிலுள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமாக மாற்றம் பெற்றது. இத்தெப்பக்குளம் 16.2 ஏக்கர் (6.6 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்திருக்கிறது.
3. கமலாலயம்
திருவாரூரில் உள்ள பழங்கால ஸ்ரீதியாகராஜா கோயில் சிவனின் சோமசுகந்த அம்சத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் தேர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தேராகும். இக்கோயிலின் தெப்பக்குளமான கமலாலயம் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
4. கபாலீசுவரர் தெப்பக்குளம்
சென்னை மாநகரின் மயிலாப்பூர் பகுதியில் அமைந்திருக்கும் கபாலீசுவரர் கோயில் எனப்படும் சிவன் கோயில் வழக்கமான திராவிட கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் விசுவகர்மா ஸ்தபதிகளுக்கான சான்றாகும். இந்தக் கோயிலின் இருபுறமும் இரண்டு நுழைவாயில்கள் இருக்கின்றன. இவற்றில் உயர்ந்த கிழக்கு கோபுரம் சுமார் 40 மீ உயரமும், மேற்கு கோபுரம் தெப்பக்குளத்தினை நோக்கியுமுள்ளது. இங்குள்ள தெப்பக்குளம் 7.5 ஏக்கர் (3.0 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்திருக்கிறது.
5. மகாமகக் குளம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரத்தின் நடுவில் இந்தத் தெப்பக்குளம் 6.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தத் தெப்பக்குளத்தில் 16 சிறிய மண்டபங்கள் மற்றும் கிழக்குப் பகுதியில் ஒரு "நவக்கன்னி கோயில்" (ஒன்பது ஆறுகள்) உள்ளது. இந்தியாவின் அனைத்து நதிகளும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் விழா நாளில் இந்தத் தெப்பக்குளத்தில் ஒன்று கூட்வதாகக் கூறப்படுகிறது. இந்தத் தெப்பக்குளத்தில் நீராடுவது இந்தியாவின் அனைத்துப் புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
6. திருச்சி தெப்பக்குளம்
திருச்சி மலைக்கோட்டைத் தெப்பக்குளம் திருச்சிராப்பள்ளி மாநகரின் நடுவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டை அருகிலேயே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக் கோயில், பாறையின் மேல் 83 மீட்டர் உயரத்தில் உள்ளது. மென்மையான பாறையினை முதலில் பல்லவர்கள் குடைந்து கோயிலமைத்தனர். ஆனால் விசயநகரப் பேரரசின் கீழ் இக்கோயில் பணியினை நிறைவு செய்தவர்கள் மதுரை நாயக்கர்கள். இத்தெப்பக்குளம் 5 ஏக்கர் (2 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்திருக்கிறது.
7. திருக்கண்ணப்புரம் தெப்பக்குளம்
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் - மயிலாடுதுறை சாலையில் இருக்கும் சன்னாநல்லூர் சென்று, அங்கிருந்து திருப்புகலூர் வழியே திருக்கண்ணபுரம் செல்லலாம். 108 "திவ்ய தேசங்களில்" ஒன்றாகவும், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலமாகவும் இருக்கும் விஷ்ணு கோயில் இது. இந்தக் கோயிலின் மூலவர் நீலமேகப் பெருமாள், உற்சவர் சவுரிராசப் பெருமாள் ஆவார். இந்தக் கோயிலின் முன் தெப்பக்குளம் உள்ளது. இந்தத் தெப்பக்குளம் 4.5 ஏக்கர் (1.8 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்திருக்கிறது.