அய்யா வைகுண்டர் மனிதர்களின் மனதைச் சுத்தம் செய்யவும், உடலைச் சுத்தம் செய்யவும், மனதின் சகலவிதமான பாவங்களைப் போக்கவும், மனிதர்கள் தங்களுக்குள்ளே காணப்படும் பகைகளைக் களைந்து சகோதரத்துவத்தையும், நட்பையும் ஏற்படுத்திட, ஏற்படுத்திய வழிபாட்டு முறையே துவையல் பந்தி வழிபாடு எனப்படுகின்றது.
அய்யா வைகுண்டர் தவத்தின் ஐந்தாவது வருடக் கடைசியில் கன்னியாகுமரிக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள வாகை பதியில் தனத தவம் நிறைவடையும் வண்ணம் தனது சீடர்களிடம் துவையல் பந்தி வழிபாட்டை நடத்துமாறு கூறினார்.
அய்யா வைகுண்டர் கூறியபடி துவையல் பந்தி வழிபாட்டை நடத்திட சுமார் எழுநூறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாகை பதி சென்று துவையல் பந்தி வழிபாட்டை மேற்கொண்டனர்.
இத்துவையல் பந்தி வழிபாடு ஆறு மாதங்கள் நடைபெற்றது.
துவையல் பந்தியில் கலந்து கொண்டவர்கள் அய்யா வைகுண்டர் கூறியபடி கடலில் காலை, மாலை நீராடுவதையும், காலை, நண்பகல், மாலை வேளை தங்கள் ஆடைகளை சுத்தம் செய்து உடுத்துவதையும் முறையாகத் தவறாமல் செய்து வந்தனர். அத்தோடு நண்பகல் ஒரு வேளை உணவை மட்டுமே உட்கொண்டும் வந்தனர்.
அரிசியும், சிறபயறும் கலந்து, கடல் வெள்ளத்தில் வேக வைத்த கஞ்சியே அவர்களது ஒரு நேர உணவாக இருந்தது.
வாகை பதியில் குழுமியிருந்த மக்கள் அனைவரும் கடலில் நீராடி வழிபாடு முடித்த பின்னரே உணவு உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இவ்வழிபாட்டால் அய்யா பக்தர்களுக்கு வியாதியும், சிலர் மரணமடையவும் நேரிட்டது.
அதனால் பக்தர்கள் அய்யா வைகுண்டரிடம் முறையிட்டனர்.
உடனே அய்யா வைகுண்டர் அவர்களது கனவில் தோன்றி முட்டப்பதிக்குச் செல்லும்படிக் கூறினார்.
அய்யா வைகுண்டர் கூறியபடி அன்பர்களும் முட்டப்பதி சென்று அதே வழிபாடுகளை மேற்கொண்டனர். முட்டப்பதியில் உணவு சமைக்கவும் குளிக்கவும் உடைமையைச் சுத்தம் செய்யவும் நல்ல தண்ணீரைப் பயன்படுத்தும்படி அய்யா வைகுண்டர் கூறினார். அதன்படி அன்பர்களும் செய்து வந்தனர்.
அன்பர்களது இவ்வழிபாடு நிறைவேறக் கூடாது என எதிரிகள் பல தடைகளையும் ஏற்படுத்தினர்.
அத்தடைகளை எல்லாம் அய்யா வைகுண்டர் தவிடு பொடியாக்கி துவையல் பந்தி வழிபாடு நிறைவேற வழிவகை செய்தார்.
அன்பர்களும் அய்யா வைகுண்டரின் அருளால் துவையல் பந்தி வழிபாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
கலியனிடமிருந்து மக்கள் தங்கள் மனதினைக் காத்துக் கொள்ளும்படியே அய்யா வைகுண்டர் தம் மக்களிடம் இவ்வழிபாட்டை மேற்கொள்ளச் சொன்னார் எனலாம்.
இத்தவத்தின் பின்னரே அய்யா வைகுண்டர் நெற்றியில் நாம்ம் அணியும் வழக்கத்தை மேற்கொண்டார்.