கல்வத் என்பது இறைவனுடைய நினைவைத் தவிர்த்து, மற்ற எந்த வஸ்துவின் நினைப்பிலும் நம் இதயம் சென்றுவிடாமல் அதைப் பக்குவப்படுத்துவதற்கு நம்முடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து சிறிது காலம் தனி இடத்தில் ஒதுங்கி இருந்து இறை தியானிப்பில் ஈடுபதுவதற்கு கல்வத் என்று பெயர்.
மேலும் கல்வத் என்பது இறைவன் விஷேசமாக அருளுகின்ற வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில், அவன் யாரை கல்வத்துக்கு தெரிவு செய்திருக்கிறானோ, அவர்கள்தான் கல்வத்தை அனுஷ்டிக்க முடியுமே தவிர எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல.
கல்வத் பலவிதம் ஒருவரை கல்வத்தில் இருக்க அல்லாஹ் நாடிவிட்டால் அவரை எந்த வகையிலாவது கல்வத்தை மேற்கொள்ளச் செய்கிறான்.
1. சிலருக்கு மலைப் பொதும்பில் கல்வத் இருக்க வழிவகை செய்து கொடுக்கிறான்.
2. சிலருக்கு சிறையில் இருந்தவாறே கல்வத்தை மேற் கொள்ளச் செய்கிறான்.
3. சிலரை காட்டில் இருந்து கல்வத்தை மேற் கொள்ளச் செய்கிறான்.
4. சிலரை வீட்டிலிருந்தும் கல்வத்தை அனுஷ்டிக்க வைக்கிறான்.
5. சிலரை கந்தலாடையோடும் பறட்டைத் தலையுடனும் ஒரு பிச்சைக்காரன் போன்று அலையவைத்து அவருடன் மனிதர்கள் ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறான்.
இவ்வாறுதான் இவ்வுலகில் உதித்த உத்தம சீலர்களான அன்பியாக்கள், வலிமார்கள் அனைவருமே தங்களுடைய வாழ்க்கையில் கல்வத்தைக் கடைபிடித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் வரலாறுகள் காட்டும் உண்மையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கல்வத்
நமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் தாங்களுக்கு நுபுவ்வத் வெளிப்படுவதற்க்கு முன்பு கல்வத்தை மேற்கொண்டு மக்காவுக்கு பக்கத்திலுள்ள ஹிராக் குகையில் மனித சஞ்சாரங்களை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி, யாரும் அறியாத வண்ணம் தன்னந்தனியே இருந்து தவம் புரிந்து வந்த போதுதான் வானவர்கோன் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஹி கொண்டு வந்தார்கள் என்ற நீண்ட செய்தியை (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 3, மிஷ்காத் 521 பாபுல் மப்அத்தி) விவரமாக எடுத்துக் கூறுகிறது.
எனவே நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலைப் பொதும்பில் தனிமைகாத்தது போன்றே ஏனைய நபிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கல்வத்தை மேற் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
நபிமார்களின் கல்வத்
நபிமார்கள் அனைவரும் மேற் கொண்ட கல்வத்தின் குறிக்கோளும் நோக்கமும் ஒன்றுபட்டிருந்தாலும், கல்வத்தை அனுஷ்டித்த விதமும் அமைப்பும் நாம் ஏற்கனவேக் குறிபிட்டது போன்று வெவ்வேறானதாகவே இருந்துள்ளது. அல்லாஹ் யாரை எந்த வகையில் கல்வத்தை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினானோ, அந்த வகையில் அவர்கள் கல்வத் இருக்க வழி வகை செய்கிறான்.
* நபி யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் அவர்களை மீன் வயிற்றில் கல்வத் இருக்க வைத்தான்.
* நபி யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்களைச் சிறையில் தனிமை காக்க வைத்தான்.
* நபி மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் வேறு சில நபிமார்களையும் ஆடுமேய்த்தல் என்ற பெயரில் காடுகளில் கல்வத் இருக்க வழி வகை செய்து கொடுத்துள்ளான்.
* நபி ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை தன்னந்தனியே நெடுந்தரையில் நடந்த வண்ணமே கல்வத்தை மேற்கொள்ளுமாறு செய்துள்ளான்.
- இப்படி ஒவ்வொரு நபியையும் அவன் விரும்பிய வகையில் தனிமைக்காக வைத்து, தனது ஞானத்தையும் வேதத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.
அவ்லியாக்களின் கல்வத்
இது போன்றே ஆன்றோர்களான அவ்லியாக்களில் உயர் தரத்தை அடைந்தவர்களான குதுபுமார்களும் கண்டிப்பான முறையில் கல்வத்தை கடைப்பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் காடு வனாந்தரங்களிலும், குகைகளிலும், வேறு சிலர் தாம் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இருந்தும் கூட தனிமை காத்து வந்துள்ளார்கள்.
* மெய் நிலை கண்ட தவஞானி குதுபுல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு காடு வனாந்தரங்களில் கடுந்தவம் புரிந்தவர்களாய் கல்வத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
* நாகூர் ஷாஹுல் ஹமீது ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருச்சி தப்லே ஆலம் நத்ஹர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித தர்கா ஷரீபிலே கல்வத் இருந்துள்ளார்கள்.
ஆகவே, இறைவனின் நினைப்பிலும் நம் இதயம் செயல்பட்டு அதைப் பக்குவப்படுத்துவதற்கு நாம் முயற்சிப்போமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்...