இசுலாமியர்களின் புனித நூல் குரான் அல்லது திருக்குரான் எனப்படுகிறது. இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் அவ்வப்போது சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாக விளங்கும் குரான் ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில் இறுதியானது என்றும், முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.
முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை அவ்வப்போது மற்றவர்களுக்கு கூறி வந்தார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் சையத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைபடியாகத் தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டது. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக இருக்கின்றன.
குரான், இயல்பில் ஒரு ஒலி வடிவத் தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களைப் போல் இல்லாமல், ஒருவர் மற்றவற்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாகத் தன்னிலை மற்றும் படர்க்கைச் சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் சில வசனங்கள் அழுத்தத்திற்காக பல இடங்களில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.
குரான் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பாக இருப்பதால், இதை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கின்றனர். இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் எனப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114 ஆக இருக்கிறது. இவை அரபியில் சூரா என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன. அவை;
1. தோற்றுவாய்
2. பசு மாடு
3. இம்ரானின் சந்ததிகள்
4. பெண்கள்
5. ஆகாரம்
6. ஒட்டகம்
7. சிகரங்கள்
8. வெற்றிப்பொருள்கள்
9. மன்னிப்பு தேடுதல்
10. யூனுசு
11. யூது
12. யூசுப்
13. இடி
14. இப்ராகிம்
15. மலைப்பாறை
16. தேனீ
17. இசுராயீலின் சந்ததிகள்
18. குகை
19. மர்யம்
20. தாஃகா
21. நபிமார்கள்
22. புனிதப் பயனம்
23. விசுவாசிகள்
24. பேரொளி
25. பிரித்தறிவித்தல்
26. கவிஞர்கள்
27. எறும்புகள்
28. வரலாறுகள்
29. சிலந்தி
30. ரோமப் பேரரசு
31. லுக்மான்
32. சிரம் பணிதல்
33. சதிகார அணியினர்
34. சபா
35. படைப்பவன்
36. யாசீன்
37. அணிவகுப்புகள்
38. சாத்
39. கூட்டங்கள்
40. ஈமான் கொண்டவர்
41. ஃகாமீம் சசிதா
42. கலந்தாலோசித்தல்
43. பொன் அலங்காரம்
44. புகை
45. முழந்தாளிடுதல்
46. மணல் திட்டுகள்
47. முகம்மது
48. வெற்றி
49. அறைகள்
50. காஃப்
51. சூராவளி
52. மலை
53. நட்சத்திரம்
54. சந்திரன்
55. அளவற்ற அருளாளன்
56. மாபெரும் நிகழ்ச்சி
57. இரும்பு
58. தர்க்கித்தல்
59. ஒன்று கூட்டுதல்
60. பரிசோதித்தல்
61. அணிவகுப்பு
62. வெள்ளிக் கிழமை
63. நயவஞ்சகர்கள்
64. நட்டம்
65. விவாகரத்து
66. விலக்குதல்
67. ஆட்சி
68. எழுதுகோல்
69. நிச்சயமானது
70. உயர்வழிகள்
71. நூகு
72. ஃசின்கள்
73. போர்வை போர்த்தியவர்
74. போர்த்திக்கொண்டிருப்பவர்
75. மறுமை நாள்
76. காலம்
77. அனுப்பப்படுபவை
78. பெரும் செய்தி
79. பறிப்பவர்கள்
80. கடுகடுத்தார்
81. சுருட்டுதல்
82. வெடித்துப் போதல்
83. நிறுவை மோசம் செய்தல்
84. பிளந்து போதல்
85. கிரகங்கள்
86. விடிவெள்ளி
87. மிக்க மேலானவன்
88. மூடிக் கொள்ளுதல்
89. விடியற்காலை
90. நகரம்
91. சூரியன்
92. இரவு
93. முற்பகல்
94. விரிவாக்கல்
95. அத்தி
96. இரத்தக்கட்டி
97. கண்ணியமிக்க இரவு
98. தெளிவான ஆதாரம்
99. அதிர்ச்சி
100. வேகமாகச் செல்லுபவை
101. திடுக்கிடசெய்யும் நிகழ்வு
102. பேராசை
103. காலம்
104. புறங்கூறல்
105. யானை
106. குறைசிகள்
107. அற்பப் பொருட்கள்
108. மிகுந்த நன்மைகள்
109. காபிர்கள்
110. உதவி
111. சுடர்
112. ஏகத்துவம்
113. அதிகாலை
114. மனிதர்கள்
குரானில் இருக்கும் 114 அத்தியாயங்களும் அளவில் ஒத்ததாக இல்லாமல், சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் இருக்கின்றன. பொதுவாக இவற்றில், மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றைப் பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிவிக்கின்றன.