கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோயில்
உ. தாமரைச்செல்வி
விஷ்ணு கையில் வைத்திருக்கும் சங்கு, சக்கரம், வாள், வில் மற்றும் கதாயுதம் என்கிற ஐந்து ஆயுதங்களில் சக்கராயுதம் முதன்மையானதாக இருக்கிறது. இந்தச் சக்கராயுதத்தை விஷ்ணு தனக்கு நிகரான சக்தியுடையதாக உருவாக்கினார். சக்கராயுதத்தில் இருக்கும் இறைவனைச் சுதர்சனர் என்று போற்றுகின்றனர். சுதர்சனரைப் பக்தர்கள் அனைவரும் சக்கரத்தாழ்வார் என்றே அழைக்கின்றனர். சக்கரத்தாழ்வாரைச் சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திரமூர்த்தி, மந்திரமூர்த்தி என்கிற வேறு சில பெயர்களாலும் அழைப்பதுண்டு.
சுதர்சனர் வழிபாடு
சுதர்சனரை வழிபட்டு வலது புறமாகச் சென்று பின்புறமுள்ள யோக நரசிம்மரை வணங்கினால், அனைத்து அச்சங்களும் அகன்று மனத்துணிவும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்பது தொன்ம நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால், விஷ்ணு பக்தர்களிடம் சுதர்சன வழிபாடு மிகச் சிறப்புடையதாக இருக்கிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டுதான் விஷ்ணு கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கென்று தனிச் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இச்சந்நிதிகளில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எட்டு கரங்கள் கொண்டிருந்தால் சுதர்சனர் என்றும், பதினாறு கரங்கள் கொண்டிருந்தால் சுதர்சன மூர்த்தி என்றும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்டிருந்தால் மகா சுதர்சனர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
சுதர்சன மூர்த்தி
திருநெல்வேலி மாவட்டம், கரிசூழ்ந்தமங்கலம் எனும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் சுதர்சன மூர்த்திக்குத் தனிக்கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் கருவறையில் சுதர்சனர் மூலவராகத் தனது பதினாறு கைகளில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு வகையான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார்.
சுதர்சனருக்குப் பின்புறம் நான்கு கரங்களோடு யோக நரசிம்மர் இருக்கிறார். நரசிம்மரின் நான்கு கரங்களிலும் சுதர்சனச் சக்கரங்கள் இருக்கின்றன. பொதுவாக, விஷ்ணு கோயில்களில் இருக்கும் சுதர்சனர் சந்நதிகளைப் போன்று இங்கு யோக நரசிம்மரைக் கண்டு வணங்கிடப் பின்புறமாகச் செல்வதற்கான வழி இல்லை. இங்கு சுதர்சன மூர்த்திக்குப் பின்பகுதியில் இருக்கும் யோக நரசிம்மரை வணங்குவதற்குப் பின்புறச் சுவரில் நிலைக்கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. நரசிம்மருக்குத் தீப ஆராதனை செய்யப்படும் பொழுது, அதன் ஒளியில், நிலைக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்ம உருவத்தைக் கண்டு வணங்க முடியும்.
உற்சவர் வெங்கடாசலபதி
இக்கோயிலின் மூலவராகச் சுதர்சன மூர்த்தியும், உற்சவராக வெங்கடாசலபதியும் இருக்கின்றனர். இக்கோயில் உற்சவரின் பெயரால், வெங்கடாசலபதி கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயில் கருவறையின் முன்னாலிருக்கும் மண்டபத்தில் உற்சவரான வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் செப்புத் திருவுருவங்களாக அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு மூலவருக்குச் செய்யப்படும் வழிபாடுகளைப் போலவே உற்சவருக்கும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
வழிபாட்டுப் பலன்கள்
சுதர்சன மூர்த்தியை வழிபடுவதால், மனிதனுக்கு வரும் பல்வேறு பாதிப்புகளுக்கும் முதன்மைக் காரணமாக இருக்கும் கடன் (ருணம்), நோய் (ரோகம்), எதிரி (சத்ரு) எனும் மூன்றும் அழிந்து மன அமைதி கிடைக்கும். கல்வி தொடர்பான தடைகள் அனைத்தும் நீங்கித் தடையற்ற கல்வி வளம் கிடைக்கும். மேலும், கெட்ட கனவுகள், மனக்குழப்பம், மனநோய், தீய சக்திகளால் ஏற்படும் மனம் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் அதனால் வரும் துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.
சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதியாக இருப்பதால், இக்கோயில் சுக்கிரன் பரிகாரத் தலமாகவும் இருக்கிறது. இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.
படிப்பாயாசம்
திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும், குழந்தைப் பேறு கிடைக்காதவர்கள் கணவன், மனைவி என இருவரும் சேர்ந்து இங்குள்ள சுதர்சன மூர்த்தியையும், நரசிம்மரையும் வழிபட்டுத் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள படித்துறையில் பாயாசம் வழங்கினால், அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் விரைவில் கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அமைவிடம்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேலப்பாளையம் வழியாகச் சேரன்மகாதேவி செல்லும் வழியில் இருக்கும் பத்தமடை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்து தனிப்பாதையில் 2 கிலோ மீட்டர் தொலைவு சென்றால் கரிசூழ்ந்த மங்கலம் ஊரை அடையலாம். இங்குள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.
(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.