ராமாயணத்தில் 'தியாகக் காண்டம்' என்று ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் ‘அயோத்யா காண்டம்’ என்பதைத்தான் தியாகக் காண்டம் என்கின்றனர். ஆமாம், அதற்குக் கீழ்க்காணும் தியாகச் செயல்பாடுகளை எடுத்துக்காட்டுகளாகச் சொல்கின்றனர்.
1. தசரத சக்கரவர்த்தி, மனைவியான கைகேயிக்குத் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி, சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்கிறார்.
2. ஸ்ரீராமர் தன் தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காக, தன் அரச பதவியைத் துறந்து பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்வதற்காகப் புறப்படுகிறார்.
3. ஸ்ரீராமருடன் இருந்து தொண்டு செய்வதற்காகச் சீதை அரச போகத்தைத் துறந்து ஸ்ரீராமருடன் கானகம் செல்கிறாள்.
4. வனவாசத்தின் போது ஸ்ரீராமருக்குத் தொண்டு செய்வதற்காக, தன் புதல்வன் லட்சுமணனைச் சுமித்திரை தியாகம் செய்கிறாள்.
5. ஸ்ரீராமருக்குத் தொண்டு செய்வதற்காக லட்சுமணனை அனுப்பியதன் மூலம் ஊர்மிளை தன் இல்லற வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள்.
அப்படியென்றால், அயோத்தியாக் காண்டம், தியாகக் காண்டம்தானே...?