ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
மீனாட்சி சுந்தரமூர்த்தி
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்திருக்கும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் நவக்கிரகங்களில் வியாழன் (குரு) பகவானுக்குரியதாக இருக்கிறது.
தலவரலாறு
முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முற்பட்டனர். அவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் காத்ததால் சிவபெருமான் ரட்சகர் என்று பொருள் படும்படி ஆபத்சகாயேஸ்வரர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்த இடமும் ஆலங்குடி என்று புகழ் பெற்றது என்று இக்கோயிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
இக்கோயிலின் சிறப்பு பற்றி மற்றொரு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. முசுகந்தன் என்ற சோழ மன்னன், இக்கோவில் கட்டுவதற்காகத் தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் அந்த மந்திரி மன்னன் கொடுத்தப் பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தைப் பயன்படுத்தி இக்கோயிலைக் கட்டினான். இதனையறிந்த மன்னன், தான் கொடுத்த பணத்தில் கோயிலைக் கட்டாமல், மந்திரியின் பணத்தில் கோயில் கட்டப்பட்டதால், அந்தக் கோயில் கட்டுவித்த பலன்கள் எதுவும் தனக்கு வந்து சேராது என்பதால் மந்திரியிடம் அந்தக் கோயில் கட்டிய பலன்களில் தனக்கும் சமபங்கு அளிக்கும்படி மந்திரியிடம் கேட்டான். ஆனால், அந்த மந்திரி அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலையை வெட்டத் தனது வாளை எடுத்து ஓங்கினான். அவ்வேளையில் அங்கு தோன்றிய இறைவன், மந்திரி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
குருவின் தன்மையும் உகந்தவையும்
குரு என்று பெயர் பெற்றவர் மூவர்.
1. ஆதி நாயகனான ஈசன் சின்முத்திரை தரித்து தென்முகக் கடவுளாக, தட்சிணாமூர்த்தியாக ஆலின் கீழமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருள் உணர்த்தியவன்.
2. அப்பனுக்குப் பிரணவத்தை உபதேசித்த முருகன்.
3. தேவர்களின் குருவான வியாழ பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்பது வழக்கு. குரு பகவான் இராஜயோகம் தருபவர், வெற்றி, சாதனைகள் தருபவர்
குரு பார்க்க கோடி நன்மை என்பது உலக வழக்கு. குரு பகவான் இராஜயோகம் தருபவர். வெற்றி, சாதனைகள் தருபவர் என்று போற்றப்படுகிறார்.
நிறம் - மஞ்சள்
தேவதை - பிரமன்
தானியம் - கொண்டைக்கடலை
உலோகம் - பொன்
குணம் - சாத்வீகம்
சுவை - இனிப்பு
திசை - வடக்கு
ஆட்சி - தனுசு, மீனம்.
உச்சம் - கடகம்
நட்சத்திரம் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
ஆடை - மஞ்சள் ஆடை
|
கோவில் அமைப்பு
1900 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் ஆலங்குடி ஊரின் நடுவில் ஐந்து நிலை கொண்ட இராஜ கோபுரத்துடன் அமைந்திருக்கிறது. இக்கோயில் நான்கு புறமும் நீண்ட மதில்களைக் கொண்டது. இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கோபுர வாயிலிலேயே இடது புறம் கலங்காமற் காத்த விநாயகர், அடுத்து நேராக ஏலவார் குழலம்மையின் சந்நிதி, அடுத்து ஈசன் சந்நிதி, இதன் பின்னர் குரு சந்நிதி என அமைந்துள்ளது. (மாதா, பிதா, குரு எனும் அமைவில்) இத்தலத்தில் தட்சிணா மூர்த்தி தெற்கு நோக்கி இருக்கிறார். இரண்டாவது வாயிலிலைக் கடந்தால் சூரியன், சுந்தரர் சந்நிதிகள், அடுத்த உட்பிரகாரத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி,தேவார நால்வர், சப்த லிங்கங்கள் உள்ளன. அடுத்த மகாமண்டபம் கடந்தால், கிழக்கு நோக்கி ஆபத்சகாயேசுவரர் அருள் பாலிக்கிறார். தெற்கே தேவகோட்டத்து விநாயகரை அடுத்து குரு பகவானின் சந்நிதி உள்ளது. இது தவிர, சோமாஸ் கந்தர், வீரபத்திரர், துர்க்கை, சண்டிகேசுரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வழிபாடுகள்
இங்கு காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது.
