கஞ்சனூர் அக்கினீசுவரர் திருக்கோவில்
மீனாட்சி சுந்தரமூர்த்தி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் அமைந்துள்ள கஞ்சனூர் கற்பகாம்பாள் உடனுறை அக்கினீசுவரர் திருக்கோவில் நவகிரகத் தலங்களில் ஆறாவதாகவும், சுக்கிரனுக்கு உரியதாகவும் அமைந்துள்ளது.
தலவரலாறு
முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்த அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாக இருப்பினும், தீவிர சிவபக்தராக அவர் தினமும் காலையில் கஞ்சனூரில் இருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்குத் தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வைணவரான சுதர்சனர் சிவபக்தராக இருந்தது அவ்வூர் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவ்வூர் மக்கள் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமரச் செய்தனர். அவர் அப்போதும், சிவமே பரம்பொருள் என்று மும்முறை கூறி எவ்விதக் காயமுமின்றி எழுந்தார். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தார் இறைவன். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
நவக்கிரகங்களில் முக்கியச் சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனைத் தங்களது குலகுருவாகக் கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.
இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனது. இதனால் வருத்தமடைந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தைத் தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனைச் சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும், தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி அவருக்குக் கிட்டியது.
மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்ட பொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்துத் துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது.
குருவின் தன்மையும் உகந்தவையும்
சுக்கிரன் என்பவர் பிருகு முனிவரின் புத்திரர். சிறந்த சிவபக்தன். சிவனருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும், அமிர்த சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். தன் தவத்தால் கிரகப் பதவி பெற்றார். வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டத் திருமாலிடமிருந்து மகாபலிச் சக்கரவர்த்தியைக் காப்பாற்ற, நீரைத் தாரை வார்த்தக் கமண்டலத்தில் வண்டாக அமர்ந்து தடுத்து நின்று தன் கண்ணையே இழந்தவர். தன்னை நம்பி வணங்கும் அடியவர்களை என்றும் கை விடாதவர். அழகு, வசீகரம், செல்வம் அருள்பவர். ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கும் இவரே அதிபதி. உடல் பிணி, சித்தப்பிரமை நீக்கி நலம் தருபவர்.
நிறம் - வெண்மை
வாகனம் - முதலை, கருடன்
தானியம் - மொச்சை
உலோகம் - வெள்ளி
உணவு - மொச்சை கலந்த அன்னம்
ஆடை - வெள்ளை ஆடை
மலர் - வெண்தாமரை
இரத்தினம் - வைரம்
இராசி - ரிஷபம்,துலாம்
கிழமை - வெள்ளி
|
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் அமைந்திருக்கும் இக்கோயிலின் கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிரகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் விசுவநாதர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி, சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது, இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலின் தலமரமாக புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். இவை தவிர பைரவர்,சூரியன்,சனி பகவான்,சந்திரன் சந்நிதிகளும் நவகிரகச் சந்நிதி,நால்வர் சந்நிதிகளும் மகா மண்டபத்தில் உள்ளன.
வழிபாடுகள்
இங்கு காலை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது.
* ஆடிப்பூரம், மாசிமகம், சிவராத்திரி, விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுப் பலன்கள்
1. உடல் பிணி, சோகை நோய் நீங்க இங்கிருக்கும் இறைவனை வழிபடலாம்.
2. சித்தபிரமை உடையவர்களை இக்கோயிலுக்கு அழைத்து வந்து வழிபடச் செய்து குறை நீங்கப் பெறலாம்.
3. வணிகம், செய்யும் தொழில் செழிக்க இக்கோயிலுக்கு வந்து வழிபடலாம்.
தலச்சிறப்பு
1. அமிர்தம் வேண்டி தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கிப் பாற்கடலைக் கடைந்தனர். அமிர்தம் பெற்றதும் தேவர்கள் அசுரரை ஏமாற்றித் தாங்களே அதனை உண்டனர். இதனால் சினமுற்ற அசுர குரு சுக்கிராச்சாரியார் தேவர்களைச் சபித்தார். அவர்கள் மன்னிப்பு வேண்ட இத்தலம் சென்று வழிபட்டு சாபவிமோசனம் பெற வழிகாட்டினார்.
