சாத்தானின் திருச்சபை என்பது ஒரு சமயக் குழுவாகும். இச்சபையினர், மக்கள் தங்கள் மனித இயல்பை ஏற்றுக் கொள்ளவும், அவர்களின் தன்முனைப்பு எனும் அகந்தையை உருவாக்கவும் ஊக்குவிக்கிறது.
அமெரிக்காவிலுள்ள இலினொய் மாநிலத்தின் சிகாகோ மாநகரத்தில் 1930 ஆம் ஆண்டு, நவம்பர் 11 அன்று பிறந்த ஆவேர்டு ஸ்டான்டன் லாவே (Howard Stanton Levey) என்பவர், தனது பெயரை அன்டன் சாண்டர் லாவே (Anton Szandor LaVey) என்று மாற்றிக் கொண்டார். அதன் பிறகு அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத் தலைநகரமான சான் பிரான்சிஸ்கோவில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளன்று, முதன் முதலில் சாத்தானின் திருச்சபை (Church of Satan) ஒன்றை உருவாக்கினார்.
அன்றைய நாளிலேயே, அவர் எழுதிய, ‘சாத்தானிய பைபிள்’ (The Satanic Bible) எனும் நூலினை அச்சபைக்கான அதிகாரப்பூர்வ நூலாகவும் அறிவித்தார். அவர் நிறுவிய சாத்தானின் திருச்சபை தலைமை மதக் குருவாக 1966 முதல் 1997 முடிய பதவி வகித்தார்.
இச்சபையினர் சாத்தானைக் கிறிஸ்தவ தீமையின் உருவகமாகவோ அல்லது இருக்கும் ஒரு மனிதனாகவோ வணங்கவில்லை. அதற்குப் பதிலாக, "அவரது நரக மாட்சிமை" என்பது சுய உறுதிப்பாடு, அநியாய அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி, முக்கிய இருப்பு மற்றும் "வரையறுக்கப்படாத ஞானம்" போன்ற மனிதநேய மதிப்பீடுகளின் அடையாளமாகும் என்று அன்டன் லாவே கற்பித்தார்
இத்திருச்சபையினர் சாத்தானை வணங்குவதில்லை அல்லது நம்புவதில்லை, மேலும், அவர்கள் கடவுளின் இருப்பையும் நம்புவதில்லை. இச்சபையினர் மொழியில் சாத்தான் என்பது விடுதலை மற்றும் அகந்தையின் சின்னமாகும். சாத்தான் திருச்சபை, ‘தீமையை’ ஊக்குவிக்கவில்லை, மாறாக மனிதநேய விழுமியங்களை ஊக்குவித்தது. இந்தச் சாத்தான் திருச்சபையினர் 1966 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் தங்களுக்கென பல நூல்களையும், இதழ்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளனர். இத்திருச்சபையினர் 1970 ஆம் ஆண்டில் சாத்தானியர்கள் எனும் ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர்.
இச்சமயம் ‘கடவுள் இல்லை, பிசாசு இல்லை. யாரும் கவலைப்படுவதில்லை!’ எனும் கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது. இச்சபையின் அடுத்தத் தலைமைக் குருவான பீட்டர் எச். கில்மோரின் என்பவர், ‘சாத்தானியம் நாத்திகத்துடன் தொடங்குகிறது. நாம் பிரபஞ்சத்தில் அலட்சியமாகச் செயல்படுகிறோம்’ என்றார்.
கடந்த 58 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இச்சமயம் பற்றி மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள், இச்சமயம் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும் https://www.churchofsatan.com/ எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம்.