திருமச்சம் அல்லது சிறீ வத்சம் என்பது திருமாலின் மார்பிலுள்ள மச்சம் ஆகும். இந்த மச்சம் திருமாலின் வலது மார்புப் பகுதியில் உள்ளது. இது முக்கோண வடிவு கொண்டது. இதனை மச்சம், மரு என்றும் கூறலாம். எனவே திருமரு எனவும் அழைக்கப்படுகிறது. உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், மார்பில் திருமச்சம் உள்ளதென அறிந்தால் அச்சிற்பத்தை திருமால் என்று கூறலாம்.
திருமால் சிலையின் வலது மார்பில் முக்கோண வடிவிலான புடைப்பாக காட்சி தரும். முக்கோண பகுதியில் மூன்று துளசி இலைகளை கொண்டதாகவோ, திருமகளின் வடிவு கொண்டதாகவோ அமைகின்றன.
உலக நன்மைக்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த நிகழ்வின் போது, எண்ணற்ற விலையுயர்ந்த பொருட்களும், புத்துயிர்களும் வெளிவந்தன. கற்பக விருட்சம், ஐராவதம் என்ற யானை, உச்சைசிரவஸ் எனும் குதிரை, தன்வந்திரி, அமிர்தம் ஆகியவைகள் வெளி வந்த பிறகு, மகாலெட்சுமி வெளி வந்தார். அப்போது திருமால், மகாலெட்சுமியைத் தமது தேவியாக மார்பில் மச்சமாக அணைத்துக் கொண்டார். திருமகளுக்கு திரு, ஸ்ரீ, பத்மா, கமலம், திருமகள் என பல்வேறு பெயர்கள் உள்ளன.
திருமச்சம் திருமகளாகக் கருதப்படுவதால் அரூப திருமகள் என்று அழைக்கப்படுகிறது. திருமகளை மார்பில் சூடிக்கொண்ட திருமாலினை திருவுறை மார்பன் என்றும் அழைக்கின்றனர். திருமச்சத்தினை மரு என்று வழங்குவதால், திருமாலை 'திருமருமார்பன்' என்றும் அழைக்கிறார்கள்.