தீபாவளித் திருநாளும் சில கதைகளும்
தீபம் + ஆவளி என்பதன் சேர்க்கையே தீபாவளி. தீபங்களின் வரிசை என்று பொருள் தரும் தீபாவளி இன்று பல சமயத்தவரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளித் திருநாள் எனும் விழாவிற்கு மக்களிடையே பல்வேறு கதைகள் வழங்கி வருகின்றன. சமயங்களுக்கேற்றவாறு வழங்கப்படும் இக்கதைகளுள் சில கதைகளைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.
நரகாசுரன் அழிவு
பூமாதேவியின் மகன் நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாவிடம் வரம் வேண்டி தவமியற்றினான்.
நரகாசுரனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா நரகாசுரனிடம், “என்ன வரம் வேண்டுமென்று...?” கேட்க, அவனோ, “தன்னுடைய தாயைத் தவிரத் தனக்கு வேறு எவராலும் மரணம் வரக் கூடாது” என்று வரம் வாங்கினான்.
தான் பெற்ற வரத்திற்குப் பின்பு தேவர்கள், நாட்டு மக்கள் என்று அனைவரையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.
இரவு நேரங்களில் வீட்டில் யாரும் விளக்கு ஏற்றி ஒளியூட்டக் கூடாது என்பது உட்பட பல வித்தியாசமான நடைமுறைகளையும் செயல்படுத்தினான்.
பல்வேறு தொல்லைகளுக்குள்ளான மக்கள் நரகாசுரனிடமிருந்து தங்களுக்கு விடிவு வேண்டி இறைவன் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர்.
இறைவன் கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.
கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் கிளம்பினார். அவருக்குத் துணையாக சத்தியபாமா தேரோட்டிச் சென்றார்.
கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் போர் தொடங்கியது. அப்போது நரகாசுரன் தொடுத்த ஒரு அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையத் தொடங்கினார்.
இதனைக் கண்ட சத்தியபாமா கோபத்துடன் கிருஷ்ணரிடமிருந்த வில் அம்பை எடுத்து நரகாசுரனின் நெஞ்சுக்குக் குறி வைத்து அம்பை எய்தினார்.
அந்த அம்பு நரகாசுரனின் நெஞ்சில் பாய்ந்தது. அவன் அம்மா என்று அலறினான்.
அப்போதுதான் சத்தியபாமாவிற்குத் தான் பூமாதேவியின் அவதாரம் என்பதும், நரகாசுரன் தன்னுடைய மகன் என்பதும், அவன் பிரம்மாவிடம் தன் தாயால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் வாங்கியிருந்ததும் நினைவுக்கு வந்தன.
தனது மகன் மரணத்திற்குத் தானே காரணமாகி விட்டோமே என்று அவள் வருந்தினாள்.
இதனைக் கண்ட நரகாசுரன், “தாயே, என் மரணத்தைக் கண்டு வருத்தமடைய வேண்டாம். பிரம்மாவிடம் வரம் பெற்ற பின்பு தான் மக்களுக்கு செய்த பல்வேறு கொடுமைகளுக்கு எனக்குச் சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. நான் மக்களை இரவு நேரங்களில் கூட ஒளியேற்றக் கூடாது என்று தடை செய்திருந்தேன். இனியாவது அவர்கள் தங்கள் வீடுகளில் ஒளியேற்றிக் கொண்டாடட்டும். என்னுடைய இறப்பு நாளைத் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடி மகிழ்ந்திட வரம் அளித்திட வேண்டும்” என்று வேண்டினான்.
சத்யபாமாவும் அவன் வேண்டிய வரத்தை அளித்தாள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது என்கின்றனர்.
நாடு திரும்பிய நாள்
கைகேயின் சூழ்ச்சியால் இராமர் 14 ஆண்டுகள் வன வாசம் செல்ல நேர்ந்தது. இராமருடன் காட்டிற்குச் சென்ற சீதை இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு விடுகிறார். சீதையைப் பிரிந்த இராமர், பின்னர் வானரங்களின் உதவியுடன் இராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு திரும்புகிறார். 14 ஆண்டு கால வனவாசம் முடிந்து இராமரும் சீதையும் நாடு திரும்பும் நாள்தான் தீபாவளித் திருநாள். எனவே அவர்களை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடினர். இந்தத் திருநாள்தான் தீபாவளித் திருநாள் என்று தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்கின்றனர் சிலர்.
இரணியன் அழிவு
மகாவிஷ்ணு தனது நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தில் இரணியனை அழித்து, உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்கின்றனர் சிலர். சிலர் கிருஷ்ணன் ஆணைப்படி மகாபலி கீழ் உலகத்தில் இருந்து பூமிக்கு வந்த நாள் என்றும் சொல்வதுண்டு.
அர்த்த நாரீஸ்வரர் காட்சி
இந்து சமயத்தில் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள், சிவபெருமான், "அர்த்தநாரீஸ்வரர்” தோற்றத்தில் காட்சியளித்த நாள்தான் தீபாவளி என்கின்றனர்.
சிறையிலிருந்து விடுதலை
சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளையே தீபாவளி என்று கொண்டாடுவதாகச் சீக்கிய சமயத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மகாவீரர் வீடுபேறு நாள்
சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர் என்று போற்றப்படும் வர்த்தமான மகாவீரர், ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று வீடுபேறு பெற்றார். அந்த நாளைச் சமண சமயத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று அப்போதைய சமண சமயத்தைச் சேர்ந்த மன்னர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அன்றிலிருந்து தீபஒளித் திருநாள் சமண சமயத்தவர்களால் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்கின்றனர் சமண சமயத்தினர்.
பண்டைய குறிப்பு
இந்தியச் சமயங்களுக்கான பண்டைய இலக்கியங்களில் தீபாவளி எனும் விழா குறித்த தகவல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமண முனிவர் பத்ரபாகு முனிவர் என்பவரால் எழுதப்பட்ட "கல்ப சூத்திரம்' என்னும் பிராகிருத நூலில்,
"மகாவீரர்" என்ற ஞான ஒளி மறைந்துவிட்டதால், தீப விளக்கையாவது ஏற்றி வைப்போம்" என்று காசி, கோச மக்களும், பதினாறு கண அரச மக்களும், தங்கள் வீடுகளின் முன் தீபம் ஏற்றி வைத்தார்கள்"
என்கிற குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.
இந்தச் சமண சமய இலக்கியத்திற்கு முன்பாக பிற சமய இலக்கியங்கள் எதிலும் தீபாவளி குறித்த குறிப்புகள் எதுவுமில்லை என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளக் கூடியது.
-கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.