சர்வ தர்ம சம பவ (Sarva Dharma Sama Bhava) என்பது மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கருத்தாகும். இது, அனைத்துச் சமயங்களும் பின்பற்றும் வழிகளின் முடிவு ஒன்றாகவே உள்ளது என்ற சமய சமத்துவத்தைக் குறிக்கிறது.
இச்சொற்றொடரை முதன் முதலில் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது இந்து, முசுலிம் தொண்டர்களின் தகவல் தொடர்புகளில் பிளவினைத் தணிக்கப் பயன்படுத்தினார். பல்வேறு சாதியையும் இனங்களையும் இணைத்து மிகப்பெரிய எதிர் காலனித்துவ இயக்கத்தைக் காந்தி உருவாக்க, இக்கருத்தானது பெரிதும் உதவியது.
இது, அரசையும் சமயத்தையும் வேறுபடுத்தாமல் அனைத்துச் சமயங்களையும் அரவணைத்துச் செல்லும் இந்திய அரசின் சமயச் சார்பற்ற கோட்பாட்டின் முக்கியமான கருத்தாகவுள்ளது.
சர்வ தர்ம சம பவ என்பது, "அனைத்துத் தர்மங்களும் / நம்பிக்கைகளும் சாத்தியமானவையே!" என்ற நேரடியான பொருளைத் தந்தாலும், பெரும்பாலும் சமயக் கண்ணோட்டத்தில் "அனைத்துச் சமயங்களும் ஒன்றே" அல்லது "அனைத்து வழிகளும் ஒரே இலக்கை நோக்கியேச் செல்கின்றன" என்றே மொழி பெயர்க்கப்படுகிறது.