சூரியனார் கோயில்
மீனாட்சி சுந்தரமூர்த்தி
சூரியனை உலகமெங்கும் வழிபடும் வழக்கம் இருந்தது. பாரசீகர்கள் சூரியனை மித்திரன் எனவும், கிரேக்கர்கள் அப்பல்லோ எனவும், ரோமர்கள் தைபீரியஸ் எனவும் வணங்கினர். எகிப்து, வடஅமெரிக்கா என எல்லா இடங்களிலும் சூரிய வழிபாடு தொன்றுதொட்டு இருந்துள்ளது. எகிப்தின் பாரோ மன்னர்கள் தங்களைச் சூரியக் குமாரர்கள் என அழைத்துக் கொண்டனர். நம் இந்திய மன்னர்களும் சூரியவம்சம் என அழைத்துக் கொண்டது அறிவோம். இதனாலேயே சூரியனுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயிலகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நவக்கிரகங்களில் ஒன்றாக இருக்கும் சூரியனுக்குத் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனார் கோயில் அமைந்திருக்கிறது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் குறித்த மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
தல வரலாறு
இமயத்திலிருந்த காலமுனிவரிடம் வந்த இளம் துறவி ஒருவர் தனது எதிர்காலம் பற்றிச் சொல்லும்படி கேட்கிறார். முனிவர் அவரிடம், ‘உமக்குச் சொல்லும்படி ஏதுமில்லை’ என்கிறார். வந்தவர் அவரிடம், ‘உமது எதிர்காலமாவது அறிவீரோ?’ எனச் சொல்லி மறைகிறார். அப்போதுதான் அந்த முனிவருக்கு இளம் துறவி வேடத்தில் வந்தது காலதேவன் என்பது தெரிகிறது.
உடனே அவர் தன்னுடைய ஞானத்திறனால், தன்னுடைய எதிர்காலம் குறித்து அறிய முயற்சிக்கிறார். அப்போது அவருக்கு முன் வினைப்பயனால் தொழுநோய் பற்றும் எனத் தெரிகிறது. அதனையறிந்த அவர் கலக்கம் அடைகிறார். தனக்கு வரும் தொழுநோயிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என்று அவர் சிந்திக்கிறார். பின்னர், நவக்கிரகங்களை நினைத்துக் கடுந்தவம் புரிகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த நவக்கிரகங்களின் நாயகர்கள் முனிவரின் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்கின்றனர். காலமுனிவர் அவர்களிடம், முன்வினைப்பயனால் தனக்கு வரவிருக்கும் தொழுநோய், தன்னைப் பற்றாது அருள வேண்டுமென்று கேட்கிறார். அவர்களும் முனிவர் கேட்ட வரத்தினைத் தந்தருள்கிறார்.
இதனை அறிந்த பிரம்மதேவன், ‘இறைவனின் ஆணைப்படி காலதேவனின் துணையுடன் பூவுலகில் பிறக்கும் உயிர்கட்கு வினைப்பயன் தருவதே உங்களின் பணி, அதனை மீறிக் காலமுனிவரின் வினைப்பயனான தொழுநோயை நீக்கி வரம் தந்த உங்களுக்கு அந்தத் தொழுநோய் பற்றி அவதியடையுங்கள்’ எனச் சாபமிட்டார்.
அப்போதுதான் நவக்கிரகங்களுக்குத் தாங்கள் செய்த தவறு தெரிய வந்தது. உடனே அவர்கள், தங்களை மன்னித்து, அந்தச் சாபத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டினர்.
உடனே பிரம்மன் அவர்களிடம், ‘காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருக்க வனத்தில் (வெள்ளெருக்கங்காடு) கார்த்திகை மாதத்தின் முதல் ஞாயிறு தொடங்கி 78 நாட்கள் தவம் புரிதல் வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடியும் நேரத்திற்கு முன்பாகக் காவிரியில் நீராடி, மங்களநாயகி உடனுறை பிராணநாதரை எருக்கின் இலையில் தயிர் அன்னம் வைத்துப் படைத்து வணங்கி, அதை உண்டு வந்தால் உங்கள் நோய் குணமடையும்’ என்று விமோசனத்தையும் சொல்லி அருளினார்.
பிரம்மன் கொடுத்த சாபத்தின்படி நவக்கிரகங்களைத் தொழுநோய் பற்றிக் கொண்டது. அவர்கள் பிரம்மன் சொன்னபடி பூலோகத்தில் இருந்த அருக்க வனம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் பிரம்மன் சொன்னபடி செய்து, அதிலிருந்து விடுபட்டனர்.