* மாசி மாதம் மூன்றாவது வியாழன் மகா குரு வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
* இங்கு குரு பெயர்ச்சி நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகிறது.
* தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் நாளில் தீர்த்தவாரி நடத்தப் பெறுகிறது.
* சித்ராபௌர்ணமியை முன்னிட்டுப் பத்து நாட்கள் திருவிழாவும். இவ்விழாவில் தட்சிணாமூர்த்தி உற்சவராக வலம் வரும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
வழிபாட்டுப் பலன்கள்
1. இக்கோயிலின் தல விருட்சம் பூளைச்செடி. இச்செடிகளிருக்கும் இடத்தில் பாம்பு உள்ளிட்ட விசப்பூச்சிகள் இருக்காது என்பர். இச்செடிகளை வீடு, வணிக நிறுவனங்களில் கட்டி வைத்தால், எதிரிகளால் வரும் துன்பம் நீங்கும் என்கின்றனர்.
2. நாகதோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு நாகதோசம் நீங்கப் பெறலாம்.
3. குரு பகவானின் அருளைப் பெற்றுச் சிறப்படைய விரும்புபவர்கள் இக்கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டுப் பயனடையலாம்.
தலச்சிறப்பு
1. சுந்தரர் இறைவனை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி பெற்றார்,
2. குருவே தட்சிணாமூர்த்தியாக, தட்சிணா மூர்த்தியே குருவாக அமைந்துள்ளார்.
3. தேவாரப் பாடல் பெற்ற தலம்.
4. காளமேகப் புலவர் இக்கோயில் இறைவன் நஞ்சுண்டதைப் பற்றி;
“ஆலங் குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங் குடியான் என்றுஆர் சொன்னார்
ஆலங் குடியானே யாகில் குவலயத்தோரெலாம்
மடியாரோ மண்மீ தினில்”
என்று பாடிச் சிறப்பித்திருக்கிறார்.
5. அம்பிகை பெண்களுக்கு உரிய வெள்ளிக்கிழமையின் பெயரும் தாங்கி, ‘சுக்கிரவார அம்பிகை’ எனவும் அழைக்கப் பெறுகிறார்.
6. விசுவாமித்திரர், முசுகுந்தச் சக்ரவர்த்தி,வீரபத்திரர் ஆகியோர் வழிபட்ட சிறப்பு மிக்க தலம்,
7. கயிலையில் பந்தாடிய பார்வதி தேவி அதனைப் பிடிக்கக் கையினை உயர்த்த, அதனைக் கண்ட சூரியன், பார்வதி தன்னை நிற்கச் சொல்வதாக நினைத்து நிற்க, உலக இயக்க மாறுபாடு ஏற்பட்டது. அதனால், கோபமடைந்த இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியைச் சபிக்க அன்னை இங்கு பிறந்து, இங்குள்ள இறைவனை வழிபட்டுச் சாபம் நீங்கி இறைவனை மணந்தார்.
8. சுந்தரர் இங்கு வந்த போது, வெட்டாற்றில் வெள்ளம் வர ஈசனே ஓடக்காரனாகச் சென்று காத்து ஆபத்சகாயேசுவரர் என்று பெயர் பெற்றார். ஓடம் நிலை தடுமாறிப் பாறையில் மோதும் வேளையில் விநாயகர் வந்து காத்ததால், இங்கிருக்கும் விநாயகர் ‘கலங்காமற் காத்தவர்’ என்றானார்.
அமைவிடம்
கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் சாலையில், கும்பகோணத்திற்குத் தெற்கில் 17 கி.மீ தொலைவில் ஆலங்குடி உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லக் கும்பகோணம் நகரிலிலிருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.