பேராற்றுச் செல்வி அம்மன் கோயில்
உ. தாமரைச்செல்வி
வாழ்க்கையில் எத்தனை முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், பல வேளைகளில் ஏதாவதொரு கொடியவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு பெருந்துன்பத்துக்குள்ளாக வேண்டியதாகி விடுகிறது. வாழ்க்கையில் அவ்வப்போது வரும் பெருந்துன்பங்களிலிருந்து விடுபட்டுப் பேரானந்தம் பெற்றிட உதவும் தலமாகத் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் அமைந்திருக்கும் பேராற்றுச் செல்வி அம்மன் கோயில் இருக்கிறது.
தல வரலாறு
தனக்குக் கிடைத்த சக்தியினைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிய துர்க்கன் எனும் அரக்கன் தென்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை எல்லாம் அங்கிருக்க விடாமல் விரட்டி அடித்தான். அந்தப் பகுதியிலுள்ள மக்கள் அனைவரையும் அச்சுறுத்தியதுடன் துன்புறுத்தியும் வந்தான். அவனை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தும் வந்தான்.
அவனுடைய கொடிய செயல்களால் அவதிப்பட்டு வந்த முனிவர்களும், மக்களும் அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி இறைவன் சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான் பார்வதிதேவியிடம், அரக்கன் துர்க்கனை அழித்து அனைவரையும் காக்கும்படிச் சொன்னார்.
இறைவனின் கட்டளையை ஏற்ற பார்வதி தேவி எட்டு கைகளுடனான காளியாகப் புதியத் தோற்றமெடுத்தாள். எட்டு கைகளில், எட்டு வகையான ஆயுதங்களைக் கொண்டு அந்த அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்தாள். அரக்கன் அழிந்த பின்பும், அவளின் கோபம் குறையாமல் இருந்தது.
அரக்கன் அழிந்ததைக் கண்டு மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும் அங்கு வந்து, அவளை வணங்கிக் கோபத்தைக் குறைத்து அமைதியடையும்படி வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுதலைக் கேட்டுச் சிறிது அமைதியான அவள், அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கி மூழ்கினாள். பின்னர், அந்த இடத்திலிருந்து பேரொளியாக மாறி மேல்நோக்கிச் சென்றாள்.
அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன. இந்நிலையில், பாண்டிய மன்னனிடம் கோயில் பண்டகசாலைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஒருவர் கனவில் தோன்றிய அம்மன், துர்க்கன் எனும் அரக்கனை அழித்த தான் பல ஆண்டுகளாகத் தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கிக் கிடப்பதாகவும், தாமிரபரணி ஆற்றிலிருந்து தன்னை எடுத்து வந்து, தனக்குத் தனியாகக் கோயில் அமைத்து வழிபடவும் சொன்னார்.
மறுநாள் காலையில், அவர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, அங்கு ஒடிக் கொண்டிருந்த ஆற்று நீரில், ஓரிடத்தில் ஒரு எலுமிச்சை அசையாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அந்த எலுமிச்சையை எடுக்கும் ஆர்வத்துடன் அந்த இடத்துக்குச் சென்றார்.
அங்கு, அவர் கனவில் தோன்றிய அம்மன் சொன்னபடி, ஆற்று நீருக்குள் எட்டுக் கைகளுடனான அம்மன் சிலை ஒன்று இருப்பது தெரிந்தது. அந்தச் சிலையை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்த அவர், தாமிரபரணி ஆற்றின் கரையில் அதை வைத்து வணங்கினார். பின்னர், மன்னரின் உதவியுடன் அங்கு அம்மனுக்கு ஒரு கற்கோயிலையும் கட்டுவித்தார்.

பேராற்றுச் செல்வி
அந்தக் கற்கோயிலினுள் நிறுவப்பட்ட அம்மன், தாமிரபரணி எனும் பெரும் ஆற்றில் இருந்து எடுத்து வரப்பெற்ற அம்மன் என்பதால், பேராற்றுச் செல்வி என்று அழைக்கப்பட்டார். நாளடைவில், பேச்சு வழக்கில் பேராத்துச் செல்வி என்று பெயர் மாற்றமும் பெற்றார். எட்டு கைகளிலும் ஆயுதங்களுடன் இருந்தாலும், இந்த அம்மன் அமைதியான தோற்றத்தில் இருப்பதால் இவரைச் “சாந்த சொரூப காளி” (அமைதி வடிவக் காளி) என்றும் அழைக்கின்றனர்.
