அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம் பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் ஆணவத்தை அடக்கிய இடம் என்ற வகையில் அமைந்த எட்டுத் தலங்களை, அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
பிரமன், இயமன், அந்தகன், கயமுகன், தக்கன், சலந்தரன் மன்மதன், திரிபுர அசுரர்கள் ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக தமிழ் மரபில் சொல்லப்படுகின்றன.
1. திருக்கண்டியூர் - சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம்
2. திருக்கோவலூர் - அந்தகாகரனைக் கொன்ற இடம்
3. திருவதிகை - திரிபுரத்தை எரித்த இடம்
4. திருப்பறியலூர் - தக்கன் தலையைத் தடிந்த தலம்
5. திருவிற்குடி - சலந்தராசுரனை வதைத்த தலம்
6. திருவழுவூர் - கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட தலம்
7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்த தலம்
8. திருக்கடவூர் - மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.