இந்தப் புவியிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் எல்கோம் எனப்படும் வெளிக்கோள் வாசிகளால் உருவாக்கப்பட்டவை. வெளிக்கோள் வாசிகளான எலோகிம்கள் மனிதர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கிக் கொண்ட போது, இவர்களை மனிதர்களெல்லாம் கடவுளாகக் கருதி வழிபடத் தொடங்கினர் என்றும், இயேசு, புத்தர் மற்றும் பலர் எலோகிமின் தூதுவர்கள் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட சமயம் ரேயிலிசம் (Raelism) என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரேயிலிசத்தின் நிறுவனராக குளோட் வொரில்கோன் (Claude Vorilhon) எனப்படும் ரேல் (Rael) என்பவர் இருந்து வருகிறார். இவர் 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 அன்று பிரான்சில் பிறந்தார். இவர் இளம் வயதில் பாடகராகவும், பின்னர் பந்தய மகிழுந்து ஓட்டுநராகவும் (Race Car Driver) செயல்பட்டு வந்தார். இவர் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று தனது 27 ஆம் வயதில் பிரான்சிலுள்ள எரிமலைப் பூங்கா ஒன்றில் வேற்றுக்கோள் வாசி ஒருவரை எதிர்பாராமல் சந்தித்ததாகவும், அதன் மூலம் சில உண்மைகளைப் பெற்றதாகவும் தெரிவித்தார். இதன் பிறகு, இவர் தனது பெயரை “எலோகிமின் தூதுவர்” எனும் பொருளில் ரேல் (Rael) என்று மாற்றம் செய்து கொண்டார்.

இவர் தான் கண்டறிந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ரேலிய இயக்கம் (Raelian Movement) எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 அன்று தனது முதல் கூட்டத்தைப் பாரிசில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் 2000 பேர் வரை கலந்து கொண்டனர். அதன் பிறகு, 1974 ஆம் ஆண்டு இறுதி வரை சுமார் 170 நபர்கள் இவரது கொள்கையை ஏற்றுக் கொண்டு இவரது வழிமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். ரேலிய இயக்க வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து இந்த இயக்கம் ரேலியிசம் எனும் பெயரில் புதிய சமயமாக மாற்றம் கண்டது.
உலக அமைதி, பகிர்வு, மக்களாட்சி மற்றும் வன்முறையில்லா அறவழி போன்றவைகளை முக்கியமான நெறிமுறைகளாகக் கொண்டிருக்கும் ரேலியிசத்தில் பாலியலும் முக்கியப் பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இந்தச் சமயத்தின் இலச்சினையாக முதலில் சுவசுதிக் வடிவத்தை உள்ளடக்கிய நட்சத்திரம் இருந்தது. பின்னர், சுவசுதிக் வடிவத்திலிருந்து சிறிது மாற்றம் கொண்ட நட்சத்திரமாக மாற்றம் செய்யப்பட்டது.

இந்தச் சமயத்தின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இருக்கிறது. இந்தச் சமயத்தில் 97 நாடுகளைச் சேர்ந்த 70000 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சமயத்தினர் 2035 ஆம் ஆண்டில் வெளிக்கோள்களிலிருந்து இந்தப் புவியில் உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்த படைப்பாளர்களான எலோகிம்கள் வரவிருப்பதாகவும், அவர்களை வரவேற்பதற்கு இரண்டு நிபந்தனைகளை முழுமையாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். ஒன்று, நாம் அவர்களை வரவேற்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும். இரண்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பாக இருக்கும் சில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எலோகிம்களை சந்தித்து அறிவியல் பூர்வமான பல ஆற்றல்களைப் பெறலாம். இல்லையெனில், மனிதன் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இவர்கள் எலோகிம்களை வரவேற்பதற்காகத் தூதரகம் (Elohim Embassy) ஒன்றையும் அமைத்திருக்கின்றனர்.