வைத்தீசுவரன் கோயில்
மீனாட்சி சுந்தரமூர்த்தி
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் உள்ள தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவில் நவக்கிரகத் தலங்களில் மூன்றாவதாகவும், செவ்வாய் என்னும் அங்காரகனுக்கு உரியதாகவும் உள்ளது.
தலவரலாறு
அங்காரகன் (நெருப்பு) என்பவன் பரத்வாச முனிவரின் மகன் என்றும், அவனைப் பூமிதேவி வளர்த்தாள் என்றும் சொல்வதுண்டு. உமையவளைப் பிரிந்து கல்லால மரத்தினடியில் ஈசன் யோகநிட்டையில் இருந்தபோது அவரது நெற்றிக்கண்ணில் இருந்து விழுந்த நீர்த்துளியில் பிறந்தவரே அங்காரகன் எனவும், ஈசனின் ஆணைப்படி தக்கனின் யாகத்தை அழித்த பின் வீரபத்திரர் தேவர்களின் வேண்டுதலால் சினம் தணிந்து அங்காரகன் ஆனார் எனவும், இவரின் தோற்றம் பற்றிப் பல கதைகள் சொல்லப்படுகின்றன. இவர் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் புரிந்து கிரகப்பதவி பெற்றார்.
அங்காரகனுக்கு ஒருமுறை தொழுநோய் ஏற்பட்டுத் துன்பப்பட்டு வந்தார். அதன் பின்னர் அவர், அந்நோயிலிருந்து விடுபட இத்தலம் வந்து தையல்நாயகி உடனுறை வைத்தீசுவரனை வழிபட்டு உடல் நலம் பெற்றார். தான் உடல்நலம் பெற்றது போன்று, இத்தலத்திலிருக்கும் இறைவனைத் தேடி வருபவர்கள் அனைவருக்கும் நல்ல உடல்நலம் தந்தருள வேண்டும் என்று அவர் இறைவன் சிவபெருமானிடம் வேண்ட, அவரும் அவ்வாறே தந்தருளியதுடன், அக்கோயில் வளாகத்திலேயே அங்காரகனுக்கும் தனிச்சன்னதி அமைந்திடவும் அருளினார் என்றும் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.
இத்தலம் முன்பு, ‘புள்ளிருக்கு வேளூர்’ எனப்பட்டது. புள்-சடாயு, இருக்கு-வேதம், வேள்-முருகன், ஊர்-சூரியன். கழுகரசன் சடாயுவும், ரிக் வேதமும், முருகனும், சூரியனும் இங்கு வந்து வழிபட்டதால் இப்பெயர் பெற்றிருந்தது. இது தவிர, சடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரகபுரம், அம்பிகாபுரம் என்ற வேறு சில பெயர்களும் இதற்குண்டு.
அங்காரகனின் தன்மையும் உகந்தவையும்
சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல்திறன் உள்ள கிரகம் செவ்வாய் ஆகும். இவரை மங்களன் எனவும் அழைப்பதுண்டு. வீரதீரம், அதிகாரம், ஆளுமை, தைரியம், நம்பிக்கை, நாணயம், உயர்பதவி , தலைமைப் பொறுப்பு அளிக்கவல்லவர். இதுவன்றி தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கும் இவரருளால் வருவதே. காவல்துறை, இராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் அவருக்கு செவ்வாயின் அருளிருக்க வேண்டும் என்பார்கள்.
இராசி - மேஷம்
நாள் - செவ்வாய்
நிறம் - சிவப்பு
தானியம் - துவரை
ஆடை - சிவப்பு
இரத்தினம் - பவழம்
வாகனம் - ஆடு
மலர் - செண்பகம்
உலோகம் - செம்பு
|
கோவில் அமைப்பு
இக்கோயில் இந்நகரின் நடுவில் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டுஅழகுற அமைந்துள்ளது. இக்கோவிலின் ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மரகதலிங்கம் சிறப்பு வாய்ந்தது. மூலவருக்கு முன் வெள்ளி, தங்கத்தினாலான இரண்டு கொடிமரங்கள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இறைவி தைல பாத்திரம் ஏந்தியதால், தையல்நாயகி எனப்படுகிறார். இந்தத் தையல்நாயகியையும், வைத்தீசுவரரையும் வலம் வரும் பிரகாரங்கள் தனித்தனியானவை. இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
கோயிலின் கிழக்கில் வீரபத்திரரும், மேற்கில் பைரவரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் காளியும் இடம் பெற்றிருக்கின்றனர். மேற்கு வெளிப் பிரகாரத்தின் கீழ்ப்புறம் செல்வ முத்துக்குமாரசாமி எனப்படும் முருகன் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. கிழக்குப் பிரகாரத்தில் தலவிருட்சமான வேம்பு உள்ளது, தெற்குப் பிரகாரத்திற்குத் தெற்கில் அம்மன் சந்நிதியில் சித்தாமிர்தத் தீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு முகமாக அங்காரகனான செவ்வாய் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
மூலவருக்குப் பின்னால் நவக்கிரகங்களும் ஒரே வரிசையில், ஒரே திசை பார்த்து வைத்தீசுவரருக்கு அடங்கியதாக அமைந்திருக்கின்றன. இத்தலம் செவ்வாய்க்கு உரிய தலமாக இருப்பதால், இங்கு செவ்வாய் தனிச்சிறப்பு பெற்றவராக இருக்கிறார். இதுபோன்று, இங்கு தெற்குப் பிரகாரத்தில் அறுபத்து மூவர், சப்த கன்னியர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, இங்கு சடாயு குண்டம் (சடாயுவின் உடலுக்கு இராமன் தீ மூட்டிய இடம்) ஒன்றும் உள்ளது. இதன் மேல் இராமன், லக்குவன், வசிட்டர், விசுவாமித்திரர், சடாயு திருவுருவங்கள் இருக்கின்றன.
