'அஷ்டாவக்ர கீதை' என்பது ஒரு வேதாந்த நூலில் அஷ்டாவக்ர முனிவர் கூறும் சில கருத்துக்களை நாமும் அறிந்து கொள்ளலாம்.
1. விவேகம் இல்லாத அஞ்ஞானிகள் பிறவிச் சூழலை மேலும் தொடர்கிறார்கள். ஆனால் ஞானிகளோ பிறவிச்சூழலுக்கு ஆணி வேராக உள்ள அக்ஞானத்தையே ஒழித்து விடுகிறார்கள்.
2. ஜீவன் முக்தராகிய யோகிக்கு, ஆசை என்பதே இல்லை. அதனால் இந்த உலகில் அவருக்குக் கடமையும் கிடையாது.
3. அக்ஞானிகளுக்கு உள்ளத்தில் அடங்காத ஆசை இருப்பதால் மன அமைதி கிட்டுவதில்லை. ஞானிகளோ ஆத்ம தத்துவத்தை நன்கு அறிந்து பற்றற்ற நிலையில் மனம் அடங்கி இருப்பதால், எப்போதும் ஆனந்தமாக மனச்சாந்தியுடன் இருக்கிறார்கள்.
4. 'நான் பிரம்மம்' என்ற உன்னத நிலையில் நிலைபெற்ற ஞானி ஒரு போதும் குழப்பமடைவதில்லை. ஏனெனில் அவன் அடைய வேண்டியது ஒன்றுமில்லை.
5. உலக ஆசைகளிலிருந்து விடுபட்ட உயர் ஞானி, உலக மக்களின் பார்வையில் செயல்களில் ஈடுபட்டவன் போல் தோன்றினாலும் உண்மையில் அவன் செயலைச் செய்யாதவனே ஆவான்.
6. உயர் ஞானியின் இயல்பான நிலை எதுவோ, அது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக இல்லாவிட்டாலும் அழகாகவே இருக்கிறது; அக்ஞானியின் போலித்தனமான அமைதியோ அழகாக இருப்பதில்லை.
7. ஒருவன் பிறர் உதவியை நாடாதவனாக, ஆசைகளற்று இருந்தாலும் முன்வினை காரணமாக (பிராரப்த கர்மத்தால்) உலர்ந்த சருகு போல் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுகிறான்.
8. ஆசைகள் எதுவுமற்ற, இயல்பாகவே சமாதி நிலையைப் பெற்ற ஆத்மஞானி எவனோ, அவனே இறையருள் பெற்றவனாவான்.
9. உலகத்தோடு ஒட்டி வாழாதவனுக்கு உடல் மீது பற்று (தேகாபிமானம்) கிடையாது. எனவே, அவனுக்குச் சுக துக்கங்களால் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
10. எவன் ஒருவன், 'உடல் காரணமாகவே எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன; தூய்மையே வடிவமான ஆத்மாவாகிய என்னால் செயல் எதுவும் செய்யப்படவில்லை' என்ற தீர்மானத்தில் இருக்கிறானோ, அவன் செயல்களைச் செய்தாலும் செய்யாதவனே ஆவான்.
11. புலனின்பங்களில் வெறுப்படைந்து சதா சர்வகாலமும் ஆத்மாவிலேயே சஞ்சரிப்பவன், உலகியலில் இருந்தாலும் ஆத்மசுகத்தில் மகிழ்ச்சியாகவே இருப்பான்.
12. 'எல்லாம் கற்பனையே' என்ற நிச்சய புத்தியுள்ளவன் எதைப் பார்த்த போதிலும் அதைப் பிரம்மமாகவேக் காண்பான்.
13. எவனுடைய உள்ளத்தில் அகங்காரம்! நிறைந்திருக்கிறதோ, அவன் செயலைச் செய்யாத போதிலும் செய்தவனே ஆகிறான்.
14. உண்மைத் தத்துவத்தைக் கேட்ட போதிலும் மூடன் மனம் தடுமாறுகிறான். ஆனால் அறிவில் சிறந்த பிரம்மஞானியோ ஒன்றும் அறியாதவனைப் போல் ஒடுங்கி விடுகிறான்.
15. அறிவில்லாதவர்கள் மனதை அடக்கவும், மனதை ஒருமைப்படுத்தவும் அடிக்கடி முயற்சி செய்வார்கள். ஆனால் ஆத்ம சொரூபத்தில் நிலைத்த ஞானிகளோ எதைச் செய்த போதிலும் கவனமற்றவர்கள் போலவே இருந்து வருவார்கள். அவர்களிடம் மன அடக்கமும், ஒருமைப்பாடும் முயற்சியின்றி இயல்பாகவே அமைந்திருக்கும்.
