திவ்வியப் பிரபந்தம் என்பது விஷ்ணு எனும் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்டப் பக்திப் பாடல் தொகுப்பாகும். கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை, 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவர், ‘ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்’ எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார். திவ்ய எனும் சொல் "மேலான" என்றும், பிரபந்தம் எனும் சொல் பலவகைப் பாடல் தொகுப்பினையும் குறிக்கும்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் 24 வகைப்படும். அவை;
1. திருப்பல்லாண்டு
திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர்ச் சேர்ந்த பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும். இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதல் ஆயிரம் பாக்களில் முதல் 12 பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும். வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றும்.கோவில்களில்.காலை வேலையில் பாடப்படுகிறது. சாற்றுமுறை எனும் வைணவ தினவழிபாட்டின் தொடக்கத்தின் போதும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின் போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இப்பல்லாண்டு இன்றளவும் பாடப்பட்டே பின்னரே சுவாமி திருக்கோயிலுக்குள் எழுந்தருள்கிறார்.
2. பெரியாழ்வார் திருமொழி
பெரியாழ்வார் திருமொழி என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இது 461 பாசுரங்களைக் கொண்டது, பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்டதாகும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
3. திருப்பாவை
திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 474 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியும் முன்பே எழும் கன்னியர், பிற பெண்களையும் துயில் எழுப்பிக் கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
4. நாச்சியார் திருமொழி
நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாளால் பாடப்பட்டது. வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 504 தொடக்கம் 646 வரையான பாடல்களாக இடம் பெறுகின்றது. 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு, அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
5. பெருமாள் திருமொழி
பெருமாள் திருமொழி என்பது பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்ட தமிழ் வைணவ இலக்கியப் படைப்பாகும். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியான இந்த படைப்பு, 105 பாசுரங்களைக் கொண்டுள்ளது, இவை நாலாயிரத் திவ்யப் பிரபந்தத் தொகுப்பில் 647 முதல் 750 வரை உள்ளன. இது பெருமாள் என்று அழைக்கப்படும் திருமாலின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
6. திருச்சந்த விருத்தம்
திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது. சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை) எழுப்புவது என்று பொருள். இனிய ஒலிகளால் திருமாலை வணங்கிப் போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 பாசுரங்களைக் கொண்டது, இது நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது. இது திருமாலை வணக்கத்திற்காகவும், கிருஷ்ணர் மற்றும் வெங்கடாசலபதி போன்ற திருமாலின் தோற்றங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
7. திருமாலை
திருமாலை என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி தொண்டரடிப் பொடியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் 45 பாடல்களைக் கொண்டது. தொண்டரடிப் பொடியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டதாகும். இந்நூல் பெரும்பாலும் அரங்கநாதன் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்தப் பாடல்கள் திருமாலிற்கு மாலை தொடுக்கும் வேளையில் பெரும்பாலும் பாடப்படுகிறது.
8. திருப்பள்ளி எழுச்சி
திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும். திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சி வகைப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
9. அமலனாதிபிரான்
அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, திருவரங்கத்துத் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாகக் கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்நூல், திருப்பாணாழ்வார் அழகிய மணவாளனது திருமேனி அழகில் மெய்மறந்து பாடியருளியதாகக் கூறப்படுகிறது. அரங்கன் மீது பாடப்பட்ட இப்பத்துப் பாடல்களும், அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது.
10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
கண்ணிநுண்சிறுத்தாம்பு, வைணவ சமயத்தில் நம்மாழ்வாரைப் போற்றி மதுரகவியாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் 11 பாசுரங்களைக் கொண்டது. மதுரகவியாழ்வாரால் நம்மாழ்வாரை வணங்கிப் பாடப்பட்ட இந்நூல் நாலாயிர திவ்யபிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
11. பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் இயற்றியது பெரிய திருமொழி. திருமால் மீது பாடப்பட்ட நூல் ஆகும். இது பத்து பாகங்களாகவும், ஒவ்வொரு பாகத்திலும் 10 பாடல்களும் உள்ளமையால் மொத்தம் 1084 பாடல்கள் உள்ளது. பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதற்கு பெரியவாச்சான் பிள்ளை என்பவர் விளக்க நூல் எழுதியுள்ளார். இந்த நூலில் 108 வைணவத் திருத்தலங்களில் உள்ள பெருமாள்களைப் பற்றி அதிகமாகப் பாடல்கள் உள்ளன. சில திருத்தலங்களுக்கு 1 பாடல் முதல் 100 பாடல்கள் வரை பாடப்பட்டுள்ளது.
