சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானுடைய முகங்கள் சிவ முகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமானுக்கு பொதுவாக, சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து முகங்கள் உள்ளன என்று நூல்கள் தெரிவிக்கின்றன.
ப்ராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்கள் நமது உடலில் இருப்பதை சிவனின் ஐந்து முகங்கள் விளக்குகின்றன.
சிவபெருமானுடைய ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் தனது மகாசதசிவ ரூபத்தில் எண்ணற்ற முகங்களுடன் காட்சியளிக்கின்றார்.
முகலிங்க மூர்த்தி என்பது 64 சிவ திருவுருவங்களுள் ஒன்றாகும். இம்மூர்த்தியை முகலிங்கேஸ்வரர் என்று அழைப்பர். லிங்கத் திருமேனியில் சிவமுகம் இருப்பதை முகலிங்க மூர்த்தி என்கிறோம்.
முகலிங்க மூர்த்தியில் ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என நான்கு வகைபாடு உண்டு.
இந்த திருவுருவங்களில் 1001 லிங்கங்களைக் கொண்டது ஆட்யம் என்பதாகும். 108 லிங்கங்களைக் கொண்டது சுரேட்டியம் ஆகும்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் மூன்று முகலிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் நான்கு முகம் கொண்ட லிங்கம் உள்ளது. ஐந்து முகம் கொண்ட லிங்கம் நேபாளத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.