மதுரை பேச்சியம்மன் கோயில்
உ. தாமரைச்செல்வி
பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வேண்டுபவர்களுக்குப் பேச்சுத் திறனையும், கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பிடத்தையும் வழங்கி அருளுகிறார் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் பேச்சியம்மன்.
பேச்சியம்மன் வரலாறு
உயர்வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து இளைய சகோதரன் ஒருவன் மட்டும் பிரிந்து செல்கிறான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்று அடைகிறான். அவனுக்கு அந்த ஊரிலிருந்த பேச்சி எனும் பெண்ணிடம் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பின் தொடர்ச்சியாக அவன் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்தத் திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, அவர்களால் அந்த ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர்களிருவரும் அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குச் சென்று வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி வந்த அவனுடைய சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்து சேர்கின்றனர். அங்கு தங்கள் சகோதரன் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்து கவலையடைகின்றனர். அவர்கள் ஊரிலிருக்கும் சிலர் துணையுடன் தங்கள் சகோதரனைத் தேடிக் காட்டுக்குள் செல்கின்றனர். அங்கு ஆடு மேய்க்கும் சிலர் அவர்களுடைய சகோதரனும், அவன் மனைவியும் காட்டுக்குள் இருக்குமிடத்தைத் தெரிவிக்கின்றனர்.
அந்த இடத்திற்குச் சென்ற அவனது சகோதரர்கள், தங்கள் சகோதரனையும், கர்ப்பிணியான அவன் மனைவியையும் பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் சகோதரனை மட்டும் தங்களுடன் வந்துவிடும்படி அழைக்கின்றனர். அவன் தன்னுடைய கர்ப்பிணியான மனைவியை விட்டு வர முடியாது என்று மறுக்க, கோபம் கொண்ட அவர்கள் சகோதரனின் மனைவியைக் கர்ப்பிணி என்றும் பாராமல் கொன்று விடுகின்றனர். இதைத் தடுக்க முயன்ற சகோதரனையும் கொன்று விடுகின்றனர்.
இதைக் கண்ட ஊர்க்காரர்கள், கருவுற்ற பெண்ணைக் கொன்றதால் தங்கள் ஊருக்கு ஏதாவது தீயசெயல்கள் நடக்குமோ என்று அச்சமடைகின்றனர். அச்சமடைந்த அவர்கள் தங்களுக்கும், தங்கள் ஊருக்கும் அந்தப் பெண்ணால் ஏதாவது தீங்கு நேர்ந்து விடக்கூடாது என்று எண்ணிப் பேச்சி எனும் அந்தப் பெண்ணுக்குக் கோயில் எழுப்பி வணங்கி வரத் தொடங்கினர். அந்த வழிபாடே பேச்சியம்மன் வழிபாடு என்று சிலர் தெரிவிக்கின்றனர்.
இது உண்மையில்லை, காளியம்மனின் மற்றொரு தோற்றம்தான் பேச்சியம்மன் என்று சிலர் சொல்கின்றனர்.
வல்லாளன் என்ற பாண்டிய அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய பல்வேறு கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம் ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.
அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் மருத்துவச்சியாகத் தொழில் செய்து வருவதாகவும் சொன்னாள்.
உடனே அவன் அவளிடம், தான் இந்நாட்டின் அரசன் என்றும், தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும் என்றும், பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால் பொன்னும் பொருளும் நிறையத் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண்மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.
வயதான அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்துக் குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப்படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி அவளை இகழ்ந்து பேசினான்.
இதைக் கேட்டுக் கோபம் கொண்ட அந்தப் பெண்மணி எண்ணற்ற கரங்களோடும், நீண்ட நாக்குடனும், பயங்கரத் தோற்றத்தோடு காட்சி அளித்தார். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தார். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றார். அவன் குழந்தையையும் இந்தப் பூமியில் காலை வைத்துவிடாமல் தன் கைகளிலேயே ஏந்திக்கொண்டு தடுத்து விடுகிறாள்.
கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவனுக்குத் துணையாயிருந்த அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடி அந்தப் பெண்மணியை வணங்கி நின்றனர். அரசனையும், அவன் மனைவியையும் அழித்துத் தங்களைக் காப்பாற்றியது பெரியாச்சி என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்குப் பெரியாச்சியம்மன் என்ற பெயரிலேயே கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மனே நாளடைவில் பேச்சியம்மன் என்றாகிப் பல இடங்களில் கோயில் கொண்டு விட்டார் என்கின்றனர்.
இந்த இரண்டு தகவல்களுமே தவறானது, கல்விக்கடவுளான சரஸ்வதியின் மறு தோற்றம்தான் பேச்சியம்மன். பேச்சு அம்மன் என்றிருந்ததே பின்னர் பேச்சியம்மன் என்று மருவிவிட்டது என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.
பேச்சியம்மன் குறித்த வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் வேறாக இருந்தாலும், பேச்சியம்மனுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலும் அதிகமான கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைந்த கோயில்களில் மதுரை, சிம்மக்கல் பகுதியில் அமைந்திருக்கும் பேச்சியம்மன் கோயிலும் ஒன்று.
பேச்சியம்மன் கோயில்
மதுரை மாநகரின் சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் சுயம்புவாகத் தோன்றியிருக்கும் பேச்சியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பேச்சியம்மன் உருவம் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது போன்றும் இருக்கிறது. இந்தப் பேச்சியம்மனைச் சரஸ்வதியின் மற்றொரு தோற்றமென்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோயிலுக்கான தல வரலாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இக்கோயில் வளாகத்தினுள் பேச்சியம்மன் தவிர, விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர், நாகர் உட்பட 21 தெய்வங்களுக்கான சிலைகளும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.
வழிபாடு
இக்கோயிலில் பேச்சியம்மனுக்கு நாள்தோறும் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு இக்கோயிலில் அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இது தவிர, நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
சிறப்புகள்
1. பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்கள், பேச்சாற்றல் வேண்டுபவர்கள் இந்த அம்மனை வணங்கிப் பேச்சுத்திறனைப் பெறலாம்.
2. கல்விக்கடவுளான சரஸ்வதியின் மறுதோற்றமாகக் கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டு மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பிடத்தைப் பெற முடியும்.
3. ராகு, கேது தோசமுடையவர்கள் இக்கோயில் வளாகத்திலுள்ள நாகரை வழிபட்டு, அதன் பிறகு அம்மனை வணங்கி நற்பலன்களைப் பெறலாம்.
அமைவிடம்
மதுரை மாநகரின் மத்தியப் பகுதியான சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. மதுரை நகரில் இயக்கப்படும் பெரும்பான்மையான நகரப் பேருந்துகள் சிம்மக்கல் பகுதி வழியாகச் செல்கின்றன.
(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.