பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில்
உ. தாமரைச்செல்வி
தமிழ்நாட்டின் பல கிராமங்களில், ஊருக்கு வெளியே திறந்த வெளியில் நின்ற நிலையிலோ அல்லது குதிரையில் அமர்ந்த நிலையிலோ கருமையான நிறத்துடன் அடர்ந்த மீசை, மிரட்டும் விழிகள், வலது கையில் அரிவாள், இடுப்பில் கச்சை என்று பார்க்கப் பயங்கரமான தோற்றத்துடன் கருப்பசாமி கோயில்கள் அமைந்திருக்கின்றன.
கருப்பசாமி
கிராமங்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கருப்பசாமி தோற்றம் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடையே இருக்கின்றன.
இராமரிடமிருந்து பிரிந்த சீதை வால்மீகி முனிவரின் பாதுகாப்பில் அவருடைய ஆசிரமத்தில் இருந்தார். ஒரு நாள் சீதை வால்மீகி முனிவரிடம் மகன் லவனைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுத் தண்ணீர் எடுத்து வரச் சென்றார். திரும்பி வந்த சீதை ஆசிரமக் குடிலிலிருந்து லவனை வெளியே தூக்கி வந்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். இதையறியாத வால்மீகி குழந்தையைக் காணாததால் சீதை திரும்பி வந்து குழந்தையைக் கேட்டு கோபப்பட்டு சாபமிட்டு விடுவாளோ என்கிற அச்சத்தில் தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து அதை லவனைப் போன்றே ஒரு குழந்தையாக உருவாக்கினார். வால்மீகி அந்தப் புதிய குழந்தையுடன் வெளியில் வந்தார். அங்கு சீதை லவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். சீதை வால்மீகியிடம் இருக்கும் குழந்தையைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள். வால்மீகி நடந்த உண்மையைச் சொன்னார். அதன் பிறகு சீதை அந்தக் குழந்தைக்குக் குசன் என்று பெயரிட்டு இரண்டு குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து வளர்த்து வந்தார்.
இதன் பிறகு, இராமர் காட்டிற்கு வந்து சீதையைச் சந்தித்த போது நம் குழந்தை எது என்று கேட்டார். உடனே சீதை தான் தீக்குளித்ததுடன், அவர்களையும் தீக்குளிக்கச் செய்தார். சீதையும். லவனும் தீயிலிருந்து எந்தப் பாதிப்புமின்றி மீண்டனர். ஆனால், தர்ப்பைப் புல்லிலிருந்து உருவான குசன் மட்டும் எரிந்து கருகினான். இதைக் கண்ட சீதை கண் கலங்கினாள். இராமர் தீயில் எரிந்த குசனை உயிர்ப்பித்து வரச் செய்தார். தீயில் கருகிய அவனை இராமர் கருப்பா என்று அழைத்தார். அன்றிலிருந்து அவர் கருப்பசாமியாகவும், கிராமத்து மக்களின் காவல் தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்கின்றனர்.
சிலர் வீரபத்திரர், சண்டிக்குப் பிறந்த குழந்தைதான் கருப்பசாமி என்று சொல்கின்றனர். சிலர் கருப்பன் எனும் மனிதன் ஊர் மக்களைக் காப்பதற்காக எதிரிகளுடன் போராடி அவர்கள் அனைவரையும் அழித்துத் தானும் அழிந்து போனதாகவும், அவனை நினைவு கொள்ளும் விதமாக மக்கள் தங்களைக் காத்த காவல் தெய்வமாகக் கருப்பசாமியை உருவாக்கிக் கோயில்கள் வைத்து விட்டனர் என்றும் சொல்வதுண்டு.
இந்த கருப்பசாமி வேட்டை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பசாமி, கோட்டை வாசல் கருப்பசாமி என்று இருக்குமிடங்களுக்கேற்ப பல்வேறு பெயர்களைக் கொண்டு இருக்கிறார்.
அணைக் கருப்பசாமி
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மக்கள் முல்லையாற்றின் குறுக்கே புதிதாகத் தடுப்பணை ஒன்று கட்டி அந்தத் தண்ணீரைக் கொண்டு விவசாயப் பணிகளைச் செய்திட திட்டமிட்டனர். புதிய அணையின் கட்டுமானப் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி நடக்கவும், அணை பாதுகாப்புக்கும் காவலாக அணைக்கு அருகிலேயே கருப்பசாமி கோயில் ஒன்றை அமைத்தனர். இந்தக் கோயில் தற்போது அணைக் கருப்பசாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைக் காவலர்
கிராமங்களில் இருக்கும் மக்கள் தங்களையும், தங்களுக்குச் சொந்தமான உடைமைகள், விலங்குகள் என்று அனைத்திற்கும் கருப்பசாமியே காவலாக இருந்து காக்க வேண்டும் என்று வணங்குகின்றனர். இது போல், தீய சக்திகளிடமிருந்து குழந்தைகளைக் காக்கக் கருப்பசாமி இருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, இரவு நேரங்களில் குழந்தைகளின் கால்களின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் வழக்கம் கிராம மக்களிடம் இன்றும் இருந்து வருகிறது. இதனடிப்படையில் கருப்பசாமி குழந்தைகளின் காவல் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறார்.
வழிபாடு
இந்த ஊரில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் தீய சக்திகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காத்திட அணைக் கருப்பசாமியிடம் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேல் ஆன பின்பு குழந்தையின் குடும்பத்தினர் தங்கள் குழந்தையைக் காத்த அணைக் கருப்பசாமிக்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இந்தச் சிறப்பு வழிபாட்டில் பொங்கல் வைத்து, கருப்பசாமிக்குப் பிடித்தமானதாகக் கருதப்படும் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்றவற்றுடன் ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு அசைவ உணவும் சேர்த்துப் படைக்கப்படுவது வழக்கத்திலிருக்கிறது.
அமைவிடம்
தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பழனிசெட்டிபட்டி எனும் ஊரில் அமைந்திருக்கும் பழனிசெட்டிபட்டி தடுப்பணை அருகிலுள்ள தோப்பில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.இந்தக் கோயிலைப் பழனிசெட்டிபட்டி பாசன பரிபாலன சபையினர் நிர்வகித்து வருகின்றனர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.