இறை வணக்கம் மனித இயற்கையில் இருக்கிறது
மனிதனுக்குத் துன்பம் வந்து விட்டால், அவன் இறைவன்பால் திரும்பி, பிரார்த்தனை செய்கிறான். (ஜூமர் - 39:8)
இலட்சியத் தொழுகை
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாவின் பெயரால் எல்லாப் புகழும் அல்லாவுக்கே. அகிலங்கள் அனைத்திற்கும் இரட்சகன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எங்களுக்கு நீ அருள் புரிந்தாயோ, அவர்களுடைய வழியில் நடத்துவாயாக. அது உன் கோபத்திற்குள்ளானவர்களுடையதும் அல்ல. வழி தவறியவர்களுடையதும் அல்ல. (அல்.ஃபாத்திஹா - 1:7)
ஆபத்தில் தொழுகை
நீங்கள் ஆபத்தில் இருந்தால், அப்பொழுது நீங்கள் நடந்து கொண்டும், வாகனத்தில் பயணம் செய்து கொண்டும் தொழுது கொள்ளுங்கள். (பகறா - 2:239)
பயணத்திலும் போர்க்களத்திலும் தொழுகை
(விசுவாசிகளே!) நீங்கள் பூமியில் பயணம் செய்யும் பொழுது, நிராகரிப்போர் உங்களைத் துன்புறுத்துவார்கள் என்று நீங்கள் அச்சங் கொண்டால், நீங்கள் (கஸர், தொழுவது, அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் குற்றமாகாது. ஏனென்றால், நிராகரிப்போர் உங்களுக்கு வெளிப்படையான விரோதிகளாக இருக்கிறார்கள்.
(நபியே!) போர்க்களத்தில் நீரும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தங்களுடைய ஆயுதங்களைத் தங்கள் கையில் பிடித்துக் கொண்டே உம்முடன் தொழுவார்களாக. இவர்கள் உம்முடன் தொழுது ஸஜ்தா செய்து விட்டால் தொழுகையின் வரிசையிலிருந்து விலகி, உங்கள் பின்புறம் நின்று உங்களைக் காவல் காப்பார்களாக. (அப்பொழுது) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தார் வந்து உம்முடன் சேர்ந்து தொழுவார்களாக! எனினும் அவர்களும் தங்கள் கைகளில் ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (நிஸா - 4:101)
தஹஜ்ஜூத் நடுநிசித் தொழுகை
நபியே! இரவில் சிறிது பாகத்தில் நித்திரையிலிருந்து எழுந்து கொண்டு தொழுது கொள்வீராக! இதனால் மிக்க புகழ் பெற்ற ஸ்தானத்தில் உம் இறைவன் உம்மை அமர்த்தலாம். (பனி இஸ்ராயில் - 17:79)
தொழுகை பாவத்தை போக்குகிறது
நிச்சயமாக, மானக்கேடான செயல்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தொழுகை மனிதனை விலக்குகின்றது. (அன்கபூத்-29:45)
உங்கள் பிரார்த்தனையை இறைவன் கேட்கிறான்
நீங்கள் என்னையே அழையுங்கள். நான் (அல்லாஹ்) உங்களுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பேன். (முஃமின் - 40:60)
உலு (சுத்தி செய்தல்) அவசியம்
விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்காக எழுந்திருக்கும் பொழுது, உங்கள் முகங்களையும், முழங்கை வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் கையில் நீரைத் தொட்டு உங்கள் தலையில் தடவி மஸஹு செய்து கொள்ளுங்கள்... உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணை உங்கள் கைகளால் தொட்டு அதனால் உங்கள் முகத்தையும், கைகளையும் துடைத்து தயம்மும் செய்து கொள்ளுங்கள். (மாயிதா - 5:6)
எப்பொழுது தொழ வேண்டும்?
நபியே! நித்திரையிலிருந்து எழுந்த நேரத்தில் உமது இறைவன் புகழைக் கூறித் துதி செய்து கொண்டிருப்பீராக! இரவில் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் காலை நேரத்திலும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (நூர் - 52:48, 49)
லுஹர், அஸர், கிஷா, ஃபஜ்ர், தஹஜ்ஜூத்.
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய நேரங்களின்) தொழுகைகளைத் தொழுது வாரும். ஃபஜ்ர் தொழுகையையும் தொழுது வாரும். ஏனென்றால், ஃபஜ்ர் தொழுகை உள்ளத்திற்குப் பிரகாசத்தையும், அமைதியையும் கொடுக்கும்.
தஹஜ்ஜூத் தொழுகையை நீர் நஃபிலாக இரவின் ஒரு சிறிது பாகத்தில் தொழுது வருவீராக. (பனீ இஸ்ராயில் - 17: 78, 79)
ஐந்து பர்ல், இரண்டு நஃபில் தொழுகைகள்
சூரியன் உதிப்பதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவுக் காலங்களிலும், (நபியே! நீர்) உம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பீராக! இவ்வாறே பகலின் இரு முனைகளிலும் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பீராக! இதனால், நீர் ஆத்மீகத் திருப்தி அடையலாம். (தாஹா - 20:130)
மாலைத் தொழுகைகள், லுஹர், அஸர், மக்ரிப், இஷா
(நபியே!) பணிவுடனும், பயத்துடனும் உரத்த குரலில்லாமல் மெதுவாகவும், காலையிலும், மாலையிலும் உமது ரட்சகனுடைய பெயரைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (அஃராஃப் -7:205)
தொழுகைக்குப் பிறகும் இறைவன் துதி
நபியே! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது அஸ்தமிக்கு முன்னரும் உமது இரட்சகனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பீராக! இரவில் ஒரு பாகத்திலும் ஒவ்வொரு முறையும் சிரம் பணிந்து தொழுவதற்குப் பிறகும் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! (காஃப் - 50:39,40)
ஆண்டவனைப் புகழுங்கள்
காலையிலும், மாலையிலும் ஆண்டவனைப் புகழுங்கள்.
தொழுகை நேரங்கள்
பகலில் இரு முனைகளாகிய காலை மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் தொழுது வாருங்கள். (ஹூத் - 11:11)
பிற்பகலிலும் காலையிலும் உமது இரட்சகனைப் புகழ்வீராக!
(நபியே!) உமது இரட்சகன் திர்நாமத்தை காலையிலும், மாலையிலும் கூறித் துதி செய்து கொண்டிரும். (தஹர் - 76:25)
விசுவாசிகளே! தொழுகைகளையும், குறிப்பாக மத்தியத் தொழுகையான அஸர் தொழுகையையும், காலம் தவறாமல் தொழுது கொள்ளுங்கள். மேலும் அல்லாவுக்கு அஞ்சி, மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (பகறா - 2:238)
விசுவாசிகளே! அடிக்கடி அல்லாவைத் துதி செய்யுங்கள். காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். (அஹ்ஸாப் - 33:41, 42)
எப்படி தொழ வேண்டும்?
நபியே! நீர் தொழும் பொழுது, மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! விசுவாசிகளே! நீங்களும் எங்கிருந்த போதிலும் தொழும் போது, அதன் திசையிலேயே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக! (பகறா - 2:144)
தொகை நேரத்தில் விரோதிகளுக்கு நீங்கள் பயந்தால் நடந்து கொண்டும், வாகனத்தில் அமர்ந்து கொண்டும் தொழுங்கள் (பகறா - 2:239)
-சையித் இப்ராஹிம் தொகுத்த "குர் ஆன் போதனைகள்" நூலிலிருந்து கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.