வண்டி மலைச்சி அம்மன் வழிபாடு
உ. தாமரைச்செல்வி
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வண்டி மலைச்சி அம்மன் கோயில் வழிபாடு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இந்த அம்மனை வழிபடும் பக்தர்கள், வாழ்வில் வளமடைய வருடத்திற்கு ஒரு முறையாவது வண்டி மலைச்சி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு செய்து வழிபட வேண்டும் என்கின்றனர். இதற்காகவே வண்டி மலைச்சி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் கொடை விழா எனும் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெற்று வருகின்றன.
வண்டி மறிச்ச அம்மன்
சலவைத் தொழில் செய்து வந்த ஒருவர் கனவில் தோன்றிய பாதாள பைரவி, அந்த ஊரின் குளக்கரையில் தன்னுடைய சிலை அமைத்து வழிபட்டு வந்தால், அவருடைய வாழ்வைச் செல்வச் செழிப்புடையதாக மாற்றுவதாகத் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட அவர், குளக்கரையில் பாதாள பைரவிக்குச் சிலை ஒன்றை வைத்துத் தினமும் அதை வழிபட்டு வந்தார். ஒரு வருட காலத்திற்குள் அவருக்கு அதிகமான செல்வம் சேர்ந்து, அவருடைய வாழ்க்கையும் வளமாகிப் போனது.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், தான் வணங்கி வந்த பாதாள பைரவிக்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்யவும், ஊர் மக்கள் அனைவருக்கும் சிறந்த உணவுகளை வழங்கவும் முடிவு செய்தார். விழா ஏற்பாடுகளைச் செய்த அவர், அந்த ஊர்ப்பெரியவர்களின் வீடுகளுக்குச் சென்று, கோயில் விழாவில் கலந்து கொண்டு, உணவருந்திச் செல்ல வேண்டுமென்று அழைப்பும் விடுத்தார்.
விழா நாளில் ஊர்ப்பெரியவர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் தாம் அளிக்கும் விருந்தைச் சாப்பிட்டுச் செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் அதிகமான அளவில் உணவுகளைத் தயாரித்தும் வைத்தார். ஆனால், அந்த ஊர்ப்பெரியவர்கள் அந்தக் கோயில் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஊர்ப்பெரியவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால், ஊரிலிருந்த பொதுமக்களும் அவர்களுக்கு அச்சப்பட்டு அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டனர். இதனால் அந்தக் கோயில் விழாவிற்காகத் தயார் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் மீதமாகிப் போனது.
இதனால் வருத்தமடைந்த சலவைத் தொழிலாளர் தானும் அந்த உணவை உண்ணாமல். கோயிலுக்கு அருகிலேயே ஒரு பெரிய குழி தோண்டி, அந்தக் குழியில் தான் விழாவிற்காகத் தயாரித்து வைத்த அனைத்து உணவுகளையும் போட்டு மூடினார். அவர் ஊர் மக்கள் யாரும் தான் நடத்திய கோயில் விழாவில் கலந்து கொள்ளாததை நினைத்து மிகவும் வருந்தினார். இருப்பினும், அவருக்கு வாழ்வளித்த பாதாள பைரவியைத் தொடர்ந்து வணங்கியும் வந்தார்.
சில மாதங்கள் கழித்து, ஊர்ப்பெரியவர்கள் சிலர் ஒரு வண்டியில் வெளியூர் சென்று விட்டு அந்த வழியாக ஊருக்குள் திரும்பினர். அவர்கள் வந்த வண்டி, கோயில் விழாவிற்காகத் தயாரித்துப் பயன்படுத்த முடியாமல் மீதமாகிப் போன உணவைப் புதைத்த இடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கல் ஒன்றில் வண்டிச் சக்கரம் மோதிக் கவிழ்ந்தது.
வண்டியை ஓட்டி வந்தவர் அந்தக் கல்லை அகற்றுவதற்காக அந்த இடத்தைத் தோண்டினார். அங்கு கோயில் விழாவிற்காகத் தயாரித்துப் புதைத்து வைத்த உணவு அனைத்தும் கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது. அதைத் தாண்டிச் சாலையின் குறுக்காகப் பெரிய உருவத்திலான பெண் ஒருவர் படுத்திருப்பது போன்றும் தெரிந்தது.
இதைக் கண்டு வண்டியை ஓட்டி வந்தவரும், ஊர்ப்பெரியவர்களும் அச்சமடைந்தனர்.
