ஔவையார் எழுதிய விநாயகர் அகவல் யோக சாஸ்திரம் என்று போற்றப்படும் நூல். இந்த நூலில் ஆறு ஆதாரங்கள் கூறப்படுவதுடன் இன்னும் சூக்கும உடலில் உள்ள பல இடங்களும் பாதைகளும் சொல்லப்படுகின்றன.
1. மூலாதாரம் – ஆசன வாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது – இதில் கணேசர் இருக்கிறார். – ஓங்காரம்.
2. சுவாதிஷ்டானம் – பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது – இதில் பிரம்மதேவர் இருக்கிறார். – பஞ்சபூதம் மண்.
3. மணிபூரகம் – உந்தியில் – இதில் திருமால் இருக்கிறார் – பஞ்சபூதம் நீர்.
4. அநாகதம் – இதயத்தில் – இதில் ருத்திரன் இருக்கிறார் – பஞ்சபூதம் நெருப்பு.
5. விசுத்தி – கழுத்தில் – இதில் மகேசர் இருக்கிறார் – பஞ்சபூதம் வளி (காற்று)
6. ஆக்ஞை – புருவ நடுவில் – இதில் சதாசிவர் இருக்கிறார் – பஞ்சபூதம் வெளி (ஆகாயம்)
ஆறாகிய இந்த ஆதாரங்கள், வீணாத்தண்டின் அடியிலிருந்து நட்டுவைத்த அங்குசம் போல், புருவ நடுவாம் சுழுமுனை வரை நீடிக் கூடி நிற்கின்றன. ஆதாரங்களில் இருக்கும் திருவுருவங்களை, நியதிப்படி அழுந்த நினைக்க நினைக்க, அந்நுண்ணிய வடிவுகளில், முறையே ஆன்ம உணர்வு கலந்து கரக்கும். அந்நிலையில் நினைவானும், நினைபொருளும், நினைவும் நீங்கும். இனிய இது, ஆதார யோகம் எனப்பெறும்.
இந்நிலை கைவந்தபின், கற்பனை கடந்தவன், கலந்து எதனிலும் கலவாதான், அகண்டன் எனும் அந்த அருள் சக்தியாளனை, உள்ளக் கண் கொண்டு உணர வரும். அதன் பின், ‘அவன் வேறு நான் வேறு’ எனும் நினைவு நீங்கும்; முத்திக்கு உரிய மோனம் சித்திக்கும். இதயத்தில் இறைநிலை, நிலைபேறாக நிற்கும். இது நிராதார யோகம் எனப்பெறும்.
அங்குசத்தால் யானையை அடக்கும் பாகனைப்போல், பிராணனை இடை பிங்கலை வழி விரயம் செய்யாமல், ஆறு ஆதார வழியே செல்லுமாறு அடக்குகின்றனர் யோகியர்.