போதி மரம் என்பதற்குத் தமிழில் அரச மரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தக்கயாவில் உள்ள மகா போதிக் கோயிலில் உள்ள அரச மரத்தைப் பௌத்தர்கள் மகா போதி என அழைக்கிறார்கள். புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதிக் கோயிலாகப் பாதுகாப்பாகக் காக்கப்பட்டு, அனைத்துலகப் பௌத்தர்களாலும் புனித மரமாக வணங்கப்படுகிறது. போதி மரத்தடியில் புத்தர் ஞானம் அடைந்த நாளைப் போற்றி நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் எட்டாம் நாளைப் பன்னாட்டுப் பௌத்தர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
புத்த கயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் அரசமரத்தை மகாபோதி என்கின்றனர். புத்தர் வாழ்ந்த காலத்திலேயே இப்போதி மரம் பௌத்தர்களால் புனித மரமாகப் போற்றப்பட்டது. பேரரசர் அசோகர் இப்போதி மரத்தை வணங்கியும், அதனைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் விழா எடுத்தார். இப்போதி மரத்தை ஒட்டிப் போதிமந்தா எனும் விகாரம் எழுப்பப்பட்டது. பௌத்த குரு சித்தகுத்தா தலைமையில் முப்பதாயிரம் பிக்குகள் இவ்விடத்தில் பௌத்தக் கல்வி பயின்றனர்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இப்போதி மரம் புஷ்யமித்திர சுங்கன் என்ற மன்னராலும், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சசாங்கன் என்ற மன்னராலும் வெட்டப்பட்டதாக, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பௌத்தப் பயணி யுவான் சுவாங் தமது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார். இப்போதி மரம் வெட்டப்படும் பொழுதெல்லாம் மீண்டும் அதே இடத்தில் புதிய அரச மரம் பௌத்தர்களால் நடப்பட்டு வந்தது.
ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் முயற்சியால் இப்போதி மரம் அமைந்த மகாபோதிக் கோயில் இந்தியாவின் முதல் தொல்லியற் களமாக 1862 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. 1876 ஆம் ஆண்டில் இப்போதி மரம் சூறாவளிக் காற்றில் அடியோடு முறிந்து விழுந்தது. அலெக்சாண்டர் கன்னிங்காம் அதே இடத்திலேயே புதிய அரச மரத்தை நட்டார்.
புத்தகயா மகாபோதிக் கோயிலின் போதி மரத்தின் விதைகளைக் கொண்டும், போதி மரத்தின் இளங்கன்றுகளைக் கொண்டும் உலகில் பல இடங்களில் புத்தர் காலத்திலிருந்தே அரச மரங்கள் நடப்பட்டன . கௌதமப் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவரான மௌத்கல்யாயனரால் சிராவஸ்தி நகரத்தில் உள்ள தேஜ வனத்தில் (உத்தரப் பிரதேசம்) மகாபோதி மரத்தின் முதற் கிளை நடப்பட்டது. அதன் பிறகு கி.மு. 288 ஆம் ஆண்டில் அசோகரின் மகள் சங்கமித்தையால் இலங்கையிலுள்ள அனுராதபுரத்தில் உள்ள சிறீ மகாபோதியில் போதி மரக் கன்று நடப்பட்டது. சென்னைப் பிரம்மஞான சபைக் கட்டிட வளாகத்தில் 1950 ஆம் ஆண்டில் மகாபோதி மரத்தின் நாற்று நடப்பட்டது.அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரப் பகுதியான ஆயிரம் சிந்தூர மரங்கள் பகுதியில் மகாபோதி மரத்தின் நாற்று நடப்பட்டுள்ளது.