அப்போது, “என் பக்தன் நடத்திய கோயில் விழாவில் தாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அவன் மிகுந்த வருத்தமடைந்து இருக்கிறான். அவனுடைய விருப்பத்திற்காக, இந்த ஊர் மக்கள் அனைவரும் வணங்கும் தெய்வமாக நான் இந்த ஊரிலேயே இருக்க விரும்புகிறேன். அதற்காகத்தான் நான் உங்கள் வண்டியை மறித்து இங்கு எழுந்தருளியிருக்கிறேன். நான் தற்போது இருக்கும் இடத்தில், இதே நிலையில் (சயன நிலை) என்னை வண்டி மறித்த அம்மனாக நினைத்து என்னை வழிபடுங்கள்” என்று வானிலிருந்து குரல் கேட்டது.
இதைக்கேட்ட ஊர்ப்பெரியவர்கள் அம்மனிடம் தங்களை மன்னித்தருளும்படி வேண்டினர். அதன் பிறகு, அவர்கள் அந்த சலவைத் தொழிலாளரிடம் சென்று அம்மன் தங்கள் முன்பாகத் தோன்றியதைத் தெரிவித்துத் தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். அதனைத் தொடர்ந்து, வண்டி மறிச்ச அம்மன் கோயில் வழிபாடும் தொடங்கியது என்று சிலர் சொல்கின்றனர்.
இந்தக் கதை உண்மையில்லை, வண்டி மறிச்ச அம்மன் கதை வேறு என்று மற்றொரு கதையைச் சொல்கின்றனர்.
செங்கோட்டைப் பகுதியில் வசித்த பூலாவுடைய தலைவன் என்பவர் வெளியூர் சென்று திரும்பும் பொழுது வழியில், ஒரு பத்து வயதுச் சிறுமி தனக்கு ஏதாவது வேலை கொடுத்து உதவும்படி அவரை வேண்டினாள். சிறுமி மேல் இரக்கம் கொண்ட அவர், அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவளால் முடிந்த வீட்டு வேலையைச் செய்யும்படி சொன்னார். அந்தச் சிறுமியும் அனைத்து வேலைகளையும் வேகமாகவும், சிறப்பாகவும் செய்து வந்தாள்.
இப்படியே சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில், ஒரு நாள் பூலாவுடைய தலைவன் அந்தச் சிறுமியிடம், தனது வீட்டு மாடியைச் சுத்தம் செய்யச் சொன்னார். அந்தச் சிறுமியும் மாடிக்குச் சுத்தம் செய்யச் சென்றாள். சிறிது நேரத்தில் மாடியிலிருந்து நிறைய பெண்கள் குலவையிடும் ஒலி கேட்டது. குலவை ஒலியைக் கேட்ட பூலாவுடைய தலைவன் மாடிக்குச் சென்று பார்த்தார். அங்கு நறுமணத்துடன் கூடிய புகை மண்டலமாக இருந்தது, அந்தச் சிறுமியைக் காணவில்லை.
அப்போது, “உங்கள் வீட்டிற்குச் சிறுமியாக வந்த நான் ஒரு தேவலோகப் பெண். ஒரு சமயம் பிரம்மன் அவருடைய வண்டியில் சென்ற போது, அந்த வண்டிச்சக்கரத்தின் அச்சு முறிந்து போனது. அவ்வழியே வந்த நான், அந்த வண்டி கீழே விழுந்து விடாமல், என் கையைக் கொடுத்து, வண்டியை மறித்து நிறுத்தினேன். வண்டி நின்றதும் அதிலிருந்து இறங்கிய பிரம்மா, “வண்டியின் அச்சு முறிந்து போன நிலையில், என்னுடைய வண்டி கீழே விழாமல் உன் கையைக் கொண்டு வண்டியை மறித்துக் காப்பாற்றிய நீ, வண்டி மறிச்சி அம்மன் என்ற பெயருடன் பூலோகத்தில் புகழ் பெறுவாய்” என வாழ்த்திச் சென்றார் அதற்காகப் பூலோகம் வந்த நான், முதலில் எங்கு எழுந்தருளலாம் என்று நினைத்த போது, அந்த வழியாக வந்த தங்களிடம், ஒன்றும் அறியாத சிறுமியாக மாறி வந்து சேர்ந்தேன். நீங்களும் என்னை அன்புடன் ஆதரித்தீர்கள். இதனால், நான் இங்கேயே இருப்பதாக முடிவு செய்து விட்டேன். இங்கு எனக்கு ஒரு கோயில் எழுப்பி என்னை வணங்கி வந்தால் நான், உனக்கும் இந்த ஊர் மக்களுக்கும் நற்பலன்களை அளிப்பேன்” என்றாள்.
அவரும் அந்த இடத்தில் வண்டி மறிச்ச அம்மனுக்குக் கோயில் கட்டி வணங்கி வரத் தொடங்கினார். இதுதான் வண்டி மறிச்ச அம்மன் கோயில் வந்த கதை என்கின்றனர்.