16. உலகியல் சார்ந்த செயலைச் செய்தேப் பழக்கப்பட்ட மனிதர்கள், அப்பழுக்கற்றதாக விளங்கும் ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்வதில்லை.
17. அக்ஞானி மனதை அடக்குவதால் மட்டும் விடுதலையை (முக்தியை) அடைந்து விடுவதில்லை. ஆனால், இறையருள் பெற்றவனோ மெய்யறிவினால் மட்டுமே முக்தாத்மாவாக (முக்தி பெற்றவனாக) இருக்கிறான்.
18. எப்போது ஒருவன் ஆத்மாவாகிய தன்னைக் 'கர்த்தாவுமல்ல (செய்பவன் அல்ல), போக்தாவுமல்ல (அனுபவிப்பவன் அல்ல)' என்று உணர்ந்து கொள்கிறானோ, அப்போது எண்ணங்கள் யாவும் இல்லாமல் (நசிந்துப்) போகின்றன. அங்கு ஆத்மா மட்டுமேப் பிரகாசிக்கிறது.
19. ஆத்மாவுடன் இணைந்து வாழும் ஞானிகள் நினைத்த போது முன்வினைப் பயனாக ஏற்பட்ட சுகபோகங்களை துறக்கவும் செய்வார்கள். அவர்களுக்குப் பந்த பாசம் கிடையாது.
20. செய்தேத் தீர வேண்டும் என்ற கடமையே சம்சாரம் எனப்படுகிறது. பந்தமற்ற பூரண ஞானிகளுக்குக் கடமை என்பதே இல்லை.
21. ‘நான் செய்கிறேன்' என்ற நினைவே அக்ஞானிக்குப் பலனை அனுபவிக்கச் செய்கிறது; அகங்காரமற்ற ஞானியோ இந்த உடலே இதைச் செய்கிறது' என்று நினைப்பதால் அவனை வினைப்பயன் ஒட்டுவதில்லை.
22. அக்ஞானி மனதை அடக்குவது என்ற பழக்கத்தை விட்டுவிட்டால், அக்கணமே உலக ஆசைகளுக்கு வசப்பட்டு மனம் போனபடி செயல் புரியத் தொடங்குவான்.
23. மந்த அறிவுள்ளவனுக்கு ஆத்மாவைப் பற்றிக் கேள்விப்பட்ட போதிலும் மாயை விலகுவதில்லை. அவன் வெளித்தோற்றத்தில் மனம் அடங்கியவனாகக் காணப்பட்டாலும், உள்ளே உலகியல் ஆசைகள் நிறைந்தவனாகவே இருப்பான்.
24. உள்ளத்தில் சிறிது கூட ஆசையில்லாத முக்தாத்மாவுக்கு உலகியல் சார்ந்த (தாழ்ந்த) விஷயங்களில் சிரத்தையிருப்பதில்லை.
25. கடமைகளும், (விருப்பு வெறுப்பு போன்ற) இரட்டை எண்ணங்களும், கற்பனைகளும் ஒழிந்து போன நிலையே 'ஜீவன் முக்த நிலை' எனப்படும்.
26. எப்போதும் பரிசுத்த வடிவினனாக விளங்கும் ஆத்மாவுக்கு அறிபவன், அறியப்படும் பொருள், அறிவு என்பவைகள் இல்லை.
27. எப்போதும் தூயவடிவினனாக விளங்கும் ஆத்மாவுக்கு மாயையுமில்லை; சம்சாரமுமில்லை; விருப்பு - வெறுப்பு என்பதுமில்லை.
28. பூரணஞானிக்கு இருப்பு - இல்லாமை; ஒன்று - இரண்டு போன்ற வேற்றுமைகள் கிடையாது; உபதேசமோ, சாஸ்திரமோ, குருவோ, சீடனோ, வாழ்வின் குறிக்கோளோ ஆத்மாவில் ஒன்றுபட்டவனுக்குத் தேவைப்படுவதில்லை.
29. ஒருவன் மிகவும் செழிப்பான போக வாழ்க்கையை அடைந்திருந்த போதும், அவைகள் எல்லாவற்றையும் துறந்தாலன்றி பேரின்பம் அடைய முடியாது.
30. ஆம். சொரூபம் மாறுதலற்றது; களங்கமில்லாதது; அழிவற்றது. அது வெகுதொலைவிலுமில்லை, அருகிலுமில்லை. எப்போதும் அது அடையப்பட்டதாகவே இருக்கிறது.
31. 'ஆத்மா பிரம்ம சொரூபம்' என்ற உண்மையை அறிந்தவனுக்கு எந்தவித ஆசையுமில்லை; வேற்றுமை உணர்வு (பேதபுத்தி) ஏற்படுவதும் இல்லை.