இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்து வந்துள்ளது. பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.
இந்த வகையில், கிராமப்பகுதி மக்களுக்கு இத்தோப்புக்கரணம் நன்கு அறிமுகமிக்க ஒன்றாகும். வெளிநாடுகளில் இதை, சூப்பர் பிரைன் யோகா என்று சொல்லி பெரியவர்கள் முதல் சிறியவர் வரை தோப்புக்கர்ணம் போடுவது பிரபலமானதாக உள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டுவதால் மனம் ஒருமுகப்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து உள்ளது.
இந்தத் தோப்புக்கரணத்தைத் தொடக்கத்தில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணு என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார். அதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் அளித்த விளக்கத்தைப் பார்க்கலாம்.
ஒரு முறை மருமான் கணேசரைப் பார்க்கக் கைலாயம் சென்றவர், குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கையை நீட்டிச் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டது. என்ன செய்தும், அதைத் திருப்பி வாங்க முடியாமல் கடைசியில் விஷ்ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க, வாயிலிருந்த விஷ்ணு சக்கரம் வெளியே வந்து விழுந்தது.
மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டது சமஸ்கிருதத்தில் தோர்பிஹ் (கைகளால்), கர்ணம் (காது) என்று குறிப்பிடப்பட்டது. இதுதான் காலக்கிரமத்தில் 'தோப்பிக்கரணம்', 'தோப்புக்கரணம்' என்றாகியிருக்கிறது. மஹாவிஷ்ணுதான் இதை முதலில் தொடங்கினார். மனிதர்கள் அல்ல, என்பதற்கு சான்று 'தோர்பிஹ்கரணம்' என்ற சொல்லிலேயே அடங்கியிருக்கிறது. இது புரிய சமஸ்கிருதத்தில் சிறிது இலக்கண அறிவு தேவை.
அதாவது, 'தோர்பிஹ்' என்றால் 'பல கைகளால்'. 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமை 'தோஹ்'. 'கைகளால்' என்பது மூன்றாம் வேற்றுமை. 'ஒரு கையால்' என்பதற்கு 'தோஷா'.'இரண்டு கைகளால்' என்பதற்கு 'தோர்ப்யாம்'. மனிதர்களாகிய நாம் இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்றுதான் சொல்லவேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால் கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்குமே தவிர, 'தோப்பிக்கரணம்' என்றோ, 'தோப்புக்கரணம்' என்றோ ஆகியிருக்காது. 'தோர்பிஹ்' என்று மூலரூபத்தில் இருந்திருந்தால்தான் அது சிதைந்து 'தோப்பி', 'தோப்பு' என்று ஆகியிருக்கும். 'தோர்பிஹ்' என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக் குறிக்கும் 'பஹுவசன'மாயிருக்கிறது. விஷ்ணுவுக்கு நான்கு கைகள். அதனால்தான் அவர் நான்கு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டதை 'தோர்பிஹ்' என்று முதலில் சொல்லப்பட்டு அது 'தோப்பி', 'தோப்பு' என்று சிதைந்திருக்கிறது.
தோப்புக்கரணத்தை எப்படிச் செய்வது?
நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.
* இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
* இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.
* அதே போல், வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
* தலை நேராய் பார்த்தபடியே முச்சு காற்றை விட்டபடியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.
* மூச்சை இழுத்துக் கொண்டே எழ வேண்டும். வேகமாகச் செய்யக் கூடாது. பொறுமையாகச் செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.