நவகிரகங்கள் தன்னால் துயருற்றதை அறிந்த காலமுனிவர், அங்கு வந்து அவர்களிடம் மன்னிப்பு வேண்டினார். தங்களிடம் வேண்டிய காலமுனிவரிடம், தமக்கு அங்கு ஒரு ஆலயம் அமைக்கப் வேண்டினர். அவ்வாறு உருவான கோயிலோ சூரியனார் கோவில் என்கிறது இக்கோயிலின் தல வரலாறு.
சூரியனுக்கு உகந்தவை
1. இராசி - சிம்மம்
2. திசை - நவகிரகங்களில் நடு
3. நிறம் - சிவப்பு
4. வாகனம் - ஏழு குதிரை பூட்டிய ஒரு சக்கரத் தேர்
5. கிழமை - ஞாயிறு
6. தானியம் - கோதுமை
7. மலர் - செந்தாமரை
8. ஆடை - சிவந்த ஆடை
9. இரத்தினம் - மாணிக்கம்
10. உலோகம் - செம்பு
11. அன்னம் - சர்க்கரைஅன்னம்
|
கோவில் அமைப்பு
இக்கோயிலின் கருவறையில் சூரியபகவான் இடப்புறம் உஷாதேவி, வலப்புறம் சாயாதேவி ஆகியோருடன் நின்ற நிலையில் இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களுடன் காட்சியளிக்கிறார். உஷாதேவி வலது கரத்தில் நீலோற்பவ மலரையும், சாயாதேவி இடது கரத்தில் தாமரை மலரையும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். கருவறையின் மேல் ஏகதள விமானத்தின் நான்கு மூலைகளிலும் குதிரைச் சிற்பங்கள்.விமானத்தைச் சுற்றி பன்னிரு உபசூரியர்கள் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். கருவறையின் முன் சூரியனின் வாகனமான குதிரை நின்ற நிலையில் இருக்கிறது. பிங்கலனும், தண்டியும் துவாரபாலகர்களாக இருக்கின்றனர்.
கோயில் வளாகத்தில் தென்மேற்கில், கோள் வினை தீர்த்த விநாயகர் சந்நிதி, வடக்கில் தீர்த்தக் கிணறு, சண்டேசுவரரின் சந்நிதி, வடகிழக்கில் யாகசாலை, தென்கிழக்கில் மடைப்பள்ளி, தெற்கில் தலவிருட்சமான வெள்ளெருக்கு உள்ளது. சூரிய பகவானின் கருவறையை ஒட்டி, மற்ற நவக்கிரகங்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இக்கோயில் நவகிரகங்களின் கோவில் என்றாலும், சூரியனுக்கு உரிய தலமாகவே இருக்கிறது.
வழிபாடு
இக்கோயிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் வரும் இரதசப்தமி விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. இது தவிர, சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இக்கோயிலில் இருக்கும் சூரிய பகவானை வழிபடுபவர்களுக்கு புகழ், மங்களம், உடல்நலம், ஆட்சித் திறம், செல்வாக்கு போன்றவை கிடைக்கும் என்கின்றனர். இவை தவிர, தோல் நோய்கள் இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுக் குணமடையலாம்.
சிறப்புகள்
1. இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்.
2. சூரியனுக்கென்று அமைக்கப்பட்டு, நல்ல பராமரிப்பில் இருந்து வரும் ஒரே கோவில் இது.
3. இக்கோயிலில் நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
4. சூரியனை வணங்கும் போது, அவரெதிரில் உள்ள குருவின் அருளும் கிடைக்கும்.
5. இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களின் நல்லருள் கிடைக்கும்.
6. இக்கோயில் கிரகங்களை இடமாகச் சுற்றி வந்து, பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்பில் அமைந்துள்ளது.
7. இக்கோயிலில் ஒன்பது கிரகங்களுக்கும் பரிகாரம் செய்யும் அமைப்பு இருக்கிறது.
8. இக்கோயில் தீர்த்தக்குளம் சூரியக்குளம் என்றழைக்கப்படுகிறது.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலும், ஆடுதுறைக்கு வடக்கில் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பனந்தாளுக்குத் தெற்கில் 10 கிலோ மீட்டர் தூரத்திலும் சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. கும்பகோணம், ஆடுதுறை, அணைக்கரை போன்ற ஊர்களிலிருந்து திருமங்கலக்குடி எனும் ஊருக்குச் சென்று, அங்கிருக்கும் திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்கலநாயகியையும் வழிபட்ட பின்னர் சூரியனார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்கிற வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.