நபி பெருமானாரவர்கள் தானத்தைப் பற்றி கீழ்க்காணும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
1. பசியோடு இருப்போருக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளிடம் சென்று நலம் விசாரியுங்கள். நியாயமற்ற முறையில் சிறைப்பட்டிருக்கும் கைதிகளுக்கு விடுதலை அளியுங்கள். கஷ்டப்படுவோர், முசுலீமாக இருந்தாலும், முசுலீம் அல்லாதவராக இருந்தாலும், உதவி செய்யுங்கள்.
2. ஒருவருக்குத் தாகம் தீர்க்கக் கிணறு வெட்டுவதும் தானமே.
3. ஒவ்வொரு நல்ல செயலும் தானமே. புன்முறுவலுடன் உங்கள் சகோதரர்களை நோக்குவதும் தானமே. உங்களுடனுள்ள மனிதர்களை நல்ல செயல்கள் செய்யும்படி தூண்டுவதும் தானமே. திசை தெரியாமல் அலைவோரை சரியான வழியில் கொண்டு வருவதும் தானமே. குருடர்களுக்கு வழிகாட்டி உதவுவதும் தானமே. தன்னுடைய மனிதருக்கு ஒருவன் இம்மையில் செய்யும் நன்மையே மறுமையில் அவனுக்குள்ள உண்மையான செல்வம். அவன் இறந்தால், “அவன் என்ன செய்துவிட்டுப் போனான்?” என்று மனிதர்கள் கேட்பார்கள். ஆனால், அவனைப் புதை குழியில் விசாரிக்கும் மலக் வானவர்களோ, “உனக்கு முன்னதாக நீ என்ன நல்ல செயல்களை அனுப்பியிருக்கிறாய்” என்று கேட்பார்கள்.
4. அல்லா பூமியைப் படைத்த பொழுது அது அசைந்து நடுங்கியது. உறுதியாக நிலை நிறுத்தி அதன் மேல் அவன் மலைகளை வைத்தான். பிறகு வானவர்கள் இறைவனிடம், “இறைவா! உன் படைப்பில் இந்த மலைகளை விட வலிமையுள்ளது எது?” என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக, “மலைகளை விட இரும்பு வலிமையுள்ளது.ஏனென்றால் அது அவற்றை உடைக்கிறது” என்றான். பின்னர் வானவர்கள், “இரும்பை விட வலிமையானது எதுவும் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், “ஆம், நெருப்பு இரும்பை விட பலமுள்ளது. ஏனெனில், அது இரும்பை உருக்கி விடுகின்றது” என்றான். மறுபடியும் வானவர்கள், “இறைவா, நெருப்பை விட வன்மை அதிகமுள்ளது வேறு ஏதும் உண்டா?” என்று வினவினார்கள். “ஆம் தண்ணீர் இருக்கிறது. ஏனென்றால், அது நெருப்பை அணைத்து விடுகிறது” என்றான் இறைவன். உடனே வானவர்கள், “தண்ணீரை விட வலைமையானது வேறு ஏதும் இருக்கிறதா?” என்றூ கேட்டார்கள். இறைவனும், “ஆம். காற்று இருக்கிறதே. அது தண்ணீரை வெற்றி கொண்டு அலையாடச் செய்து விடுகிறது” என்றான். அதன் பின்னர் வானவர்கள், “இறைவா, காற்றை விட வலிமையானது எதுவும் உன் படைப்பில் இருக்கின்றதா?” என்று கேட்டனர். கடைசியாக இறைவன், “ஆம், தானம் செய்யும் நல்ல மனிதன். இடது கையால் தானம் செய்து, அதை வலது கையிலிருந்து மறைப்பவன். அவன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வான்” என்றான்.