இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களில் சித்தர்கள் என்பவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் யார்? என்பதை அறியக் கீழ்க்காணும் தகவல்கள் உதவும்.
* சித்தி என்றால் வெற்றி பெறல், அடைதல் என்று பொருள்.
* சித்தர்கள் காய சித்தி, வேதை சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனும் நான்கு சித்திகளைப் பெற்று இறைநிலை அடைந்தவர்கள்.
* படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்பவர்கள்.
* இறவாநிலை பெற்று ஒளி உடலுடன் வாழ்பவர்கள்.
* சிலர் துரிய தியான நிலையில் இருப்பவர்கள்.
* சமூக சீர்திருத்தவாதிகள்.
* அறிவியலாளர்கள்.
* இறைவனோடு ஒன்ற அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் சொன்னவர்கள். சித்தர்கள் செய்த யோகம் சித்தர் யோகம் மற்றும் சிவ யோகம். இது வாசி யோகத்தின் உயர் நிலை.
* சித்த மருத்துவம் என்ற மருத்துவ முறையை நிறுவியவர்கள்.
* மனிதன் இறந்து போகாமல், நோய் இல்லாமல் இளமையுடன் வாழும் சாகாக் கலை எனும் அறிவியலை உலகிற்குக் கொடுத்தவர்கள். அதில், இன்றைய மருத்துவ அறிவியல் முன்னேற்றமான ஸ்டெம் செல் தியரி பற்றிச் சொன்னவர்கள்.
* புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பல தீராத நோய்களுக்கு மருத்துவ முறைகளைச் சொன்னவர்கள்.
* எல்லையற்றக் கருணை மிக்கவர்கள். வேண்டியதைத் தரும் வல்லமை மிக்கவர்கள்.
* பிரபஞ்சப் பயணியாகப் பிரபஞ்சத்தைச் சுற்றி வந்தவர்கள்.
* பிற கோள்களிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொன்னவர்கள்.
* காலப்பயணம் செய்தவர்கள்.
* அல்கெமி என்ற ரசவாதம் கண்டவர்கள்.
* பத்து அறிவுகள் பெற்றவர்கள்.
* அறுபத்து நான்கு வகை சித்திகள் பெற்றவர்கள்.
என்று சித்தர்கள் பற்றி நிறையச் சொல்லலாம்.
சாதாரண மனிதர்கள், சித்தர் கல்வி கற்று, வாசி யோகம் செய்து, சித்திப் பெற்று அதன்பின் 10 ஆண்டுகள் சிவயோகம் என்றத் தசதீட்சைச் செய்துச் சித்திப் பெற்றுச் சித்தர் ஆகிறார்கள். சித்தர்கள் எனப்படுபவர்கள்,
1 மனித உடலுடன் மனிதர்களாக வாழ்பவர்கள். மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். சிலர் குகைகளில் வாழ்பவர்கள். இவர்கள் தனது மூச்சுக் காற்றை அதன் வழியில் இயக்காமல், மூச்சுக் காற்றைத் தனது விருப்பம் போல் இயக்குபவர்கள். இது அவர்களை அடையாளப்படுத்தும்.
2 துரிய தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவர்கள். இவர்களை இரண்டு வகைகளாகப் பிரித்தறியலாம்.
முதல் வகை, சமாதி செல்பவர். சித்தரான போகர் என்பவரது முதல் சமாதி பழனியில் உள்ளது. இவர் சமாதியில் இருந்து வெளியே வந்து அருள் பாலிப்பதாக கோரக்கர் சந்திரரேகை என்ற நூலில் சொல்கிறார். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் 1000 ஆண்டுகளாக துரிய தியான சமாதியில் இருக்கிறார். இவரும் சமாதியில் இருந்து மீண்டு வந்து மக்களுக்கு அருள் புரிவார்.
இரண்டாம் வகை, சமாதி செல்பவர் மீண்டு வராமல் சமாதியில் இருந்து அருள் பாலிப்பவர். சுந்தரானந்தர் எனும் சித்தர் மதுரையில் முதல் சமாதி ஆகி பின்பு பட்டமங்கலத்தில் இரண்டாம் சமாதி ஆகி சமாதியில் இருந்து அருள் செய்கிறார்.
3 இறைவனுடன் ஒன்றி ஒளி உடம்பு பெற்றவர்கள். இவர்கள் ஒளி வடிவில் தரிசனம் தருபவர்கள். திருமூலர், காக புசுண்டர், அகத்தியர் ஆகியவர்கள் இத்தகைய சித்தர்கள் என்று கொள்ளலாம்.