தமிழர்களின் வழிபாட்டில் முச்சுடர் வழிபாடு முக்கித்துவம் வாய்ந்தது.
பகவத்கீதையில் கிருஷ்ணர், “மதியில் ரவியில் ஒளியும் யான்” என்றும், “தீயின் ஒளியும் ஆகின்றேன்” என்றும் கூறுகின்றார்.
பூதத்தாழ்வார் நாரயணரை “ஒளியுருவம் நின்னுருவம்” என்கிறார். அகிலத்திரட்டு, திருமாலை “சோதியே வேதச்சுடரே” (அகிலம். தொகு. 1 பக் 112) என்றும், வைகுண்டரை “சிவ சோதி உமக்கபயம்” (அகிலம். தொகு. 2 பக். 98) என்றும் கூறுகின்றது.
திருமாலும் வைகுண்டரும் ஒளி உடம்பாகக் காட்சியளித்த செய்திகளும் (அகிலம். தொகு. 2 பக்.32, அருள். பக்.66) இடம் பெற்றுள்ளன.
ஒளி வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தவே திருமாலும், வைகுண்டரும் ஒளி உடம்பாகக் காட்சியளித்தார் எனலாம்.
வைகுண்ட சுவாமியின் பதிகளின் பள்ளியறையில் ஒரு நிலைக் கண்ணாடி வைக்கப்பட்டு, அதன் இரு பக்கங்களிலும் திருவிளக்கும் வைத்துத் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
தெளிந்த மன உணர்வுடன் வழிபாடு அமைய வேண்டும் என்பதன் குறியீடாகக் கண்ணாடி வழிபாடு அமைகிறது எனலாம். ஒவ்வொரு மனிதர்களும் தம்மில் குடி கொண்டுள்ள நன்மைகளையும், உண்மைகளையும், கருணை மனதையும் கண்டு கொள்ளவே, அய்யா வைகுண்டர் கண்ணாடி வழிபாட்டினையும், ஒளி வழிபாட்டினையும் ஏற்படுத்தினார் எனலாம். கண்ணாடி வழிபாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை அய்யா வைகுண்டரையேச் சாரும்.
“அகம் பிரம்மாஸ்மி” (நானே பிரம்மம்) எனும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் அய்யா வைகுண்டரின் கண்ணாடி வழிபாடும், ஒளி வழிபாடும் அமைந்துள்ளது. மேலும் கடவுளையும், மனிதனையும் பிரித்து வைத்திருந்த ஆன்மீக, மதச் சுவர்களை உடைத்தெறிந்து நானே கடவுளின் அம்சம். எனதுள்ளில் கடவுள் ஒளியாக ஒளிர்கிறார். அவரைத் தன்னுள் கண்டு கொள்வதே மனித வாழ்வின் பேரின்பம் என்பதே இவ்வழிபாட்டின் தத்துவமாகும்.
மனிதர்களில் ஆண், பெண் வேறுபாடு இருப்பினும், ஆத்மாவில் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளின் முன் ஆத்மா சமமானதே. ஆத்மாவிற்கு இன்பம், துன்பம் எதுவுமில்லை என்பதை அடையாளப்படுத்தி, மனிதர்களில் வேற்றுமை நிலவுவதை உடைத்தெறியும் நோக்கத்தோடு இவ்வழிபாடு அய்யா வழி மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மனிதர்களும் சென்று கண்ணாடியில் பார்க்கும் போது, அவரவர் முகம் மட்டுமே காட்டும். கண்ணாடி போன்று, கடவுளும், அவரவர் மனதில் அவரவர் போன்றேக் காட்சியளிப்பார் என்பதை நிறுவும் வண்ணம் அமைக்கப்பட்டது கண்ணாடி வழிபாடு.
மத வழிபாட்டில் புதியதொரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தி, மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க அய்யா வைகுண்டர் வழி செய்ததையே இவ்வழிபாடு வெளிப்படுத்துகிறது. கண்ணாடியின் முன் திருவிளக்கு ஏற்றி, அது ஒளிர்ந்து இருளை அகற்றி வெளிச்சம் தருவது போன்று, மனிதர்களும் தங்களுக்குள்ளிருக்கும் தீமையை அகற்றி, நன்மை என்னும் அக ஒளியை ஏற்றி ஆத்ம ஞானத்தை அடைய இவ்வழிபாடு உதவுகின்றது எனலாம்.
தன்னுடைய உருவத்தை வரைந்து வழிபட முனைந்த பக்தர்களை அய்யா வைகுண்டர், “நான் உங்களுக்குள்ளேயேக் குடி கொள்ளுகிறேன். உங்களது உருவத்திலேயே என்னைப் பாருங்கள். உங்களை என்னைப் போல் உயர்த்த வேண்டும். சுத்தமான மனதுள்ளவர்களாக இருந்தால் மட்டுமெ இது சாத்தியப்படும் என்று அறிவுறுத்தினார்.
அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் போன்று அவரது வழிபாட்டு முறைகளும் முற்போக்குத் தன்மை கொண்டு விளங்குவதையேக் கண்ணாடி வழிபாடும், ஒளி வழிபாடும் வலியுறுத்துகின்றன எனலாம்.