2. அசுரர்களோடு தேவர்களுக்கு ஏற்பட்டப் போரில் திருமால் தன் சக்கரத்தை ஏவி அவர்களை அழித்தார். அப்போது அது சுக்கிரனின் மனைவியையும் கொன்றது. இதனால் வெகுண்ட சுக்கிரன் போரில் ஈடுபடாத பெண்ணைக் கொன்றதால் திருமாலை மானிடப் பிறவி எடுத்து அல்லலுறச் சபித்தார். அவரும் தீவிர வைணவக் குடும்பத்தில் வாசுதேவர் என்பவரின் மகனாக அவதரித்து சுதர்சனர் எனப் பெயரிடப் பெற்றார். அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது, இறைவன் தட்சிணாமூர்த்தியாக வந்து ஹரதத்தர் என்ற பெயரளித்து சிவநாம தீட்சை அளித்தார். இக்குழந்தை பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர வைத்தபோதும், சிவமே பரம்பொருள் என்றது. இதனைச் சொல்லும் உருவம் இக்கோவிலில் உள்ளது.
3. செல்வந்தர் ஒருவர் படைத்து வழிபடும் உணவை தினமும் உண்பதாய்க் கனவில் அவர்க்குக் காட்டி வந்த ஈசன், ஒரு நாள் ஹரதத்தரிடம் ஏழை அந்தணராய்ச் சென்று அவர் தந்த கஞ்சியை உண்டு வயிறு நிரம்பியதாய் உணர்த்தினார்.
4. சிவத்தொண்டு புரிந்த சிவபக்தர் ஒருவர் வறியவராகிறார். ஆனாலும் சுரைக்காய் விற்றுத் தொண்டைத் தொடர்கிறார். ஒரே ஒரு காயை விதைக்காக விடுகிறார். அப்போது இறைவன் சிவனடியாராக வந்து, பசிக்கிறது என்கிறார். சுரைக்காய் விருந்துக்கு ஆகாது எனத் திகைக்க இறைவன், ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ எனச் சொல்லி அமுதுண்டு அருளினார்.
5. அந்தணர் ஒருவர் புல் கட்டைத் தவற விட, அது பட்டுப் பசுவின் கன்று இறந்துபட பெருங்குற்றம் புரிந்தாரென இனத்தார் அவரை ஒதுக்கினர். மனம் வருந்திய அவர் சிவ,சிவ எனச் சொல்லிக் கொண்டே வந்து ஹரதத்தரிடம் முறையிட்டார். ஹரதத்தர் சிவநாமம் சொன்னதால் அப்பாவம் நீங்கியது என்றார். ஆனால் அதனை எவரும் நம்பவில்லை. ஹரதத்தர் அந்தணரிடம் காவிரியில் நீராடி ஒரு கைப்புல்லைக் கோவிலில் உள்ள கல் நந்திக்குத் தரச் சொல்லி, அது அதனை உண்டால் பாவம் தீர்ந்தது என அறிவீர் என்றார். அந்த அந்தணரும் அவ்வாறே தர, அதுவும் உயிர் பெற்றுப் புல்லை உண்டு மறுபடியும் கல்லானது.
6. அறுபத்து மூன்று நாயன்மார்களில் மானக்கஞ்சாரர் அவதரித்த தலமிது.
7. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 36 வது ஆகும்.
8. கல்ப காலத்தில் பிரமதேவன் படைப்புத் தொழிலைத் தொடங்க வேண்டி யாகம் நடத்தினார்.காமதேனு தந்த நெய்யினை யானையின் துதிக்கை அளவு தாரையாக அதில் வார்த்தார்.அக்கினி தேவன் கர்வம் கொண்டு ஆகுதிகளை அதற்குரிய தேவர்களிடம் சேர்க்காது தானே உண்டான். அதனால் பாண்டுரோகம் என்னும் வெண்குட்டம் ஏற்பட்டது.வியாசரின் கூற்றுப்படி இங்கு வந்து கிழக்குத் திக்கில் தீர்த்தம் ஒன்று அமைத்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.
10. குருத்துரோகம் செய்து சாபம் பெற்ற சந்திரன் இங்கு வந்து வழிபட மேற்குத் திக்கில் ஒரு தீர்த்தம் அமைத்தான், அக்கினீசுவரர் அருள் பெற்றான்.
11. அக்கினி தேவனால் படைப்புத் தொழில் தடைபட்டதால் இங்கு வந்த பிரமன் பலகாலம் இறைவனை வழிபட்டு கற்பகாம்பாளுடன் இறைவன் திருமணக் கோலம் கண்டு மீண்டும் தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார்.
அமைவிடம்
கும்பகோணம் நகரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குச் செல்லக் கும்பகோணம், மயிலாடுதுறை நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.