முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொள்கிறார்களே... ஏன்? இந்த அரபி வாக்கியத்தின் முழுமையான பொருள் என்னவென்று தெரியுமா?
'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றால், ‘உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்பது பொருளாகும். இது முகமன் கூறுவதற்குப் பயன்படுகிறது. இதை ‘சலாம் சொல்லுதல்’ என்றும் சொல்வார்கள்.
தமிழில் "வணக்கம்" சொல்லும் முறைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. ஆம், தமிழில் ‘வணக்கம்’ என்று சொன்னால், பதிலுக்கு நாமும், ‘வணக்கம்’ சொல்லிவிடலாம்.
ஆனால், முஸ்லீம்கள் சந்திப்பின் போது, ஒருவர், ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொல்லும் பொழுது, மற்றொருவர் அதற்குப் பதிலாக, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொல்வதில்லை. அவருக்குப் பதிலாக, "வ அலைக்கும் (முஸ்) ஸலாம்" என்று கூறுவார்கள். அரபி மொழியிலான இவ்வாக்கியத்திற்கு, "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்று பொருளாகும்.
முஸ்லீம்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது மட்டுமின்றி, பிரியும் பொழுதும் சலாம் சொல்ல வேண்டும் என்கிறது இஸ்லாம்.
இந்த முகமன் கூறுதலை அனைத்து நேரங்களிலும் பயன்படுத்துவார்கள். அதாவது, சாதாரணமாக சந்திக்கும் பொழுது, திருமணங்களுக்குச் செல்லும் பொழுது, வீட்டினுள் நுழையும் பொழுது, இறந்தவர் வீட்டுக்குச் செல்லும் பொழுது இப்படி அனைத்து நேரங்களிலும் சலாம் சொல்ல வேண்டும்.
இருவர் சண்டையிட்டுக் கொண்ட நிலையில், அவர்களை இசுலாமியப் பெரியவர்கள் சமாதானப்படுத்தி வைக்கும் பொழுது, "அவருக்கு சலாம் சொல்லுங்கள்" என்று சொல்லி, சலாம் சொல்ல வைத்து இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கிச் சேர்த்து வைப்பதுமுண்டு.
இந்த சலாம் சொல்வதற்கும், சில கடமையும் விதிகளும் இருக்கின்றன.
* ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும் பொழுது "கண்டிப்பாக" சலாம் சொல்ல வேண்டும்.
* சலாம் சொல்லும் பொழுது, மற்றவருக்கு விளங்கும்படிக் கூற வேண்டும். விளங்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் கூற வேண்டும்.
* அதற்கு பதில் கூறுபவர், அவருக்குப் பதில் கூற வேண்டும். அவர் கூறியதைப் போல, அல்லது அதை விட அழகானதைக் கூற வேண்டும்.
* கூட்டத்தினரைப் பார்த்து தனியாய் வருபவர் சலாம் சொல்லுதல் வேண்டும், இருக்கையில் இருப்பவரைப் பார்த்து நிற்பவரும், நிற்பவரைப் பார்த்து நடப்பவரும், நடப்பவரைப் பார்த்து ஓடுபவரும் என்ற வரிசையில் சலாம் கூற வேண்டும்.
இதே போன்று, நண்பர்கள் உறவினர்கள் தூரத்தில் வசிப்பார்களேயானால், அவர்களை மற்றவர்கள் சந்திக்கச் செல்வதை அறிந்தால், செல்பவரிடம் "அவருக்குச் சலாம் சொன்னதாகச் சொல்லுங்கள்" என்று சொல்லி அனுப்ப வேண்டும். அதை, அவர் கேள்விப்படும் போது நேரில் பார்த்தால் பதில் கூறுவது போன்றேக் கூற வேண்டும்.
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைப் (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது, அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும், உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று, அதாவது, உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாகக் கூறினார்கள். இப்படித்தான் முதல் சலாம் தொடங்கியது என்கின்றனர்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை மனிதப் படைப்புகள், (உருவத்திலும், அளவிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.