இந்த இரண்டு கதைகளுமே தவறானது. வண்டி மறிச்ச அம்மன் என்பதை விட வண்டி மலைச்சி அம்மன் என்பதே சரியானது. வண்டி மலைச்சி அம்மனுக்கென்று தனியாக வரலாற்றுக் கதை இருக்கிறது என்கின்றனர் மற்றொரு பிரிவினர்.
வண்டி மலைச்சி அம்மன்
நாகலோகத்தில் மாணிக்கப்புற்று ஒன்றில் வசித்து வந்த நாகராஜன், நாகக்கன்னிகை எனும் நாகத் தம்பதியர்களுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி சிவபெருமானை நினைத்துத் தவமியற்றி வந்தனர். இந்தத் தவத்தின் வலிமையால் கயிலாய மலை இருளடையத் தொடங்கியது.
சிவபெருமான் அவர்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்கக் கயிலாயத்திலிருந்து கிளம்பினார். இதைக் கண்ட பார்வதி தானும் உடன் வருவதாகச் சொன்னார். அதற்குச் சிவபெருமான், “இது போன்ற இருள் சூழ்ந்த நிலையில் கயிலாயத்தில் சிவம், சக்தி என்று இரண்டில் ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால், கயிலாயம் முழுக்க இருள் சூழ்ந்துவிடும். எனவே நீ இங்கேயே இரு, நான் மட்டும் சென்று அவர்களுக்கு வரமளித்துத் திரும்புகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட பார்வதி சிவபெருமானிடம் எதிர்வாதம் செய்யத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த சிவபெருமானின் நெற்றிக்கண் திறக்க, அதிலிருந்து வந்த ஒளி பட்டு பார்வதி எட்டுத் தீப்பொறிகளாகச் சிதறினார். சிவபெருமான் அந்த எட்டுத் தீப்பொறிகளையும், எட்டு முட்டைகளாக மாற்றித் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்றார்.
குழந்தைப்பேறு வேண்டி தவமிருந்த நாகத் தம்பதியர் முன்பு தோன்றிய சிவபெருமான் அவர்களிடம், அந்த எட்டு முட்டைகளையும் வழங்கி, “இந்த எட்டு முட்டைகளையும் நாற்பத்தியொரு நாட்கள் அடைகாத்து வந்தால் உங்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்” என்று அருளினார்.
இதைத் தொடர்ந்து நாகக்கன்னிகைக்கு முதல் முட்டையிலிருந்து வண்டிமலைச்சி, இரண்டாவது முட்டையிலிருந்து முத்தாரம்மாள், மூன்றாவது முட்டையிலிருந்து முப்பிடாதி, நான்காவது முட்டையிலிருந்து சந்தனமாரி, ஐந்தாவது முட்டையிலிருந்து அக்னி மாரி, ஆறாவது முட்டையிலிருந்து கருங்காளி, ஏழாவது முட்டையிலிருந்து பத்திரகாளி, எட்டாவது முட்டையிலிருந்து உச்சினி மாகாளி என எட்டுப் பெண் குழந்தைகள் பிறந்தனர். நாகத்தம்பதியர்களும் தங்களுக்குப் பிறந்த எட்டுப் பெண் குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து வந்தனர்.
வளர்ந்து பருவமடைந்த கன்னிகள் மனதில், “நம் பெற்றோர் நாகப்பிறவிகளாக இருக்க நாம் மட்டும் எப்படி நாம் மனிதப் பிறவிகளாகப் பிறந்தோம்?” என்கிற சந்தேகம் எழுந்தது. தங்களின் பிறப்பு குறித்த உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர்கள் தனித்தனியாக எட்டு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வரத் தொடங்கினர்.
இதற்கிடையில், பூலோகத்தில் மச்சரிசி வனத்தில் எருமைத்தலையும், மனித உடலும் கொண்ட மகிடாசுரன் எனும் அரக்கன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமானிடம், தனக்குத் தேவர்கள், ஆண்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகளால் மரணம் ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான்.
தான் பெற்ற வரம் சாகா வரம் என நினைத்து ஆணவமடைந்த அவன் தேவர்கள், மனிதர்கள் என்று அனைவரையும் தனக்கு அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் சிவபெருமானிடம், மகிடாசுரனை அழித்துத் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். சிவபெருமான் அவர்களிடம், மகிடாசுரன் விரைவில் எட்டு பெண்களால் அழிக்கப்படுவான் என்றார்.
