'சிவராத்திரி' என்பது ஐந்து வகைப்படும்.
1. நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பட்ச, சுக்ல பட்ச சதுர்த்தசிகளில் வருவது.
2. பட்ச சிவராத்திரி: தை மாதம், கிருஷ்ண பட்ச, பிரதமை முதல் பதின்மூன்று நாட்கள் வரையில் ஒருபொழுது உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசியில் முழு விரதம் இருப்பது.
3. மாத சிவராத்திரி: மாசி - கிருஷ்ண சதுர்த்தி; பங்குனி - சுக்ல - திருதியை; சித்திரை கிருஷ்ண - அஷ்டமி என்று இவ்வாறு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட திதியில் அமைவது.
4. வார சிவராத்திரி: சோம வார நாளன்று, பகல், இரவு முழுவதும் அமாவாசையாகப் பொருந்துவது. இதனை யோக சிவராத்திரி என்று கூறுவார்கள்.
5. மகா சிவராத்திரி: எல்லாச் சிவராத்திரிகளிலும் மேலானது மகா சிவராத்திரி. மாசி - கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் வருவது. இது வருஷ சிவராத்திரி.
சதுர்த்தி விநாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், சதுர்த்தசி சிவனுக்கும் உரியன.
வளர்பிறைச் சதுர்த்தசிக்கு மறுநாள் வருவது பௌர்ணமி. சூரியனும் சந்திரனும் எதிரெதிர் நின்று தரிசனம் தரும் நாள் இது. தேய்பிறைச் சதுர்த்தசிக்கு மறுநாள் அமைவது அமாவாசை. சூரியனும் = பரமாத்மாவும், சந்திரனும் = ஜீவாத்மாவும் நெருக்கமாக உறவாடும் நாள் இது. பௌர்ணமிக்கும், அமாவாசைக்கும் முந்தைய திதி என்ற வகையில் சதுர்த்தசி, திதிகளில் சிறந்தது. ஆகவே, இது சிவனுக்குரியதாயிற்று.
வழிபாட்டுக் காரணங்கள்:
சிவராத்திரி வழிபாட்டிற்குக் கூறப்படும் பல காரணங்கள் புராணங்களில் உள்ளன. அவற்றில் சில வருமாறு:
1. சிவராத்திரி, சிவன், சிவலிங்கத்தில் பிரசன்னமாகி சிறப்பாக அருள் புரியும் நாள்.
2. முடி, அடிகளைத் தேடிய பிரம்மனும், விஷ்ணுவும் அண்ண (அணுக) முடியாத அருள் சோதியாக சிவன் நின்ற நாள்.
3. பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை சிவன் பருகி, உலகைக் காத்த நாள்.
4. மகாப் பிரளயத்துக்குப் பிறகு, மீண்டும் உலகைப் படைக்க வேண்டி, பார்வதி, சிவனை வழிபட்ட நாள்.
5. பார்வதி சிவனின் கண்களை மூடினாள். அதனால் உலகம் இருண்டது. ஒளியின்றி அனைத்துயிர்களும் துன்புற்றன. அப்போது ஒளி வேண்டித் தேவர்கள் சிவனை வழிபட்ட நாள்.
பார்வதி, தேவர்கள் முதலானோர் சிவராத்திரியன்று சிவனை வழிபட்டனர். அவர்களைப் போல நாமும் சிவனை வழிபட்டால் அவனது அருள் நமக்குக் கிடைப்பது உறுதி.