கோயில் அமைப்பு
இந்தக் கோயிலில் பேராற்றுச் செல்வி அம்மன் வடக்கு திசையைப் பார்த்தபடி இருக்கிறார். அம்மன் சன்னதிக்குப் பின்புறம் இரட்டைப் பிள்ளையாரும், இவர்களுக்கு இடதுபுறத்தில் இரட்டை நந்தியும் இருக்கின்றன. இரட்டை நந்தி இருப்பது இக்கோயிலின் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில், சங்கிலி பூதத்தார், நல்ல மாடன் ஆகியோர் பீட நிலையிலும், தளவாய்ப்பேச்சி தனிச்சன்னதியிலும் இருக்கின்றனர். இதுபோல், இங்கு லிங்கேஷ்வரர், சக்கர விநாயகர் ஆகியோரும் இருக்கின்றனர்.
விழாக்கள்
இங்கு அனைத்துக் கோயில்களையும் போல் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல், அம்மன் கோயில்கள் அனைத்திலும் ஆடி மாதம் செய்யப்படும் அனைத்துச் சிறப்பு வழிபாடுகளும் இங்கு செய்யப்படுகின்றன. இங்கு சித்திரை மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமையில் ‘கொடை விழா’, ஆடி மாதம் இரண்டாம் வாரத்தில் ‘முளைப்பாரித் திருவிழா’, புரட்டாசி மாதம் ’பாரிவேட்டை’ போன்ற விழாக்கள் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
வழிபாட்டுப் பயன்கள்
* வடக்கு நோக்கிச் செல்லும் ஆற்றில் குளித்து அம்மனை வழிபட்டால், அனைத்து நலன்களையும் பெற முடியும் எனும் நம்பிக்கை உண்டு. இங்கு, தாமிரபரணி வடக்கு நோக்கிச் செல்வதால், இங்கு ஆற்றில் குளித்து வந்து, அம்மனை வழிபட்டுப் பயனடைகின்றனர்.
* காசியை ஆண்ட மன்னன் ஒருவன் தீராத தொழுநோயால் துன்பப்பட்டு வந்த நிலையில், இங்கு வந்து தாமிரபரணி ஆற்றில் குளித்து, அம்மனை வழிபட்டுத் தொழுநோய் நீங்கப் பெற்றதாகவும், இதனால் இங்கு தாமிரபரணிக்குக் “குட்ட குறை தீர்த்தம்’ என்கிற பெயருமுண்டு என்றும் சொல்கின்றனர். தொழு நோய் மற்றும் தோல் நோயுடையவர்கள் இங்கு தாமிரபரணி ஆற்றில் குளித்து, அம்மனை வழிபட்டு நலம் வேண்டிச் செல்கின்றனர்.
* இங்குள்ள அம்மனுக்குச் செவ்வரளி மாலை அணிவித்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்.
* கொடியவர்களின் தீய செயல்களால் பெருந்துன்பமடைந்து கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு எலுமிச்சை மாலையினைச் சாற்றிச் சிறப்பு வழிபாடுகள் செய்தால், பேராற்றல் கொண்ட பேராற்றுச் செல்வி அம்மன் பெருந்துன்பங்கள் நீக்கிப் பேரானந்தம் கிடைக்கச் செய்வார் என்கின்றனர்.
* இக்கோயிலுக்கு வந்து பயனடைந்த பலரும், அம்மனுக்கு நன்றி செலுத்தும் வகையில், விழாக் காலத்தில் ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி எடுத்து வழிபடுகின்றனர்.
அமைவிடம்
திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதியான வண்ணாரப்பேட்டையில் இந்தப் பேராற்றுச் செல்வி அம்மன் கோயில் அமைந்திருப்பதால், திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அனைத்துப் பேருந்து நிலையங்களிலிருந்தும் நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.