இந்து சமயத் தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்து வந்துள்ளது. பள்ளிகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வருகின்றது. இதேப் போன்று, கிராமப் பஞ்சாயத்துக்களில் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் வழங்கப்பட்டிருக்கிறது. தோப்புக்கரணம் போடும் போது, மூளை நரம்புகளைத் தூண்டப்பட்டு மனம் ஒருமுகப்படுவதுடன் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.
இந்து சமயப் புராணக் கதைகளில்,
கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
என்றொரு கதையும்,
ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலத்தினுள் கங்கை நீரை அடக்கி வைத்திருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் ஒரு சிறுவன் நின்றுகொண்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் இந்த வணக்க முறை விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரம் பின்பற்றத் தொடங்கினர்.
என்று மற்றொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் தோப்புக்கரணத்திற்கு கீழ்க்காணும் விளக்கத்தைத் தந்திருக்கிறார்.
தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மஹாவிஷ்ணு. ஒரு முறை மருமான் கணேசரைப் பார்க்க கைலாயம் சென்றவர் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கையை நீட்டி சக்கரத்தை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டது. என்ன செய்தும் அதைத் திருப்பி வாங்கமுடியாமல் கடைசியில் விஷ்ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க, வாயிலிருந்த விஷ்ணுசக்கரம் வெளியே விழுந்தது.
மஹாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்டது சமஸ்கிருதத்தில் தோர்பிஹ் (கைகளால்) கர்ணம் (காது) என்று குறிப்பிடப்பட்டது.இதுதான் காலக்கிரமத்தில் 'தோப்பிக்கரணம்', 'தோப்புக்கரணம்' என்றாகியிருக்கிறது. மஹாவிஷ்ணுதான் இதை முதலில் தொடங்கினார், மனிதர்கள் அல்ல, என்பதற்கு சான்று 'தோர்பிஹ்கரணம்' என்ற சொல்லிலேயே அடங்கியிருக்கிறது. இது புரிய சமஸ்கிருதத்தில் சிறிது இலக்கண அறிவு தேவை.
அதாவது, 'தோர்பிஹ்' என்றால் 'பல கைகளால்'. 'தோஸ்' என்பது கை. முதல் வேற்றுமை ஒருமை 'தோஹ்'. 'கைகளால்' என்பது மூன்றாம் வேற்றுமை. 'ஒரு கையால்' என்பதற்கு 'தோஷா'.'இரண்டு கைகளால்' என்பதற்கு 'தோர்ப்யாம்'. மனிதர்களாகிய நாம் இரண்டு கைகளால் போடும் தோப்புக்கரணத்தை 'தோர்ப்யாம் கர்ணம்' என்றுதான் சொல்லவேண்டும். இது பேச்சு வழக்கில் திரிந்தால்கூட 'தோப்பாங்கரணம்' என்றுதான் ஆகியிருக்குமே தவிர, 'தோப்பிக்கரணம்' என்றோ 'தோப்புக்கரணம்' என்றோ ஆகியிருக்காது. 'தோர்பிஹ்' என்று மூலரூபத்தில் இருந்திருந்தால்தான் அது சிதைந்து 'தோப்பி', 'தோப்பு' என்று ஆகியிருக்கும். 'தோர்பிஹ்' என்பது இரண்டுக்கும் மேற்பட்ட பல கைகளைக்குறிக்கும் 'பஹுவசன'மாயிருக்கிறது. விஷ்ணுவுக்கு நான்கு கைகள். அதனால்தான் அவர் நான்கு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டதை 'தோர்பிஹ்' என்று முதலில் சொல்லப்பட்டு அது 'தோப்பி', 'தோப்பு' என்று சிதைந்திருக்கிறது.
அது சரி, தோப்புக்கரணத்தை எப்படி சரியாகப் போடுவது?
நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.
* இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை நீளம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
* இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும்.
* அதே போல் வலது கையால் இடது காதை பிடிக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
* தலை நேராய்ப் பார்த்தபடியே முச்சு காற்றை விட்டபடியே உட்கார வேண்டும். சிரமம் இல்லாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டும்.
* மூச்சை இழுத்துக்கொண்டே எழ வேண்டும். வேகமாக செய்யக் கூடாது பொறுமையாக செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்.