சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும்.
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய திட்டமிட்டார்கள். அதற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் பயன்படுத்திப் பாற்கடலைக் கடைந்தார்கள்.
ஒரு கட்டத்தில் வலி பொறுக்க இயலாத வாசுகி பாம்பு, ஆலகாலம் எனும் விசத்தினை கக்கியது.
அந்த ஆலகாலம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது.
சிவபெருமான் இருக்கும் இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பிச் சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுறுத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களைக் காத்தார்.
ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினைச் சுற்றிய விதத்தினை அடிப்படையாகக் கொண்டு, பிரதோச நாளில் சிவபெருமானை வழிபடும் முறை உருவானது. இம்முறையினையே, ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ என்கின்றனர்.
பிரதோச நாளில், சோம சூக்தப் பிரதட்சணம் முறையில் சிவபெருமானை வழிபடுபவர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி அனைத்து வளங்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.