அமெரிக்காவில் தி மேட்ரிக்ஸ் எனும் அறிவியல் புனைகதையைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று வெளியானது. இப்படத்தை லேரி மற்றும் ஆன்டி வச்சோவ்ஸ்கி என்பவர் எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கேயானு ரீவ்ஸ், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், கேரி-ஆன் மோஸ், ஜோ பன்டோலியானோ மற்றும் ஹ்யூகோ வீவிங் போன்றோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கதையால் கவரப்பட்டவர்கள் சிலர் இந்தப் படத்தின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு 2003 ஆம் ஆண்டில் மேட்ரிக்சிசம் (Matrixism) எனும் புதிய சமயத்தைத் தொடங்கினர்.
இந்த சமயத்தின் முக்கியக் கொள்கைகளாக
1. ஒருமை எனும் தீர்க்கதரிசனத்தில் நம்பிக்கை கொள்வது.
2. மனவிரிவாக்க மருந்துகளைப் பயன்படுத்துவது புனிதமானது எனக் கொள்வது.
3. உலகின் ஒப்பியல் தன்மையைப் புரிந்து கொள்வது.
4. உலகின் பயன்பாட்டிலுள்ள மதக் கொள்கைகளில் ஏதாவதொன்றைக் கடைப்பிடித்து அதன்படி நடந்து கொள்வது.
எனும் நான்கு நான்கு விதிகளையும் இவர்கள் உருவாக்கினர்.
இந்த சமயம் அனைத்துச் சமயங்களையும் இணைக்கும் ஒரு இணைப்புச் சமயமாகவே இருக்கிறது. இந்தச் சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் “தி மேட்ரிக்ஸ்” ஆங்கிலப் படத்தையேப் புனித நூலைப் போன்று போற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சமயத்திற்குச் சிகப்பு நிறத்திலான சப்பானிய எழுத்து ஒன்றே குறியீடாக இருக்கிறது. இந்தச் சமயத்தினர் உலக மிதிவண்டி நாளான ஏப்ரல் 14 ஆம் நாளைப் புனித நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். 2005 ஆம் ஆண்டில் இந்த சமயத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக இருந்தது. தற்போது உலகில் இந்த சமயத்தினைக் கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாயிரமாக அதிகரித்திருக்கிறது.