ஸ்ரீவைஷ்ணவ மரபு அல்லது ஸ்ரீவைஷ்ணவம் என்பது இந்து சமயத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணத்தின் ஒரு கிளையாகும். ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தில் ஸ்ரீ எனப்படும் இலக்குமியை, திருமாலுக்கு இணையாகக் கருதி வழிபடுவர். பக்தர்களின் கோரிக்கைகள், இலக்குமி வழியாக, திருமாலிடம் சென்றால் எளிதில் நிறைவேறும் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை ஆகும்.
மேலும், தங்களை இராமானுஜரின் சம்பந்தம் உடையவர்கள் என்பதற்கு அடையாளமாக பஞ்ச சம்ஸ்காரம் எனும் தீட்சை எடுத்துக் கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் முன் தோள்பட்டையில் சங்கு மற்றும் சக்கர சின்னங்களை முத்திரையிட்டுக் கொண்டு, உடலில் 12 இடங்களில் திருமண் காப்பு இட்டுக் கொள்வதுடன், தங்களை அடியேன் இராமானுஜதாசன் என்று மற்றவர்களிடம் அடையாளப்படுத்திக் கொள்வதுடன், விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் ஒன்றைச் சூட்டிக் கொள்வர். பெண்கள் பஞ்சசம்ஸ்கார தீட்சையின் போது இலக்குமியின் திருப்பெயர்களில் ஒன்றைச் சூட்டிக் கொள்வர்.
ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தில், சமசுகிருத வேத மந்திரங்கள் பாஞ்சராத்திர ஆகமங்கள் மற்றும் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைத் தமிழ் வேதமாக போற்றுகிறது. மேலும் இராமானுஜரின் விசிட்டாத்துவைத தத்துவத்தை ஸ்ரீவைஷ்ண மரபு கடைப்பிடிக்கிறது. இலக்குமியுடன் கூடிய திருமால் மீதான பக்தி, இலக்குமியுடன் கூடிய திருமால் விக்கிரக ஆராதனைகள், அர்ச்சனைகள், பாகவத தருமம், சத்சங்கம், நாம ஜெபம், நாம கீர்த்தனைகள், ஹரி கதாகாலட்சேபங்கள செய்தல் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயங்கள் ஆகும்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்வது வைகுந்தப் பிராப்தி எனும் மோட்சத்திற்கு வழிவகுக்கும் என கருதுகின்றனர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மைசூர் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வேதாந்த தேசிகர் காலத்திற்குப் பின்னர் பெருமாள் கோயில் பூஜைகள், சுவாமி வீதி உலா மற்றும் திருவிழாக்களில், தமிழ் வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை இசைப்பது தொடர்பாக பிணக்குகள் எழுந்தன. ஆழ்வார்களின் பாடல்கள் பெருமாள் கோயில் கருவறைகளில் இசைக்கூடாது எனக் கருதியதால், ஸ்ரீவைஷ்ணவம் வடகலை, தென்கலை என இரண்டாகப் பிரிந்தது. தென்கலைப் பிரிவு ஸ்ரீவைஷ்ணவர்கள் தமிழ் வேதமாக கருதப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை பெருமாள் கோயில்களில் இசைக்கும் வழக்கம் கொண்டவர்கள்.