12. திருக்குறுந்தாண்டகம்
திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவ சமயத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும். இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச் சார்ந்து இயற்றப்பட்டதாகும். பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலேத் தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் வந்தால் அது குறுந்தாண்டகம் என்றுரைப்பர். திருக்குறுந்தாண்டகம் என்பது வைணவக் கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது. இது நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 2032 முதல் 2051 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் 20 பாடல்கள் உண்டு.
13. திருநெடுந்தாண்டகம்
திருநெடுந்தாண்டகம் என்பது வைணவ சமயத்தின் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும். இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச் சார்ந்து இயற்றப்பட்டதாகும். பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலேத் தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் எட்டு சீர்கள் வந்தால் அது நெடுந்தாண்டகம் என்றுரைப்பர். திருநெடுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது. இது நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 2052 முதல் 2081 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 30 பாடல்கள் உண்டு.
14. முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது. பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்ட இப்பாசுரம் “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாகக் கொண்டு துவங்குகிறது. இந்நூல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
15. இரண்டாம் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களை கொண்டது. இது பூதத்தாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்ட இப்பாசுரம் “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகிறது. இந்நூல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தொகுப்பில் இயற்பாத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
16. மூன்றாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி என்பது பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இயற்றிய வைணவ இலக்கிய நூலாகும். இது 100 பாசுரங்களைக் கொண்டது. இது அந்தாதி அடிப்படையில் பாடப்பட்டது. இது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப்படும் தொகுப்பின் ஒரு பகுதியாகும். திருமாலைப் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டது ஆகும்.
17. நான்முகன் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி திருமழிசையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 96 பாசுரங்களைக் கொண்டது. திருமழிசையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டது. இந்நூல் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் நூலில் நான்முகன், சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய மூன்று மும்மூர்த்திகளை பற்றியும் பாடப்பட்டுள்ளது.
18. திருவிருத்தம்
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் திருவிருத்தம் நூலைப் பாடியுள்ளார். திருவிருத்தம் கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நூற்பயன் கூறும் இறுதிப்பாடலையும் சேர்த்து இதில் 100 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதி முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அகத்திணையில் வரும் துறையைச் சேர்ந்த பாடல்களாகவே நூல் முழுவதும் அமைந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.
19. திருவாசிரியம்
திருவாசிரியம் நம்மாழ்வாரின் நூல்களில் ஒன்று. இதில் ஏழு ஆசிரியப்பாக்கள் உள்ளன. அந்தாதித்தொடையில் அமைந்துள்ளன. இந்த நூலை யஜுர்-வேத சாரம் என்பர். இதன் முகப்பில் அருளாளப் பெருமான் எம்பெருமானார் இயற்றிய கலிவிருத்தத்தாலான தனியன் பாடல் ஒன்று உண்டு.
20. பெரிய திருவந்தாதி
பெரிய திருவந்தாதி என்பது நம்மாழ்வார் இயற்றிய சிற்றிலக்கியங்களில் ஒன்று. பெரிய திருவந்தாதி வெண்பாச் செய்யுளால் ஆனது. இந்த நூலில் 87 வெண்பாக்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. முதலும் இறுதியும் கூட மாலை போல் தொடுக்கப்பட்டுள்ளன.
21. திருஎழுகூற்றிருக்கை
திருஎழுகூற்றிருக்கை என்பது திருமங்கையாழ்வார் இயற்றிய பாடலாகும். இப்பாடல் ஒரு பாடல் - 47 அடிகள் என்று இடம் பெற்றிருக்கிறது.
22. சிறிய திருமடல்
சிறிய திருமடல் மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கிய வகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2673 - 2712) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல். தலைவன் “நாராயண”னின் பெயருக்கு ஏற்ப நூலின் ஒவ்வொரு அடியிலும் எதுகை அமைந்துள்ளது.
23. பெரிய திருமடல்
பெரிய திருமடல், மடல் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் திருமங்கையாழ்வார். இது நாராயணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. மடல் இலக்கிய வகையின் முன்னோடி நூல்களில் ஒன்றாகக் காணப்படும் இந்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் (பாசுரம்: 2713 - 2790) பகுதியாகும். பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டுள்ளது இந்நூல்.
24. திருவாய்மொழி
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இதனைப் பாடியுள்ளார். திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது. இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன. இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது. இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.