இஸ்லாம் விதித்துள்ள ஐந்து கடமைகளை பிற சமயங்களும் வலியுறுத்தவேச் செய்கின்றன. இதை யாரும் மறுத்துரைக்க முடியாது.
1. இஸ்லாம் விதித்துள்ள ஈமான் எனும் இறை நம்பிக்கையை எந்த மதம் வலியுறுத்தவில்லை? உலகிலுள்ள சிறிய, பெரிய மதங்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆனால், இஸ்லாம் மட்டுமே ஒரே இறைவன்; உருவமற்றவன் என்பதை திட்டவட்டமாக வலியுறுத்துகிறது.
2. தொழுகை எனும் இறை வணக்கத்தை எல்லாச் சமயங்களும் வலியுறுத்திய போதிலும், இஸ்லாம் மட்டுமே ஒரு நாளைக்கு ஐந்து முறை என வரையறுத்திருப்பதோடு எப்போது தொழ வேண்டும்? எப்படித் தொழ வேண்டும்? என்பதற்குச் செயல் முறைகளையும் வகுத்தளித்துள்ளது.
3. நோன்பு எனும் விரதத்தை வலியுறுத்தாத சமயம் எதுவுமே உலகில் இல்லை. ஆனால், வைகறையிலிருந்து அந்தி நேரம் வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல் எதையும் உண்ணாமல் புகைக்காமல் ஒரு மாதம் முழுமையும் நோன்பு நோற்பதை இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வரையறையோடு கடைப்பிடிக்கப் பணிக்கிறது.
4. ஜகாத் எனும் தான தருமத்தை அனைத்துச் சமயங்களும் தம்மளவில் வலியுறுத்தவேச் செய்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டுமே ஜகாத், சதக்கா, ஃபித்ரா எனப் பிரித்து தானமளிக்கச் சொல்கின்றது. ஆனால், எந்தச் சமயமும் தானமளிப்பதைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தம் சொத்தில் நிகர வருமானம் உடையவர், அவ் வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் குறிப்பிட்ட ஏழை, எளியவர்கட்கு வழங்கக் கட்டாயமாக்கிக் கட்டளையிடுகிறது.
5. அதேபோல் ஹஜ் எனும் புனிதப் பயணத்தைப் போன்று அனைத்துச் சமயங்களும் புனிதப் பயணத்தை வற்புறுத்திய போதிலும் இஸ்லாம் மட்டுமே உடல் வலுவும், பொருள் வசதியும் உள்ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்கள் நகரிலுள்ள கஃபா எனும் இறையில்லம் சென்று மீள வேண்டும் எனப் பணிக்கிறது.
சுருங்கச் சொன்னால் இவ்வைந்து கடமைகளையும் மற்ற சமயங்கள் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் எனக் கூறுகின்றன. ஆனால், இஸ்லாமிய மார்க்கம் இவ்வைந்து பெரும் கடமைகளையும் இப்படித்தான் நிறைவேற்ற வேண்டும் என வரையறையோடு கூடிய செயல்பாடுகளை கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கக் கட்டளையிடுகிறது