அதன் பிறகு, சிவபெருமான் தன்னை நினைத்துத் தவமியற்றிய எட்டு கன்னிகைகள் முன்பாகத் தோன்றி, முன்பு கயிலாயத்தில் நடந்ததைக் கூறி, பார்வதிக்குத் தான் அளித்த எட்டு சாபங்களின் மூலம் பிறந்த உங்களால் பூலோகத்தில் இருக்கும் மகிடாசுரன் எனும் அரக்கன் அழிக்கப்படுவான் என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள், “தாங்கள் விரைவில் மகிடாசுரனை அழிப்பதாகவும், அதன் பிறகு தங்களை சிவபெருமான் மணந்து கொள்ள வேண்டும்” என்றும் சிவபெருமானிடம் வேண்டுகோள் வைத்தனர். சிவபெருமானும் அதற்குச் சம்மதித்து அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களை அளித்தார்.
சிவபெருமான் கொடுத்த ஆயுதங்களுடன் மூத்தவளான வண்டி மலைச்சி தலைமையில் சென்ற எட்டு பெண்களும் மகிடாசுரனை அழித்தனர். அதன் பிறகு, அவர்கள் சிவபெருமான் தங்களுக்குக் கொடுத்த வாக்குப்படி தங்களை மணந்து கொள்வார் என்று நினைத்துக் கயிலாயம் நோக்கிச் சென்றனர். இதையறிந்த சிவபெருமான் பிரம்மாவை அழைத்து, அந்தப் பெண்கள் வரும் வழியிலுள்ள வண்டுமலைக்குச் சென்று எட்டு வண்டுகளைப் பிடித்து எட்டுக் குழந்தைகளாக மாற்றி, அவர்கள் கண்பார்வையில் படும்படி போட்டு விடச் சொல்கிறார். பிரம்மனும் அப்படியே செய்து விடுகிறார்.
வரும் வழியில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட எட்டுக் கன்னிகைகளும் தாய்மையுணர்வுடன் ஆளுக்கொரு குழந்தையைக் கையிலெடுத்துக் கொண்டு கயிலாயம் வருகின்றனர். குழந்தைகளுடன் வந்த கன்னிகைகளைத் தான் மணம் புரிய முடியாது என்று சிவபெருமான் மறுத்து விடுகிறார். இதனால் ஏமாற்றமடைந்த எட்டு கன்னிகைகளும் தாங்கள் பூலோகத்திற்குத் திரும்பிச் செல்வதாகச் சொல்கின்றனர்.
சிவபெருமான் கயிலாயத்திலுள்ள வேள்வித் தீயில் தர்ப்பை ஒன்றை எடுத்துப் போடுகிறார். அதிலிருந்து வண்டிமலையான் சுவாமி, வைரவன், சுடலை, பேச்சியம்மன், தம்பிரான், அண்ணா தளவாய், அரசமகன் இருளப்பன், சட்டநாதன், சடுகநாதன், சங்கிலிவாய்ப் பூதத்தான், எண்ணிறந்த பேய்ப்படை, இருபத்தியொரு வாதைகள் தோன்றின. அவர்களை வண்டி மலைச்சியம்மனுக்கும் அவரது சகோதரிகளுக்கும் துணையாக அனுப்பி வைக்கிறார்.
பூலோகம் வந்த அவர்கள் தாங்கள் வந்ததை மக்களுக்குத் தெரிவிக்கும் எண்ணத்துடன், மக்கள் அச்சம்படும்படியாக பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அச்சமடைந்த மக்கள் சோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அவர், “கயிலாயத்திலிருந்து வண்டி மலைச்சி, வண்டி மலையான், உச்சிமாகாளி, வைரவர் போன்றவர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்குக் கோயிலமைத்து வழிபட்டு வந்தால் நம் வாழ்வு வளமடையும்” என்றார்.
இதனைக் கேட்ட மக்கள் அந்தப் பகுதியில் வண்டி மலைச்சியம்மன், வண்டி மலையான் ஆகியோருக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். அங்கிருந்து வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலெல்லாம் வண்டி மலைச்சி அம்மனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
வழிபாடு
வண்டி மறிச்ச அம்மன், வண்டி மலைச்சி அம்மன் என்று இரு வேறு பெயர்களில், பல ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அம்மன் கோயில்களில், வண்டி மலையான் சுவாமியும் சேர்ந்து இருப்பது போன்ற சிலைகள் மிகப்பெரியதாகக் கிடந்த நிலையில் (சயன நிலையில்) அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட பல்வேறு கோயில்களில் நாகர்கோவில், வடசேரியில் அமைந்திருக்கும் வண்டி மலைச்சியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா எனும் பெயரில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது, அம்மனை வழிபடும் பக்தர்களின் வாழ்க்கை வளமாகவும், மிகுந்த செல்வச் செழிப்புடனும் இருக்கும் என்கிற நம்பிக்கை நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.