சமண தர்மத்தில் இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவையாவன:
1. கொல்லாமை (அகிம்சை)
2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்)
3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்)
4. பிறன் மனை விரும்பாமை
5. பொருள் வரைதல்
- இவை ஐந்தும் “அணுவிரதம்” என்று கூறப்படும்.
இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்ட வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு, அவ்வரையறைப்படி பொருளை ஈட்டுவதாகும். நில புலம், வீடு வாசல், பணம் காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடு மாடு முதலிய பொருள்களை இவ்வளவுதான் ஈட்டுவேன்; இதற்கு மேல் சம்பாதிக்க மாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்
இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம்மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
தேன் உண்பது ‘பாவம்’ என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன் புழுக்களைக் கொன்றும் உயிர்க் கொலைகளைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் விரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள்.
சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை. சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்ளக் கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு உட்கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத்தார்க்கு இன்றியமையாதன. கீழ்க்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது.
இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.