பள்ளியறை என்பது இந்து சமயக் கோவில்களில், இரவு நேரத்தில் உற்சவரை வைக்கும் இடத்தைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இது பொதுவாக தெய்வங்களின் ஓய்வுக்கான இடமாகவும், இந்துக்களால் மிகவும் புனித இடமாகவும் கருதப்படுகிறது. பல மரபு வழியிலான இந்துக் கோயில்களில், இறுதி பூஜை (அர்த்தசாம பூசை) நாளில், தெய்வம் தனது தெய்வீகக் கணவரின் வசிப்பிடத்திற்கு வழக்கமாக அழைத்துச் செல்லப்படுகிறது. இது பொதுவாக பல கோயில்களில் இரவு ஒன்பது மணிக்குள் நடக்கிறது.
பள்ளியறை வழிபாடு என்பது இந்து சமயக் கோயில்களில் அர்த்தசாம பூசைக்கு பிறகு நடத்தப்படும் வழிபாடாகும். இல்லறத்தில் இருப்பதைப் போல இந்து சமயத்திலும் கணவன் மனைவிகளாக இறைவன் இறைவி இருப்பதால், அவர்களை ஒன்றாக பள்ளியறையில் சேர்த்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனா். மேலும் கோவில் உள் கோபுரங்களைச் சுற்றி தெய்வங்களைக் கொண்டு ஆடம்பரத்துடன் கூடிய ஒரு ஊர்வலமும் அடங்கும். நாளின் முதல் வழிபாட்டுக்கு, கடவுளின் வாசல்கள் திறக்கப்படும் போது, பொதுவாக திருபள்ளியெழுச்சி (அதாவது, தெய்வீக ஓய்வுக்கு பிறகு எழுந்திருப்பது) என்று அழைக்கப்படுகிறது. இது திருவரங்கம் மற்றும் திருப்பதி போன்ற விஷ்ணு கோயில்களில் பரவலாக கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில், முதன்மைத் தெய்வத்தின் பின்னணியில் ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது.
திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெறுகின்ற பள்ளியறைப் பூசையானது, மூலவர் சந்நிதியில் அர்த்தசாம பூசை முடிந்தவுடன், சயனபேரர் எனும் சின்னப் பெருமாளை மேளதாளத்துடன் பல்லக்கில் தாயார் சந்நிதிக்குக் கொண்டு வருகின்றனர். தாயார் சந்நிதியின் மங்கள ஆராத்திக்குப் பிறகு உற்சவ தாயாரான கருமாட்சியுடன் சயனபேரரும் வெள்ளி ஊஞ்சல் ஆடுகின்றனர். பூசைக்குப் பின் இருவரையும் பள்ளியறையில் வைக்கின்றார்கள். பள்ளியறைப் பூசையில் பசும்பால், வெல்லம், குங்குமப்பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட நிவேதனம் மக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இதனைக் குழம்பு பால் என்கின்றனர். மறுநாள் காலை சயனபேரரும், கருமாட்சியும் அம்மன் சந்நிதிக்கு கொண்டு வரப்படுகிறார்கள். கருமாட்சி தாயார் சந்நிதியில் இருக்க, சயனபேரரை மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்கின்றனர். இதன் பிறகே விஸ்வரூப தரிசனம் செய்யப்படுகிறது.