இத்தலத்தில் சித்தாமிருதத் தீர்த்தம் மட்டுமின்றி, கோதண்டத் தீர்த்தம், வில்வ தீர்த்தம், கௌதம தீர்த்தம் முதலான பதினேழு தீர்த்தங்கள் உள்ளன.
வழிபாடுகள்
இங்கு காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது. மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் தை மாதத்தில் முத்துக் குமாரசுவாமி விழா, பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் அம்பிகைக்கு ஆடிப்பூரம் விழா மற்றும் நவராத்திரி விழா, கந்தசஷ்டி விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
வாரநாட்களில் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் ஆட்டின் மேலமர்ந்து வலம் வருகிறார். நள்ளிரவு நேரத்தில் முத்துக்குமரனுக்கு வழிபாடு நடத்திய பின்னர், இறைவனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனைப், `புனுகுக்காப்பு` என்கின்றனர். இதனை மருந்தாக வாங்கி உண்பவர் நலமடைவர்.
ஆதியில் சித்தர்கள் இறைவனுக்கு அமிர்தத்தால் திருமுழுக்காட்டி வழிபட்டு வரங்கள் பெற்றனர். அது இங்குள்ள குளத்தில் கலந்துள்ளது என்றும், அதனால், இங்கிருக்கும் குளத்தில் இருக்கும் நீரினைச் சித்தாமிருதத் தீர்த்தம் என்றும் சொல்கின்றனர். இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதே போன்று, இங்கு புற்றுமண், அபிசேகத் தீர்த்தம், அபிசேகச் சந்தனம், அபிசேகத் திருநீறு, வேம்பின் இலை கொண்டு செய்யப்படும் ‘திருச்சாந்து’ எனும் உருண்டை செய்யப்பெறுகிறது. இதனையும் மருந்தாகக் கொள்ளலாம்.
இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் முத்துக்குமரனுக்கு நள்ளிரவு பூசைக்குத் தேவையான பொருட்கள் தருதல், அம்பிகைக்கு புடவை சார்த்தி அபிசேகம் செய்தல், முடி காணிக்கை தருதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்றவைகளைச் செய்கின்றனர். அம்பாள் சந்நிதியில் உப்பு, மிளகு மற்றும் வெள்ளி உருக்கள் சார்த்தி வழிபடுகின்றனர்.

தலச்சிறப்பு
1. சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது, அவனைத் தடுத்துத் தாக்கி இறந்துபட்ட சடாயுவிற்கு இராமபிரான் இறுதிக் கடனாற்றி எரியூட்டிய இடமே இங்குள்ள சடாயுகுண்டம்.
2. இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்கப்புலவர் தமது பாடல் ஒன்றில், இவ்வூரில் உள்ள தெய்வம் பொய் சொல்பவரைப் பலிகொள்ளும் என்கிறார்.
3. முத்துக் குமாரசாமி எனும் பெயரில் இக்கோவிலுறை முருகன் தனது பிள்ளைத்தமிழ் பாட, ‘பொன்பூத்த குடுமி’என்று குமரகுருபரருக்கு அடியெடுத்துக் கொடுத்தான்.
4. அடியவர்களின் நோய்கள் அனைத்தையும் தீர்த்திட இறைவன், இறைவி தைல பாத்திரமும், வில்வமரத்து அடிமண்ணும், சஞ்சீவியும் எடுத்துக் கொண்டு உடன்வர வைத்தியம் செய்யும் வைத்தீசுவரனாக விளங்கும் தலம்.
5. இங்கு பிறந்தால் போகமும், இறந்தால் வீடுபேறும் கிட்டும்.
6. இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் சுதானந்தர் எனும் முனிவர் நீராடித் தியானம் செய்த வேளையில் பாம்பால் துரத்தப்பட்ட தவளை ஒன்று அவர்மீது விழுந்து தவம் கலைத்தது. அதனால் சினமுற்ற முனிவர் இக்குளத்தில் இவ்விரண்டும் இல்லாதொழிக என சாபமிட்டதால் இன்று வரை இக்குளத்தில் இவை இரண்டும் இல்லை.
7. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சித்தாமிருதத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு, அங்காரகன் எனப்படும் செவ்வாயையும் வணங்கினால், செவ்வாயினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபடலாம்
8. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
9. காவிரியின் வட கரையில் உள்ள 62 தலங்களில் இது 16 வது தலமாகும்.
அமைவிடம்
தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோவில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்குச் செல்ல மூன்று ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.